முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

பணியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 அக்டோபர், 2009

உலமாக்கள்-பணியாளர் உறுப்பினர் சேர்க்கை: திருப்பூர் மாநகரில் கலந்தாய்வுக் கூட்டம்

உலமாக்கள்-பணியாளர் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நடைபெற்றது.

திருப்பூர் காங்கேயம் ரோடு அல்-அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஹெச்.எம். ஜபருல்லா பாகவி தலைமை தாங்கினார்.

திருப்பூர் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி வி.கே.எம். ஜகரிய்யா முன்னிலை வகித்தார்.

மௌலவி காரி அப்துன் நஸீர் பாகவி கிராஅத் ஓதினார்.

பெரிய பள்ளி இமாம் மௌலவி செய்யது அஹமது மிஸ்பாஹி வரவேற்புரையாற்றினார்.

டாக்டர் ஏ. அப்துன் நஸீர், ஐக்கிய ஜமாஅத் துணைத் தலைவர் ஹாஜி நஸீர் அஹமது ஆகியோர் உரையாற்றினர்.

உலமாக்கள் நல வாரிய பயன்பாட்டை அறியும் வழிமுறைகளை பற்றி வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் சிராஜுத்தீன், வக்ஃபு வாரிய ஆய்வாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர்.

திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி நாசிர் அலி சிராஜி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டார பகுதிகளிலிருந்து 68 பள்ளி வாசல்களின் இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள், அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலமாக்கள், பிலால்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை கோவை மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் என். சையது முஸ்தபா, திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஏ. முஹம்மது ரபி, ஹாஜி ஹபீப் ரஹ்மான், அப்துல் காதிர் ஜீலானி, ஜெய்னுல் ஆபிதின், அப்துல் சுக்கூர், எம்.ஒய். பக்கீர் முஹம்மது, பாபுஜி, ஹாஜி கலீலுர் ரஹ்மான் எம்.சி., உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஹம்ஸா, திருப்பூர் மாநகர தலைவர் கே. சிராஜுத்தீன், துணைத் தலைவர் ஹாஜி முத்து வாப்பா (எ) அப்துர் ரஹ்மான், இளம்பிறை ஜஹாங்கீர், பள்ளப்பட்டி யூனுஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலமாக்களுக்கு வாழ்த்துக்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

புதன், 30 செப்டம்பர், 2009

உலமா நலவாரியம் அமைத்த முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத்தினர் திரண்டுவர பேராசிரியர் வேண்டுகோள்!

வரும் அக்டோபர் 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவில், உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பும், முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கைக் குரிய உலமா பெருமக்களும், பள்ளிவாசல், மத்ரஸா, தர்கா பணியாளர்களும், மஹல்லா ஜமாஅத்தினரும் திரண்டுவர பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அழைப்பில் தெரிவித்துள்ளதாவது:

வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துல் சமது சாஹிபின் 84-வது பிறந்த தின விழா-சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவாகவும், உலமாக்கள்-பணியாளர்கள் நலவாரியம் அமைத்துத்தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது.

இந்த இனிய விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி விழா பேருரை நிகழ்த்திட உள்ளார்.

தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கமும்-மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) காலந்தொட்டு நம் உயரிய கலாச்சாரத் தன்மையை நிலை நாட்டுவதில் பெரும் பங்காற்றி வருவது கண்கூடாகும்.

அதன் அடிப்படையில் ஜனநாயக அரசியலில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பெறுவதில் நாம் கையாண்ட அணுகுமுறைகள் மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளன.

மேலும், சிறுபான்மையினர் நல ஆணையம், சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழக வக்ஃபு வாரியம், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவித்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நாம் எடுத்துரைத்த கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுத்து நம்பிக்கை தரும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

மேலும் மணிவிழா மாநில மாநாட்டில் நாம் வைத்த கோரிக்கைகளை ஏற்று முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ததும், உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்துத் தந்ததும் செயற்கூறிய செயல்களாகும்.

