முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 30 ஏப்ரல், 2009

முஸ்லிம்களுக்கெதிரான பொருளாதார சவால்கள்

இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இந்த முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். (முஃப்தி தகி உஸ்மானீ - உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை)
19 ஆம் நூற்றாண்டானது அரசியல் அடக்குமுறை ஆண்டாக, இந்த நூற்றாண்டில் பலமிக்க மேற்குலக நாடுகள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளையும், இன்னும் பல முஸ்லிம் நாடுகளையும் அடக்கி தங்களது அடிமை நாடுகளாக பிரகடனப்படுத்திக் கொண்ட நூற்றாண்டாக இருந்தது. கடந்த 20 ம் நூற்றாண்டு முடிந்து விட்டாலும், அந்த நூற்றாண்டில் பல நாடுகள் தொடர்ச்சியாக அவற்றின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டன. இருப்பினும், இந்த நாடுகளுடன் முஸ்லிம் நாடுகளும் விடுதலை அடைந்தாலும் அந்த விடுதலையின் மூலம் அரசியல் சுநத்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும், இன்னும் நாம் கருத்துச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவற்றில் நாம் சாதிக்க வேண்டியதிருக்கின்றது, சொல்லப் போனால் நாம் அவற்றை இன்னும் அடைந்து கொள்ளவில்லை. எனவே, பெற்று விட்ட அந்த அரசியல் சுதந்திரத்தை இன்றைக்கும் இந்த முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்க இயலாமல் இருந்து வருகின்றது.
இன்றைக்கு முஸ்லிம் உலகு புதிய நூற்றாண்டை புதிய பல எதிர்பார்ப்புக்களுடன் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றி வாழத் துடித்துக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நேரத்தை அது எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நோக்கங்களை கனவுகளின் ஊடாக நாம் அடைந்து விட முடியாது. நமது நோக்கங்களை அடைய வேண்டுமானால், அதற்கான கடின உழைப்புத் தேவை, அந்த உழைப்பானது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் கொடுத்த விலையை விட அதிகமாகக் கொடுக்க வேண்டியதிருக்கின்றது. நம்முடைய முழுத் திட்டங்களையும் நாம் மீள் பரிசோதனை செய்தாக வேண்டும், முழுமையான திட்டங்களுடன், கூட்டாக இணைந்து, அதனை புரட்சி மனப்பான்மையுடன் அணுகி, நமது நோக்கங்களை சாதிக்கப் புறப்பட வேண்டும். இங்கே, நாம் செய்யக் கூடிய பணிகள் குறித்து, இருவித தலைப்புகளில் உங்களுடன் உரையாட விரும்புகின்றேன்.
நமக்கு நாமே உதவி
நமது பொருளாதார திட்டங்களை மறுகட்டமைப்புச் செய்வது
நமக்கு நாமே உதவி
நம்முடைய பிரச்னையின் வேர்கள் எங்கிருக்கின்றது என்றால், நாம் நம்முடைய பொருளாதாரத் திட்டங்களுக்குப் பிறரை நம்பி இருப்பதில் இருந்து கொண்டிருக்கின்றது. நம்மில் பலர் மேற்கத்திய நாடுகளிடம் அதிகமான அளவில் கடன்களைப் பெற்றிருக்கின்றோம். இன்னும் சில நாடுகள், தமது உள்கட்டமைப்பு வளர்ச்சி மட்டுமல்ல, அன்றாடச் செலவினங்களுக்குக் கூட மேற்கத்திய நாடுகளைச் சார்ந்து இருந்து கொண்டிருக்கின்ற நிலை தான் நம்மிடம் காணப்படுகின்றது. இங்கே மிகவும் வருத்தத் தக்க செய்தி என்னவென்றால், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு உண்டான வட்டி செலுத்தப்படாமல், அந்த வட்டியுடன் முதலும் வளர்ந்து கொண்டிருக்க, மேலும் மேலும் கடனை வாங்கிக் குவித்து, அதனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையைத் தான் காணுகிறோம்.
நம்முடைய பொருளாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாடுகளை எதிர்ப்பார்ப்பதே ஒரு வியாதியாகும், அது நம்முடைய பொருளாதாரத்தைச் சூறையாடுவது மட்டுமின்றி, அது நம்முடைய சுயாதிக்கத்தையும் இன்னும் நம்முடைய தேவைகளைக் கூட அவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகும் நிலைக்கும் நாம் தள்ளப்படுகின்றோம், சில நேரங்களில் நம்முடைய சுயலாபங்களுக்காக அந்த விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கின்றது. இந்த கடனளிப்பவர்கள், கடனை நமக்குக் கொடுப்பதற்கு முன்பே நம் மீது அவர்களது சொந்த விதிமுறைகளை நம்மீது திணிப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. இந்த விதிமுறைகள் தொடர்ச்சியாக நம்மை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விடுகின்றது, மேலும் நம்முடைய சுயதேவைகளைக் கூட விட்டுக் கொடுத்து, அவர்கள் இடும் கட்டளைகளுக்குப் பணிந்து போகும் நிலைதான் அங்கு உருவாகின்றது. கடனுக்காக அந்நிய நாடுகளைச் சார்ந்திருப்பதன் காரணமாக, எழக் கூடிய தீமைகளை நான் பெரிதாகப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லாத ஒன்று.
அதிகபட்ச தேவைகளின்றி, கடன் வாங்குவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை, கடனில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு முஸ்லிம்களை அறிவுறுத்துகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை, கடன் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத ஒருவரது ஜனாஸாவுக்கு தொழுவிக்க மறுத்து விட்ட நிகழ்வு நமக்கு, சிறந்ததொரு பாடமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இன்னும், முஸ்லிம் ஆட்சியாளர் ஒருவர், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளரிடமிருந்து பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாமா? என்பது பற்றி அறிஞர் பெருமக்கள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள். அதற்கான பதில் : அவ்வாறு பெறக் கூடிய பரிசுப் பொருட்களின் மூலம், முஸ்லிம் சமுதாயத்தின் மீது எந்த வித நிர்ப்பந்தத்தையும் திணக்கும் நோக்கம் இருக்கக் கூடாது.
அந்நியர்களிடம் கடன் பெற்றுக் கொள்வதை, இஸ்லாமிய சட்ட வழிமுறைகள் தடை செய்கின்றன, அவ்வாறு கடன் பெற்றுத் தான் வாழ முடியும் என்ற கஷ்டமான நிலை இருந்த போதிலும், அதனைத் தவிர்ந்து வாழவே முயற்சிக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நாம் பட்டிருக்கக் கூடிய கடனானது, நம்மிடம் வளங்கள் இல்லை என்பதனால் விழைந்ததல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் என்றுமே வளங்கள் இல்லாமல் இருந்ததில்லை. அவர்களிடம் இயற்கையின் வளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இன்னும் இந்த பூமிப் பந்தின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் மீது நாம் வீற்றிருக்கின்றோம். இடையே இந்தியாவையும், இஸ்ரேலையும் தவிர்த்து, இந்தோனேஷியா முதல் மொராக்கோ வரை நம்முடைய தேசம் விரிந்திருக்கின்றது. உலகின் எண்ணெய்த் தேவையில் 50 சதவீதத்தை நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம். உலகின் கச்சாப் பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒன்றை நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றொம். இன்னும் சொல்லப் போனால், மேற்குலகில் முதலீடு செய்திருக்கின்ற தொகையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாம் பட்டிருக்கின்ற கடன்களை அடைத்து விடலாம்.
சமீபத்திய இஸ்லாமிய வளர்ச்சி வங்கி (ஐனுடீ-ஐளடயஅiஉ னுநஎநடழிஅநவெ டீயமெ) யின் அறிக்கையின்படி, கடந்த 1996 ல் உறுப்பினர்கள் பெற்றுள்ள கடன் தொகையானது 618.8 பில்லியன் டாலர்களாகும். இதே நேரத்தில், மேற்கண்ட தொகையை விட அதிகமான இருப்பை, இஸ்லாமிய உலகானது மேற்குலகில் சொத்துக்களாக வைத்திருக்கின்றது. இந்த புள்ளி விபரமானது, மிகச் சரியானது என்று சொல்ல இயலாது. ஏனெனில், சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அதனை வெளியிட மாட்டார்கள் என்பதனாலாகும். இருப்பினும், பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின்படி, 800 லிருந்து 1000 பில்லியன் டாலர்கள் மதிப்பளவுக்கு மேற்குலகில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த வளைகுடா யுத்தத்திற்குப் பின்பு, இதில் 250 பில்லியன் டாலர் அளவுக்கு, அரபுக்கள் மேற்குலகிலிருந்து எடுத்து தங்களது சொந்த நாடுகளுக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். நடப்பது என்னவென்றால், நாம் முதலீடு செய்திருக்கின்ற தொகையை நாமே, அதிக வட்டி கொடுத்து கடனாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.
மேலே நாம் காட்டிய புள்ளி விபரங்கள் அதிகப்படியானதாக இருந்தாலும் கூட, நம்முடைய வளங்களை நாமே முறையாகப் பேணிக் கொள்வதன் மூலம், இந்த முஸ்லிம் சமுதாயம் பிறரிடம் கையேந்தாத நிலைக்குக் கொண்டு வர முடியும், இன்றைக்கு இந்த முஸ்லிம் உம்மத் 600 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்காது என்பதே உண்மையாகும். நம்மீது இருக்கின்ற இந்த அந்நியக் கடன் சுமையானது, யாரும் நம் மீது சுமத்தியதல்ல, மாறாக, நாமே தேடிக் கொண்டது. நம்முடைய வளங்கள் நம்மை விட்டு ஏன் சென்று விட்டன என்பதைப் பற்றி நாம் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. இந்தக் காரணிகளைக் களைவதற்கு நாம் என்றுமே முயற்சி எடுத்ததுமில்லை, சுய சார்புக்கான நம்பிக்கையை நம் மக்களிடம் ஏற்படுத்தியதுமில்லை. மோசடியான மற்றும் அடக்குமுறை மிக்க வரிவிதிப்புகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை. முதலீடுகளின் மீது அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த முயன்றதில்லை. இன்னும் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையையும் நாம் பேணிக் கொள்ளவில்லை. நம்முடைய வளங்களை எவ்வாறு லாபமான ரீதியில் பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி நாம் கவலைப்பட்டதுமில்லை, இவை அனைத்தையும் விட இஸ்லாமிய அடிப்படையிலான ஒற்றுமையை நம்மிடையே விதைப்பதற்கு நாம் தவறி விட்டோம், இன்னும் சுகாதாரமிக்க எழுச்சி மிக்க இஸ்லாமிய உம்மத்தை அதன் மூலம் கட்டமைக்கத் தவறி விட்டோம்.
நம்முன் இருக்கின்ற இந்த சவால்களைச் சந்தித்து, நமது பின்னடைவுகளைச் சரி செய்வதற்கு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தினை அதிகபட்ச செலவினங்கள் மூலம் கொண்டாடுவதன் மூலம் சீர் செய்ய முடியாது. இந்த சவால்களை நாம் மிகவும் தீவிரமானதொன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பொருளாதார மற்றும் அரசியல் தலைமைகள், அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நம்மை விடுவித்து, சுயசார்புள்ளவர்களாக எவ்வாறு மாற்றம் பெறுவது என்பது பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். இதற்கு அடிப்படையான வளங்கள் நம்மிடைய இருக்கின்றன. இப்பொழுது நம்முடைய தேவை என்னவென்றால், இந்த உம்மத்தின் வளங்களை ஒருங்கிணைத்து, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான புதிய யுக்திகள் தேவைப்படுகின்றன, இன்னும் நமக்கிடைய சகோதரத்துவமும் வளம் பெற வேண்டியதிருக்கின்றது, இன்னும் பரஸ்பர புரிந்துணர்வுகள் மற்றும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்றது.
திருமறை கூறுகின்றது :
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே..!
இன்றைய முஸ்லிம் உம்மத் ஓருடலாகச் செயல்படுவதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை, இந்த உம்மத் உயிர்காப்பு மருந்தைப் போல தங்களுடைய சிந்தனையில் ஏற்றிக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் எழுந்திருக்கின்றது. புவியியல் எல்லைக் கோடுகள் - அவர்களைப் பல்வேறு நாட்டவர்களாகவும், எல்லைப் பிரச்னையில் மூழ்கிக் கொண்டுள்ளவர்களாகவும் பிரித்துப் போடக் கூடாது. நாட்டின் எல்லைக் கோடுகள் யாவும் உள்நாட்டு விவகாரங்களையும், நிர்வாகச் செயல்பாடுகளுக்காகவுமே இருக்க வேண்டும். இவை அனைத்தையும் விட, அனைத்து முஸ்லிம் நாடுகளும் நம்மிடையே நிலவுகின்ற பொதுப் பிரச்னைகளுக்காக, நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் காப்பது நம்முடைய கடமை என்ற பொது நல அடிப்படையில் ஒன்றுபட வேண்டும், அதனைப் போல உலக ரீதியாக சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பொதுநல அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.
நம்மை விட்டுச் சென்று விட்;ட காலங்களில், தொழில் கண்டுபிடிப்புகள் எவ்வாறு தனிநபர் ஆதிக்கமாக மேற்குலகில் காணப்பட்டன என்பதை அறிவோம். இப்பொழுது, இன்றைய உம்மத் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தொழிற் பிற்போக்குத் தனத்தை சரி செய்வதற்கு, அவற்றை சீர்படுத்தக் கூடிய திறமையான முஸ்லிம்கள் தேவைப்படுகின்றார்கள். அந்த திறமைகள் நமக்கு எதற்குத் தேவைப்படுகின்றதென்றால், நம்முடைய உம்மத்திற்கு சேவை செய்வதற்காகவும், அதனூடாக இஸ்லாமியப் பிரச்சாரம் மேலோங்குவதற்காகவும் தான்.
அந்த சேவையின் மீது அழைப்புப் பணியின் அடையாளம் இருக்க வேண்டியது அவசியம் என்பதுமாகும். இதற்கான முழு ஒத்துழைப்பும் நமது தலைவர்களிடம் இருந்து வர வேண்டும். இதுவே அந்தத் தலைமைகள் சந்திக்கவிருக்கக் கூடிய மிகப் பெரிய சவாலாகவும் இருக்கும். இதனை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும், அது இந்த உம்மத்திற்காக மட்டுமல்ல, அவர்களது அரசியல் வாழ்வும் கூட இதில் அடங்கி இருக்கின்றது. இதில் நீங்கள் அதிகக் கவனமும், பொறுப்பும் எடுத்துச் செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றீர்கள், (ழுஐஊ) ஓஐசி என்ற இந்த இயக்கத்தின் தோள்களின் மீதும் இந்தச் சுமை இருக்கின்றது, இதற்கான ஆரம்பத்தை நாம் தொடங்க வேண்டும், முஸ்லிம்களின் திறமைகளை ஒன்றிணைத்து, அதற்குப் புதிய செயல்வடிவம் கொடுத்து, அதனை நம்முடைய உம்மத்திற்காக ஒன்றிணைந்து நாம் வழங்க வேண்டும்.
நமது பொருளாதார திட்டங்களை மறுகட்டமைப்புச் செய்வது
20 ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸம் கோலோச்சியது, கம்யூனிஸத்தின் எழுச்சியின் காரணமாக, கம்யூனிஸத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே போர் மூண்டது, இதில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது. கம்யூனிஸத்தின் வீழ்ச்சியை அவர்களது பரிசோதனையில் வெற்றி பெற்றதனைப் போல அதனைக் கொண்டாடினார்கள், அது மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வெற்றி பெற்றதாக முதலாளித்துவ வாதிகள் அதனைக் கொண்டாடினார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது அதிருப்தி கொண்டவர்கள், அதன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக உருவாக்கியது தான் கம்யூனிஸம், குறிப்பாக, வளங்களைப் பங்கிடுவதில் காட்டப்பட்ட பாகுபாட்டின் காரணமாக, இந்தப் பாகுபாடு நூற்றாண்டு நெடுகிலும் இந்த முதலாளித்துவத்தில் ஊறி வந்திருப்பதும், கம்யூனிஸத் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
கம்யூனிஸம் இப்பொழுது வீழ்ந்து விட்டதன் காரணமாக, முதலாளித்துவத்தினிடம் உள்ள கேடுகள் யாவும் நியாயமானவைகளாக ஏற்றுக் கொள்ள இயலாது. அதனைவிட, முதலாளித்துவத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட இன்னுமொரு கொள்கையான கம்யூனிஸத்திடம் உள்ள குறைபாடுகளே காரணமாகும் என்றே கருத வேண்டும். இன்றைக்கு முதலாளித்துவம் வளங்களைப் பங்கிடுவதில் காட்டுகின்ற பாகுபாடுகள், அதனுடைய பொருளாதாரத்தில் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது, வறுமை என்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. இந்த வறுமை என்பது முதலாளித்துவம் தோற்றுவித்த பிரச்னைகளில் தலையாயது, இதனை அவர்கள் தீர்க்கவில்லையென்றால், கம்யூனிஸத்தை விட இன்னொரு வேகமான கொள்கை ஒன்று, இதனை எதிர்த்து பிறப்பெடுக்கலாம்.
இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இந்த முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். இன்றைய உலகு சந்தித்துக் கொண்டிருக்கின்ற மிகப் பெரும் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைவதற்கு, திருமறைக் குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட திட்டங்களினால் முடியும். அதில் தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் (ஆழnழிழடல), சந்தைப் பொருளாதாரம், இன்னும் வளங்களைப் பங்கிடுவதில் நீதமாக நடந்து கொள்வதற்கான சட்ட திட்டங்கள், இவை அனைத்திலும் பாரபட்சப் போக்கைக் களைந்து, அனைவரும் சமூக நலன் கருதி லாப நோக்கோடு தொழில் முனைப்புக் காட்டும் திட்டத்தை கொண்டு வர முடியும்.
கம்யூனிஸத்தின் எழுச்சி எவ்வாறு உருவானதெனில், முதலாளித்துவத்தில் காணப்பட்ட பாரபட்சப் போக்கின் உத்வேகத்தினால் எழுந்தது, அதன் காரணமாகவே தனியார் ஆதிக்கம் (ஆழnழிழடல), சந்தைப் பொருளாதார சக்திகள் ஆகியவை மறுக்கப்பட்டு, கம்யூனிஸப் பொருளாதாரம் என்ற அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற இயற்கைக்கு முரணான பொருளாதாரத் திட்டம் உருவானது, இந்தத் திட்டம் செயற்கையாகவே செயல்பட்டது, அடக்குமுறையாகவும் இருந்தது. தனிப்பட்டவர்களின் சுதந்திரம் பறிபோன போது, உற்பத்திக் குறைவை ஏற்படுத்தியது, அரசின் மிதமிஞ்சிய அதிகாரமானது அதிகாரமிக்கவர்களின் கையில் ஆடும் பொம்மைகளைப் போல மக்களின் நிலையை உருவாக்கி விட்டது.
முதலாளித்துவத்தின் பாரபட்சப் போக்கிற்கான அடிப்படைத் தவறுகளாக தனியார் ஆதிக்கம் (ஆழnழிழடல) மற்றும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவை மட்டும் காரணமல்ல. அங்கே காணப்படுகின்ற பாரபட்சத்திற்குக் காரணம் என்னவெனில், நீதமான அல்லது அநீதமான சம்பாத்தியம் ஆகியவற்றுக்கு இடையேயான வரைவிலக்கணம் என்ன என்பதும், அதுவே அந்த பாரபட்சப் போக்கிற்கு அடிப்படையுமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதினாலாகும்.
இதில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற வட்டி, சூது, நிச்சமற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயனீட்டாளர்களின் அநீதமான ஆசையை உருவாக்குவதன் மூலம் அதிக லாபம் ஈட்டுதல் ஆகியவை அனுமதிக்கப்படுதல், இவை யாவும் சுய ஆதிக்கத்திற்கு வழிவகை செய்கின்றன, இன்னும் தேவையின் பொழுதும் இன்னும் உற்பத்தியை வழங்கும் பொழுதும் அவற்றின் இயக்கங்களை செயலிழக்கச் செய்து விடுகின்றது. அவற்றின் இயற்கையான நடவடிக்கைகளில் தலையிட்டு, அவற்றின் இயக்கங்களை தடுத்து நிறுத்துவதோடு, சுயஆதிக்கம் (ஆழnழிழடல) காரணமாக, லாபம் ஒன்றே பிரதானம் என்ற போதையை உருவாக்கி விடுகின்றது.
இன்னும் வட்டியானது, பணக்கார தொழில் அதிபர்களுக்கும் மிகவும் வசதியானதொன்றாக இருக்கின்றது. இவர்கள் பொதுமக்கள் வங்கிகளில் இட்டு வைக்கும் சேமிப்பில் இருந்து கிடைக்கக் கூடிய வருமானங்களை தங்களது வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். வங்கிகளில் இட்டு வைக்கும் தொகைகளின் மூலமாக மிகப் பெரும் லாபம் சம்பாதிக்கும் அதேவேளையில், அந்த லாபத்திலிருந்து ஒரு சிறு தொகையை ஏற்கனவே நிர்ணயித்திருக்கும் அளவில் வட்டியாக, முதலீட்டாளர்களுக்கு லாபமாக வழங்குகின்றார்கள். இன்னும் அந்த வட்டியின் மூலம் கிடைத்த அந்த சிறு வருவாயையும், உற்பத்திச் செலவினமாக அவர்களிடமிருந்தே மீண்டும் பெற்றுக் கொண்டு விடுகின்றார்கள். இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், பொது மக்கள் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் தொகைகளை, இந்தப் பணக்காரர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு எடுத்துப் பயன்படுத்தி, அதன் மூலம் கொழுத்த லாபம் அடைந்து கொள்கின்ற அதேவேளையில், பணத்தை வங்கிகளில் வைத்திருப்பவர்களுக்கு எதனையும் லாபமாகக் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். அவர்கள் வட்டியாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்கின்ற லாபமானது, உற்பத்திச் செலவினமாக மீண்டும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுவதனால், முதலீட்டாளர் வெறுங்கையுடன் விடப்படும் அதேவேளை, முதலாளி கொழுத்த லாபத்திற்கு சொந்தக்காரராக மாறி விடுகின்றார். இதுவும் ஒரு சூதாட்டம் போன்றதே, பல நபர்களின் வளங்கள், சில நபர்களின் கைகளுக்கு மாறி விடுகின்றது, உழைக்காமல் வருகின்ற லாபத்திற்காக மனிதனிடம் அழிவிற்கான சிந்தைனை ஓட்டத்தைத் தூண்டுவதற்குக் காரணமாகின்றது. நிச்சயமற்ற வரவு செலவுகள், இயற்கையான சந்தைப் பொருளாதார இயக்கத்தில் தடங்களை ஏற்படுத்துகின்றன மற்றும் வளங்களைப் பங்கிடுவதில் பாரபட்சப் போக்கை உருவாக்குகின்றன.
இஸ்லாம் சந்தைப் பொருளாதாரத்தை வளர மட்டும் விட்டிருக்காது, இன்னும் அவற்றின் இயற்கைத் தன்மையோடு அதனை வளர விட்டிக்கும், ஏகாதிபத்திய (ஆழnழிழடநைள) போக்கை அது சாகடித்திருக்கும். இரண்டு விதமான பொருளாதார நடவடிக்கைகளை அது வளர அனுமதித்திருக்கும்.
முதலாவதாக,
வருமானங்கள் இறைவனின் கட்டளைகளின்படி பெறப்படக் கூடிய வழிமுறைகளை அது காட்டியிருக்கும். அது ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) மற்றும் ஹராம் (தடைசெய்யப்பட்டவை) என்ற இரண்டு வரையறைக்குள் கொண்டு வரப் பட்டிருக்கும். இந்த இரண்டு அடிப்படைகளும், ஏகபோக உரிமையையும், பாரபட்சப் போக்கையும், அநீதத்தையும், முறையற்ற வருமானத்தையும் மற்றும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டிருக்கும்.
இன்றைக்கு இருக்கின்ற நவீன பொருளாதார யுகத்தில், பொதுமக்களின் சேமிப்புகளை வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதோடு, அதனை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த முஷாராக மற்றும் முதாராபா ஆகியவற்றின் துணையோடு, வட்டிக்குப் பதிலாக, வளர்ச்சியினால் விளைந்த நன்மைகளை பொது மக்களே நேரடியாக அனுபவிக்கும் நிலையை உருவாக்குவதோடு, இதன் காரணமாக எழுகின்ற மறுமலர்ச்சியானது பணக்காரார்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைப்பதற்கும் வழி செய்யக் கூடிய நிலையை உருவாக்கும்.
இரண்டாவதாக,
இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான ஸக்காத் (ஏழைவரி) மற்றும் ஸதகாத் (விருப்பத்தின் அடிப்படையில் தர்மம்) ஆகியவற்றைக் கொண்டு பெறப்பட்ட ஹலாலான நிதிகளை, சந்தைப் பொருளாதாரத்தில் பங்கு பெற்ற இயலாதவர்களுக்கும், சம்பாதிக்க வழியற்றவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வழி ஏற்படுத்துகின்றது.
மேற்கண்ட இரண்டு முறைகளின் மூலமாக, பொருளாதாரமானது எல்லோருக்குமிடையிலும் சுற்றி வரச் செய்யப்படுகின்றது. ஒருவரிடம் மட்டும் குவிந்து கொண்டிருக்கின்ற நிலை மாற்றப்படுவதோ, அதற்கான சந்தர்பத்தின் வாசல்களும் கூட அடைக்கப்பட்டு விடுகின்றன.
மேற்கண்ட அனைத்து இஸ்லாமிய திட்டங்களும் எழுத்துருவில் தான் நம்மிடையே இருந்து கொண்டிருக்கின்றதே ஒழிய, நடைமுறை வாழ்வில் அவை நடைமுறைப்படுத்தப்படவே இல்லை, அதற்கான மாதிரி வாழ்க்கையை இந்த உலகத்திற்கு முஸ்லிம்கள் எடுத்துக் காட்டவே இல்லை. ஏன் முஸ்லிம் நாடுகள் கூட தங்களது பொருளாதார வளங்களை, இஸ்லாமிய அடிப்படையில் கட்டமைப்பதற்கு முயற்சிகளை எடுக்கவில்லை. நம்மில் பலர் இன்னும் இந்த முதலாளித்துவம் ஏற்படுத்தித் தந்த சட்ட திட்டங்களின் அடிப்படையைத் தான் பேணிக் கொண்டிருக்கின்றோம், இந்த அரைவேக்காட்டுத் தனமான திட்டத்தைப் பின்பற்றியதன் காரணமாக, முதலாளித்துவ நாடுகளில் விளைந்த பொருளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தியது தான் மிச்சமாகும். துரதிருஷ்டவசமாக, இஸ்லாமிய சட்ட திட்டங்களை நாம் பேணிக் கொள்ளாததன் காரணமாக, பாரபட்சப் போக்குகள் மற்ற மேற்கத்திய நாடுகளை விட நம்மிடம் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.
இத்தகைய இழிநிலையைத் தொடர அனுமதிக்கக் கூடாது. நம்முடைய வழிமுறைகளை நாம் தேடி அவற்றைப் அமுல்படுத்தாதிருந்தால், இயற்கையாகவே புரட்சிக்கான திட்டங்கள் உருவாகி, அது தனது பாதையைத் தானே தேடிக் கொண்டு விடும். அந்த புரட்சியின் காரணமாக எழக் கூடிய விளைவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பொருளாதார அடிப்படைகள் மீளாய்வு செய்யப் பட வேண்டும், அவற்றை திருமறைக் குர்ஆனின் அடிப்படையையும், சுன்னாவின் அடிப்படையைக் கொண்டும் கட்டமைக்க வேண்டும். நம்முடைய வெற்றியானது எதில் இருக்கின்றது என்றால், இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன், அவற்றின் வழிகாட்டுதலுடன் கூடிய முன்மாதிரிமிக்க பொருளாதாரத் திட்டத்தை இந்த நூற்றாண்டில் வழங்குவதன் மூலம், மனித சமுதாயத்திற்கு இந்த நூற்றாண்டில் இஸ்லாம் வழங்கிய மிகப் பெரிய பரிசாகவும் அளிப்பதில் தான் இருக்கின்றது. இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன் கூடிய பொருளாதாரத்தை நாம் மிகச் சரியானபடி வழங்கினோம் என்றால், கடந்த காலத்தில் நம்முடன் உலகு ஏற்படுத்திக் கொண்ட உறவை விட, மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையை நாம் காண்போம்.

முதலாளித்துவம் பற்றி முஹம்மத் குதுப்
வட்டியும், ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.
எனினும் இப்பிரச்னையைச் சிறிது ஆழமாக ஆராய்வோம். இயந்திரம் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியினை இஸ்லாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்கும்? வேலையையும் உற்பத்தியையம் இஸ்லாமிய சட்ட வாக்கங்களும் சட்டங்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தியிருக்கும்?
தொடக்கத்தில் முதலாளித்துவம் மனித சமுதாயத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியது என்பதில், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களிடையே – கார்ல் மார்க்ஸ் உட்பட – கருத்தொற்றுமை இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகையினால் உற்பத்தி பெருகிற்று. போக்குவரத்து தொடர்புகள் விருத்தியடைந்தன. தொழிலாள வர்க்கத்தினர் அநேகமான அல்லது முற்றாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த காலத்தை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
ஆனால் இந்தப் பெருமைமிக்க காட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் இயற்கையான வளர்ச்சி முதலாளிகளின் கைகளில் செல்வம் குவியவும், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் படிப்படியாக குறையவும் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டுகளின் நோக்கில் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களை பல்வேறு பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலாளிகள் உபயோகிக்க இயலுமாயிற்று. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலிகள் சீரான வாழ்க்கை நடாத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை. எல்லா லாபத்தையும் முதலாளிகளே சுரண்டிக் கொண்டு தம் ஊழல் மிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு அதனைச் செலவிட்டதே இதற்குக் காரணமாகும்.
அதுவுமன்றி, தொழிலாளர்களுக்குக் கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் அவர்கள் வாங்கி நுகரவும் இயலவில்லை. இதனால் மேலதிகமாக உற்பத்தியான பொருட்கள் சேர்ந்து குவியத் தொடங்கின. எனவே முதலாளித்துவ நாடுகள் தம் மேலதிக உற்பத்திப் பொருட்களை விற்பதற்குப் புதிய சந்தைகளைத் தேடின. இது, குடியேற்ற நாடுகள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. இதனால் பல்வேறு நாடுகளிடையே சந்தைகள் சம்பந்தமாகவும் மூலம் பொருள் வளங்கள் சம்பந்தமாகவும் இடையறாத சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. இவை அனைத்தினதும் விளைவு பேரழிவை ஏற்படுத்திய யுத்தங்களாகும்.
மேலும், குறைந்த கூலிகள் காரணமாகவும், அதிகரித்து வரும் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை நுகர்வு சொற்பமாகவும் இருப்பதனாலும் பொருளாதார தளர்ச்சி ஏற்படுவதனால் முதலாளித்துவ முறையானது அடிக்கடி நெருக்கடி நிலையை எதிர்நோக்குகிறது.
முதலாளித்துவ முறையின் குறைகள் அனைத்துக்கும் காரணம் முதலின் தன்மையாகும் என்றும் முதலாளிகளின் தீய எண்ணமோ அல்லது சுரண்டல் புத்தியோ அல்லவென்றும் உலகாதாய வாதிகள் கூறுகின்றனர். இத்தகைய அப்பாவித்தனமான, விசித்திர சிந்தனையின் பொருள், பல விதமான உணர்ச்சிகளையும் சிந்தனா சக்தியையும் கொண்ட மனிதன், பொருளாதார பலத்தின் எதிரில் கையாலாகாத – எதுவும் செய்யச் சக்தியற்ற – ஒரு படைப்பாளன் என்பதாகும்.
முதலாளித்துவம் முன்பு தேசியக் கடன்களிலேயே தங்கி இருந்தது. பின்பு இது வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தது. வங்கிகள், வட்டியைப் பிரதிபலனாகக் கொண்டு நிதி அலுவல்களை நடத்தியதோடு கடன்களையும் வழங்கின. இக்கடன்களும் வங்கிகள் ஈடுபடும் பெரும்பாலான வேறு பல அலுவல்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை.
ஒருபுறம், முதலாளித்துவத்தின் மற்றொரு அம்சமான கடும் போட்டி சிறு கம்பெனிகளை ஒழித்து விடுகிறது. அல்லது அவற்றை ஒரு பெரிய கம்பெனியாக இணைத்து விடுகிறது. இது ஏகபோக உரிமைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.
இஸ்லாம் ஏக போக உரிமைக்கும் தடை விதித்துள்ளது. 'ஏக போக உரிமையை ஏற்படுத்திக் கொள்பவர் தவறு செய்தவராவார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இஸ்லாம் வட்டியையும், ஏக போக உரிமையையும் தடை செய்து விட்டதனால், சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் யுத்தத்தையும் கொண்ட இன்றைய தீய நிலைக்கு முதலாளித்துவம் வளர்வது சாத்தியமாகியிராது.
செல்வம் தனிநபர்களிடம் குவிவதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு குவிவதற்கு அடிப்படையாக இருக்கின்ற வட்டியை முற்று முழுதாக இஸ்லாம் தடையும் செய்திருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் சரிசமமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதில் பாரபட்சப் போக்கை இஸ்லாம் தடை செய்கின்றது. வயது மற்றும் சுகவீனம் காரணமாக உழைக்க இயலாதவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசினைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்னும் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு உண்டான செலவினங்களை, பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அரசின் நிதியகத்தின் பணிகளே என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
மக்களின் உரிமைகளை சரிசமமாகப் பேணுவதும் மட்டுமல்ல, அரசின் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் குடிமக்களுக்கு உண்டு என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கான உத்ரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது.
தற்கால 'நாகரீக' மேல்நாடுகளில் காணப்படுவது போன்ற அரக்கத்தனமான நிலைக்கு முதலாளித்துவத்தை இஸ்லாம் வளர விட்டிருக்காது. தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் போக்கையும் அது வளர விட்டிருக்காது. குடியேற்றம், யுத்தம், மக்களை அடிமைப்படுத்துதல் என்பன உட்பட முதலாளித்துவத்தின் எல்லாத் தீமைகளையும் இஸ்லாம் தடுத்திருக்கும்.
வழக்கம் போல இஸ்லாம், பொருளாதார விதிகளையும் சட்டங்களையும் ஆக்குவதோடு திருப்தியடைந்து விடுவதில்லை. அது சட்டங்களுடன், தார்மீக, ஆன்மீகத் தூண்டுகோள்களையும் பயன்படுத்துகின்றது. ஆன்மீக, தார்மீகப் பண்புகளுக்கு ஐரோப்பாவில் செயல் ரீதியான பயனில்லை என்று காண்பதனால் கம்யூனிஸ்டுகள் அதனை ஏளனஞ் செய்கின்றார்கள்.
ஆனால் இஸ்லாத்தில் தார்மீக, ஆன்மீகப் பண்புகள் மனிதனின் செயல்களுடன் தொடர்புபடுத்தியே நோக்கப்படுகின்றன. இஸ்லாம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலையும், சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதையும் முரண்பாடற்ற வித்தில் ஒன்றிணைப்பதற்கு நிகரற்றதொரு வழியாகக் கையாள்கிறது.
ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவதன் தவிர்க்க முடியாத விளைவுகளான எல்லா வகை ஆடம்பர வாழ்க்கையையும் புலனின்பங்களையும் இஸ்லாம் தடுத்து விடுகிறது. ஊழியர்களுக்கு அநீதமிழைப்பதையும் தடுத்து விடுகின்றது.
செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றது. செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை தங்களுக்காகச் செலவிட்டுக் கொள்வதன் காரணமாகத் தான், பெரும்பாலான மக்கள் வறுமையாலும், இல்லாமையாலும் வாடுகின்றனர்.
இஸ்லாம் மக்களிடையே ஏற்படுத்தும் ஆன்மீக மேம்பாடானது, அவர்களை இறைவனுக்கு நெருங்கியவர்களாக ஆக்கி மறுவுலகில் இறைவனின் சன்மானத்தைப் பெற எதிர்பார்த்து, அவனது உவப்பைப் பெற முயற்சிப்பதில் உலக இன்பங்கள் இலாபங்கள் அனைத்தையும் துறக்குமாறு செய்கிறது. இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நடப்பவனும், மறுவுலகில் நரகம், சுவர்க்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவனுமான ஒரு மனிதன், செல்வத்தைக் குவிப்பதில் தீவிரமாக ஈடுபடவோ, தனது சொந்த நோக்கங்களை அடைவதற்கு சுரண்டலிலும் அநீதியிலும் ஈடுபடவோ மாட்டான் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறாக, தார்மீக, ஆன்மீக நெறிப்படுத்துகை, முதலாளித்துவத்தின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஆக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்கள் ஆக்கப்படும் போது, மக்கள் தண்டனைக்கு அஞ்சுவதன் காரணமாகவன்றி, மக்கள் தம் மனச்சாட்சியின்படி நடப்பதன் காரணமாக, அச்சட்டங்களைப் பேணிச செயலாற்றுவர் என்பது உறுதி.
கிழடு தட்டிய முதலாளித்துவம்!
அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 17 லட்சம் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
செப்டம்பர் 26 அன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்ட புள்ளி விவரங்கள் அமெரிக்க ஏழைகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வறுமை விகிதம் 12.7 சதவீதமாக வளர்ந்து விட்டது. 3 கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்கள் அன்றாடம் வெறும் வயிற்றோடு படுக்கப் போகிறார்கள். நடுத்தர மக்களின் ஆண்டு வருமானனும் 42000 டாலராகச் சுருங்கி விட்டது. தனிநபர் வருமானமும் 1991 க்குப் பிறகு முதல் தடவையாக 1.8 சதவீதம் சரிந்து விட்டது.
இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத அமெரிக்கர்கள் மிகச் சிலரே. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கல்லூரி பட்டாதாரிகளோ வேலை கிடைக்காமல் அலைகிறார்கள். லட்சக்கணக்கானோர் தங்களின் உடல்நலக் காப்பீட்டைத் திரும்பப் பெற்று விட்டார்கள். மருந்துகளின் விலை விண்ணைத் தொடுவதால் அவற்றை வாங்க முடியாமல், பென்ஷனில் காலம் தள்ளும் முதியவர்கள் தத்தளிக்கிறார்கள். கனடாவில் மூன்று ரூபாய்க்கு விற்கும் மருந்து அமெரிக்காவில் முப்பது ரூபாய்க்கு விலை போகிறது.
இது தொடர்பாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள விமர்சனம் சுவையானது, பொருள் பொதிந்தது.
அவுட்லுக் 20, அக்டோபர் 2003 இதழில் அனிதா எழுதுகிறார் : 'முதலாளித்துவத்தின் எழுச்சியாக இதனைச் சொல்ல முடியாது. இது பன்னாட்டு வணிக முதலைகளின் மோசமான பேராசையைத் தான் வெளிப்படுத்துகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் விளைவாக, மன்னிக்க முடியாத சமூக அநீதிகள் அமெரிக்காவை வாட்டத் துவங்கி விட்டன.
முத்தாய்ப்பாக, அனிதா சொல்லியுள்ள கருத்து தான் சரியான பஞ்ச். 1980 களின் கடைசி ஆண்டுகள் கம்யூனிஸத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறின என்றால் 21 ம் நூற்றாண்டின் தொடக்கம் கிழடு தட்டிய முதலாளித்துவச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாக அமைந்துள்ளது.
இதனைத் தானே மௌலான சையத் அபுல் அஃலா மௌதூதி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் முராத்பூரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில், 'ஒரு காலம் வரும். அப்போது கம்யூனிஸம், மாஸ்கோவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவலை கொள்ளும். முதலாளித்துவ ஜனநாயம் வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் தன்னுடைய பாதுகாப்புக்காக நடுநடுங்கத் தொடங்கும்' என்று சொல்லி இருந்தார்.
இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். தயாராகுமா? இல்லை இன்னும் விரல் நகத்தில் சாயம் பூசலமா? கூடாதா?, பிறையைப் பார்ப்பாதா? கணக்கிடுவதா? என்பதிலேயே தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்குமா!! சிந்திக்க வேண்டியது இன்றைய உம்மத்தின் பொறுப்பு.
தொகுப்புக்கு உதவியவைகள் :
முஃப்தி தகி உஸ்மானீ அவர்கள் உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை

புதன், 22 ஏப்ரல், 2009

இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள்

உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரலி)
-------------------------------------------------------------------------------- அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா (ரலி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.
அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரலி) என்பவராவார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.
உம்மு ஸலமா (ரலி) அவர்களும் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராவார். இவரது தாயார் பெயர் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா ஆகும். இன்னும் இவரது தந்தையின் பெயர் உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்பதாகும். இவரது பொதுநலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்டவர்களாவார்கள். இவருடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, அவர்களது உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் பொறுப்பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள். தமது அண்டை வீட்டுக்காரர்களுடன் உணர்வுப்பூர்வமாக மிகவும் நெருக்கமான உறவும் கொண்டிருந்தார்கள். உம்மு ஸலமா அவர்களின் கோத்திரம் எவ்வாறு உபகாரத்திலும், பிறருக்கும் உதவுவதிலும் இன்பங்கண்டதோ, அதே போலவே குணங்கள் அமையப் பெற்றவரும், மக்காவில் அன்றைய தினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்தவராக அபூ ஸலமா அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள். இப்பொழுது மக்சூம் குடும்பங்களில் அன்பும், விருந்தோம்பலும் இன்னும் அனைத்து வித சந்தோஷங்களும் கரை புரண்டோட ஆரம்பித்தன.
ஆனால், இந்த சந்தோஷங்களும், குதூகுலங்களும் அபூ ஸலமா தம்பதியினர் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன.
முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப் புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, மற்ற மதத்தவர்களுடன் அணுசரணையாகவும், சகிப்புத் தன்மையுடனும் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் 16 பேர்களின் பெயர்கள் வருமாறு :-
1. உதுமான் பின் அஃப்பான் (ரலி)
2. அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரலி)
3. அபூ ஸலமா அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி(ரலி)
4. ஆமிர் பின் ரபீஆ(ரலி)
5. ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
6. முஸ்அப் பின் உமைர்
7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
8. உதுமான் பின் அவ்ஃப் (ரலி)
9. அபூ ஸிப்ரா பின் அபீ ரஹம் (ரலி)
10. ஹாதிப் பின் அம்ர்(ரலி)
11. சொஹைல் பின் வஹ்ப் (ரலி)
12. அப்துல்லா பின் மசூத் (ரலி)
பெண்களின் பெயர்கள் வருமாறு :-
1. ருக்கையா பின்த் முஹம்மது (ரலி) (ஸல்) (உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மனைவி)
2. ஸிஹ்லா பின்த் சொஹைல் (ரலி) (அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரலி) அவர்களின் மனைவி)
3. உம்மு ஸலமா (அபூ ஸலமா (ரலி) அவர்களின் மனைவி)
4. லைலா பின்த் அபீ ஹஷ்மா (ரலி) (ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களின் மனைவி)
இந்தக் குழுவினர் அபிஸீனியாவிற்குச் செல்வதற்கு கடற்கரையை அடைந்த பொழுது, இரண்டு கப்பல்கள் அந்தத் துறைமுகத்தில் அபீஸீனியாவிற்குச் செல்வதற்காகக் காத்திருந்தன. அதில் ஏறிக் கொண்ட இந்தக் குழுவினர், அபிஸீனியாவைச் சென்றடைந்தனர்.
இந்த முதல் குழுவிற்கு அடுத்தாக ஒரு குழு அபிஸீனியாவிற்குக் கிளம்பியது. அதில் 83 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர். இந்தக் குழுவில் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களும் இடம் பெற்றிருந்தார். அபிஸீனியாவில் தொடங்கிய புது வாழ்க்கை எந்தவித அடக்குமுறைகளும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பித்தது. இவ்வாறு சென்ற குழுவில் முதன் முதலாக உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ஜைனப் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இதனை அடுத்து உமர் என்ற மகவையும் பெற்றெடுத்தார்கள். இறுதியாக இன்னொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள், அதன் பெயர் துர்ரா.
அபிஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் இந்தப் புது மார்க்கத்தை கடை பிடிப்பவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். எனவே, மக்காவின் வாழ்க்கையோடு அபிஸீனியா வின் வாழ்க்கையை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக, மிகவும் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தது.
முஸ்லிம்கள் அபிஸீனியாவில் மன்னரது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டதுடன், அங்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட மக்கத்துக் குறைஷிகள், இது புதுமார்க்கத்துக் கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நீடிக்க விட்டால், அதுவே நமது பாரம்பரிய சமுதாயத்திற்கான சாவு மணி என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்த அமைதியை நீடிக்க விடக் கூடாது என்று அதற்கான சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். வளர்ந்து வரும் இஸ்லாத்தை, அதன் தூதை இனி வளரவே விடக் கூடாது, அதற்காக நாம் ஏதாவதல்ல, எதையாவது செய்தாக வேண்டும் என்று நிலைக்கு வந்தனர்.
மிக நீண்ட ஆலோசனைகளின் அடிப்படையில் அவர்கள், உறுதியான நடவடிக்கைகான செயல்முறைக்கு ஆயத்தமானார்கள். அன்றைக்கு அரபுலகின் மிகச் சிறந்த அரசியல் வல்லுநர்களாகக் கணிக்கப்பட்ட அம்ர் பின் ஆஸ் மற்றும் அப்துல்லா பின் ரபீஆ ஆகிய இருவரையும் பரிசுப் பொருட்களுடன் நஜ்ஜாஸி மன்னரது அவைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் மூலம் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்து, முஸ்லிம்களைக் கைதிகளாக மக்காவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டார்கள்.
நஜ்ஜாஸி மன்னரைச் சந்திப்பதற்கு முன்பாக, அவரது அமைச்சர்களையும், ஆலோசகர்களையும் முதலில் சந்தித்த இந்த மக்கத்துத் தூதுக் குழுவினர், இறுதியாகத் தான் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்தார்கள். அமைச்சர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி, மன்னரைச் சந்திக்கும் பொழுது, மக்காவிலிருந்து வந்து குடியேறியுள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு ஒருபக்கச் சார்பாகவும், தங்களுக்கு சாதகமான முறையில் மன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இறுதியாக, பரிசுப் பொருட்களுடன் மன்னரைச் சந்தித்த மக்கத்துக் குறைஷிகளின் குழு, மன்னருக்கு மரியாதை செலுத்தி விட்டு பரிசுப் பொருட்களையும் கொடுத்து விட்டு, தாங்கள் வந்ததன் காரணமென்னவென்பதை விளக்க ஆரம்பித்தார்கள்.
மன்னரே..! உங்களது நாட்டில் நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்ற இந்த முஸ்லிம்கள், எங்களது முந்தைய மார்க்கத்தைத் துறந்து விட்டு புதியதொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு கலவரக்காரர்களாக இவர்கள் மாறி விட்டார்கள். அவர்களது புதிய மார்க்கத்தின் கொள்கையின் காரணமாக, இரத்த பந்தங்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுகின்றார்கள். தந்தையை மகனுக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். எங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் முன்னோர்களது வழிமுறைகளைக் கூட இவர்கள் உடைத்தெறிகிறார்கள். உங்களது பரந்த மனப்பான்மையின் காரணமாக இவர்களை நீங்கள் அமைதியாக இங்கு வாழ விட்டிருக்கின்றீர்கள், ஆனால் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். இந்த நாட்டிலே குழப்பத்தை உண்டு பண்ணக் காரணமாகி விடுவார்கள், ஏனெனில் இவர்கள் உங்களது மார்க்கமான கிறிஸ்துவத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் போல நீங்களும் பிரச்னைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இவர்களை நீங்கள் எங்கள் கையில் ஒப்படைத்து நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை, இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை எங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று கூறி முடித்தார்கள்.
இப்பொழுது, நஜ்ஜாஸி மன்னர் தனது அவையோரைப் பார்த்து, நடக்கின்ற வழக்கில் நாம் என்ன தீர்ப்புச் சொல்வது என்று கேட்பது போல இருந்தது அவரது பார்வை. மந்திரிப்பிரதானிகளோ, இது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை நாம் ஏன் தலையிட வேண்டும், மேலும், குறைஷிகள் தங்களிடம் ஏன் அவர்களை ஒப்படைக்கச் சொல்கின்றோம் என்பதற்கு அவர்கள் கூறிய காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தான் இருக்கின்றது என்றும் அவர்கள் கருத்துக் கூறினார்கள். எனவே, இவர்களை அரசியல் குற்றவாளிகளாகக் கருதி, குறைஷிகளிடமே ஒப்படைத்து விடுவது நல்லது என்று கூறினார்கள்.
மன்னர் நஜ்ஜாஸி அனைவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, நடுநிலையான, தொலைநோக்குச் சிந்தனை கொண்டு, எதனையும் வெளிப்படையாகப் பேசக் கூடிய அவர், இப்பொழுது தனது கருத்து என்னவென்பதைக் கூற ஆரம்பித்தார்.
தீர்ப்பு என்பது இருபக்கங்களின் விவாதங்களைக் கேட்ட பின்பே வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த மன்னர் நஜ்ஜாஸி, அகதிகளின் தலைவரை அழைத்து உங்களது பக்க வாதம் என்னவென்பதைக் கூறுமாறு பணித்தார். எனவே, தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக, முஸ்லிம்கள் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை தலைவராகக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள்.
மன்னர் நஜ்ஜாஸியின் அவைக்கு வந்த முஸ்லிம்களின் குழு மன்னருக்கு முகமன் தெரிவித்து விட்டு, தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு, தங்களது கருத்துக்களைக் கூற ஆரம்பித்தார்கள்.
பார்த்தீர்களா..! இந்த முஸ்லிம்களை..! இவர்கள் மிகவும் அகம்பாவம் பிடித்தவர்கள் என்று எதையோ குறை கண்டு பிடித்தவர் போலப் பேசிய அம்ரு இப்னுல் ஆஸ் அவர்கள், இந்த அவைக்கென மரியாதை இருக்கின்றது. இவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் மன்னருக்கு சிர வணக்கம் செய்திருக்க வேண்டும் என்று குற்றச்சாட்டாகக் கூறினார்.
இப்பொழுது, மன்னர் முஸ்லிம்களைப் பார்த்துக் கேட்டார். நீங்கள் இந்த அவையின் ஒழுங்குகளை ஏன் பேணவில்லை..!?
நாங்கள் முஸ்லிம்கள்..! படைத்தவனை மட்டுமே வணங்கக் கட்டளையிடப்பட்டிருக்கின்றோமே ஒழிய, அவனது படைப்புகளை வணங்குமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. நாங்கள் படைப்புகளுக்கு சிரம்பணிய மாட்டோம் என்று தனது பக்க நியாயத்தைக் கூறினார், ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்.
நீங்கள், ஏதோ ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடித்து அதனைப் பின்பற்றி வருவதாகக் கேள்விப்பட்டேனே..?! அதுபற்றி என்ன கூறுகின்றீர்கள் என்று கேட்டார் மன்னர் நஜ்ஜாஸி. இப்பொழுது, மீண்டும் தனது பதிலை ஆரம்பித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்..!
மேன்மை தங்கிய மன்னர் அவர்களே..! நாங்கள் நாகரீமற்ற மக்களாக சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிராணிகளைத் தின்று கொண்டிருந்தோம் மற்றும் வடித்தெடுக்கப்பட்ட போதையூட்டும் மது பானங்களையும் அருந்திக் கொண்டிருந்தோம். எங்களுடைய சமூகத்தில் ஒரு குலம் இன்னொரு குலத்தாரை விட உயர்வாக எண்ணிக் கொண்டு, எங்களுக்குள் மாச்சரியங்களை வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக நூறாண்டுகளுக்கும் மேலாகக் கூட பகைமையை வளர்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சொந்த பந்த உறவுகளை என்றுமே எங்களுக்குள் பேணிக் கொண்டதில்லை. எங்களிடம் காட்டுச் சட்டம் தான் மிகைத்திருந்தது. வலிமையுள்ளவன் செய்தது சரி என்ற சட்டமே மேலோங்கி இருந்தது. சுருங்கச் சொன்னால் நாங்கள் மிருகத்தைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
பின் அல்லாஹ் எங்களிடையே ஒரு தூதரை அனுப்பி, எங்களை நேர்வழிப்படுத்தினான். அவர் எங்களில் ஒருவராகத் தான் இருந்து வருகின்றார், இன்னும் அவருடைய குலம் கூட எங்களால் நன்கு அறியப்பட்டது தான். அவரைப் பொறுத்தவரை அவரை நாங்கள் உறவுகளை ஒன்றிணைக்கக் கூடியவராக, மேன்மைக்குரியவராக இன்னும் கண்ணியமிக்கவராகக் காண்கின்றோம். அவர் எங்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், உண்மையையே பேச வேண்டும் என்றும், கொடுக்கல் வாங்கல்களில் நீதத்தைப் பேணுமாறும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் எங்களுக்கு அவர் அறிவுறுத்துகின்றார். இன்னும் அவர் எது அனுமதிக்கப்பட்டது என்றும், எது தடை செய்யப்பட்டது என்றும் அவர் எங்களுக்கு அறிவுறுத்துகின்றார். அநாதைகள், ஏழைகள், மற்றும் நோயாளிகள், பெண்கள் ஆகிய யாவரும் சம அந்தஸ்துடையவர்களே, நமது சமூகத்தில் அவர்கள் அனைவருக்கு உரிமைகள் உள்ளன என்றும் கூறுகின்றார். இன்னும் அவர்களது உரிமைகளைப் பறிப்பது தவறானது என்றும் கற்றுத் தந்திருக்கின்றார். கற்பையும் மற்றும் மானத்தையும் இன்னும் நல்லொழுக்கத்தையும் பேணிக் கொள்ளுமாறும், குற்றம் பிடிப்பது, கோள் சொல்லுதல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறும் அவர் எங்களுக்குப் போதிக்கின்றார். இன்னும் தொழுகையை முறையாகப் பேணுமாறும், இறைவனுக்காக நோன்பு இருப்பதையும், வருமானத்திலிருந்து ஏழைகளுக்கென ஒரு பங்கை ஒதுக்கி ஜகாத்தாக கொடுக்குமாறும் அவர் எங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றார்.
இதனைப் பின்பற்றியே, உங்கள் முன் நாங்கள் இப்பொழுது முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறி விட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணக் கூடியவர்களாகவும், குற்றங்களிலிருந்தும், ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் தவிர்ந்து வாழக் கூடியவர்களாகவும், ஜெம்ன விரோதங்கள், பகைகளை மறந்து வாழக் கூடிய மனிதர்களாக நாங்கள் இன்று மாற்றம் பெற்றிருக்கின்றோம். அன்றைக்கு சமூகத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் தான், இன்று சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய மக்களாக மாறி இருக்கின்றோம். தனக்கு எதனை விரும்புகின்றாரோ அதனையே தனது சகோதரனுக்கும் விரும்பக் கூடிய மக்களாகவும் நாங்கள் மாற்றம் பெற்றிருக்கின்றோம்.
இதன் காரணமாக எங்களது சமூகம் எங்கள் மீது வெறுப்புக் கொண்டு, எங்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யாத குறையாக எங்களைத் தொந்தரவு செய்கின்றார்கள். ஆனால் அவர்களின் கொடுமைகளின் காரணமாக நாங்கள் மீண்டும் அந்தப் படுபாதகப் படுகுழியில் விழத் தயாராக இல்லை. எங்களின் மீது சொல்லொண்ணாக் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அதன் உச்சத்தை அந்தக் கொடுமைகள் தாண்டிய போது தான், நாங்கள் எங்களது வாழ்விடங்களை விட்டு விட்டு, அகதிகளாக உங்களது நாட்டில் வந்து தஞ்சமடைந்திருக்கின்றோம். இன்னும் நீங்கள் நீதமான, நேர்மையான ஆட்சியாளர் என்பதையும், மத சகிப்புத் தன்மை கொண்டவர் என்பதையும், எங்கள் மீது கருணை காட்டக் கூடியவர் இன்னும் நல்லமுறையில் நடத்தக் கூடியவர்கள் என்பதையும் அறிந்த காரணத்தால் தான் இங்கு வந்திருக்கின்றோம்....,
... என்று கூறி முடித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்.
ஜாஃபர் (ரலி) அவர்களின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள்,
உங்களது இறைத்தூதருக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருவதாக நான் கேள்விப்பட்டேன், அதிலிருந்து சிலவற்றை ஓதிக்காட்டுங்கள், அதனை நான் செவிமடுக்க விரும்புகின்றேன் என்று கூறினார்.
கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஜாஃபர் (ரலி) அவர்கள், அத்தியாயம் மர்யம் லிருந்து சில வசனங்களை கேட்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஓத ஆரம்பித்தார்கள். திருமறையின் வசனங்களைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடி, அவரது தாடியை நனைத்துக் கொண்டிருந்தது. இறுதியாக, சுயநினைவிற்கு வந்த மன்னர், இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் வசனங்களைப் போலவே இருக்கின்றது, இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை தான் என்று கூறினார். இப்பொழுது அவையிலிருந்தோர் என்ன செய்வதென்றே தெரியாது திகைத்தவர்களாக, மக்காவிற்குள் நுழையும் மக்களை எவ்வாறு இவர்கள் மந்திர வித்தை கொண்டு கட்டிப் போடுவதைப் போல கட்டிப் போடுகின்றார்களோ, அதே மாயா ஜால வித்தையை மன்னரிடமும் காட்டி விட்டார்கள் என்றே குறைஷிகள் எண்ணினார்கள்.
இப்பொழுது, மக்காவிலிருந்து வந்திருந்த குறைஷிகளின் பிரதிநிதிகளை நோக்கிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், இவர்கள் உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள், இன்னும் இவர்கள் விரும்பும் காலம் வரைக்கும் இந்த அபீசீனிய மண்ணில் வாழ்ந்து கொள்ளலாம் என்று பதிலளித்தார். இன்னும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வித பாதுகாப்புகளும் கொடுக்கப்படும் என்றும் கூறிய அவர், எனக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்தப் பரிசுப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மலையளவு தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாலும், இந்த நேர்வழி பெற்ற மக்களை நான் உங்களது கைகளில் ஒப்படைக்க மாட்டேன் என்று கூறி குறைஷிகளைத் திருப்பி அனுப்பி விட்டார்.
மன்னரின் இந்தப் பதிலைக் கேட்ட அம்ர் இப்னுல் ஆஸ் அவர்களும், அப்துல்லா பின் அபீ ராபிஆ அவர்களும் சிறுமை அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, எந்த முகத்தைக் கொண்டு நாம் மக்