மேலும் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்திட மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை அழைத்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டினை நாம் நடத்தினோம். அதன் பலனாக அரசியல் கலப்படமற்ற-முழுக்க முழுக்க உலமாக்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட-அதிலும் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்துப் பெருமைபடுத்தியுள்ளது சிறப்புக்குரியதாகும்.

மேலும் சென்ற வாரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உலமாக்கள்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களை முறையாக சேர்க்கும் பணியை துணை முதல்வர் அவர்கள் விரைவு படுத்திட நடவடிக்கை எடுத்துள்ளது நினைவில் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நன்றி சொல்லும் முகமாகவும், மேலும் நம் உரிமைகளைப் பெற வேண்டியும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ள விழா அமைந்திட வேண்டும்.

இதற்காக இம்மாநாட்டில் சங்கைமிகு உலமாக்கள், பள்ளிவாசல் இமாம்கள், மதரஸா பேராசிரியர்கள், பள்ளிவாசல் தர்கா பணியாளர்கள், மஹல்லா ஜமாஅத்தினர் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கண்ணியத்திற்குரிய ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகளும், பள்ளிவாசல்-மதரஸா நிர்வாகிகளும், ஜமாஅத் தலைவர்களும், சங்கைமிகு உலமாக்களும் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து முழு ஒத்துழைப்பை தருவதோடு வரும் 2-ம் தேதி ஜும்ஆவின் போது இது பற்றிய அறிவிப்பையும் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2009-2010ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்காணும் அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம்.

இவ்வாறான நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள் என அரசு ஆணையிடுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்.

இவ்வாரியத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகக் கீழ்க்கண்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

  • அரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அரசு நலத்துறை செயலாளர்,
  • நிதித்துறை முதன்மைச் செயலாளர்,
  • வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர்,
  • சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்,
  • பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
  • உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,
  • தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்,
  • சிறுபான்மை நலன் ஆணையர்,
  • பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர்,
  • தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர்

ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்,

அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

  • தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,
  • மாநில பொதுச் செயலாளரும் மவ்லவீ அப்துல் காதர்,
  • மாநில பொருளாளர் மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா,
  • மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ,
  • திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத்துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹுத்தீன்,
  • வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ்,
  • மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்,
  • சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாமான மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ்,
  • மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் நாஜி,
  • குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்யூப்,
  • தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்,
  • தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ்,
  • தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அலி பேக்,
  • தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன்,
  • சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி

ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனைகளை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்குவதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்டவாறு ஆணையிடகிறது.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்த கொள்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்படும்:

விபத்து ஈட்டுறுதி திட்டம்

  • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை.
  • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை.
  • இயற்கை மரணத்திற்குள்ளானவர் குடும்பத்திற்கு உதவித் தொகை ரூ. 15 ஆயிரம்.

கல்வி உதவித் தொகை

  • 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய்,
  • 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
  • 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ. 1,500,
  • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ. 1,500,
  • முறையான பட்டப் படிப்புக்கு ரூ. 1,500,
  • மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ. 1,750,
  • முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 2 ஆயிரம்,
  • மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.
  • தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2 ஆயிரம்,
  • மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டப்படிப்புக்கு ரூ. 4 ஆயிரம்,
  • தொழிற் கல்வி மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
  • மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம்,
  • ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000,
  • மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200,

திருமண உதவித் தொகை ரூ.2 ஆயிரம்.

மருத்துவ உதவித் தொகை

  • மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய்,
  • கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000,
  • மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.400.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகிறார்.

18 வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவராவார்.

தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந் நலவாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது.

உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களைத் தொகுத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள் / வக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் வாங்குவார்.

நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப்பினர்களுக்கு நல உதவிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப்படும்.

வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப படிவம், வாரியத்தின் விதிமுறைகள், வாரியத்தின் இதர செயல்பாடுகள் முதலிய அனைத்திற்கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து வழங்கப்படும்.

மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

அரசு / அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது.

வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையினை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அரசுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

புதியதாகத் தோற்றுவிக்கப்படும் இந்நலவாரியத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படி / பயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.

மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணிகளை மேற்கொள்வதற்காகவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல்: தமிழ்நாடு மாநில இ.யூ. முஸ்லிம் லீக்

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி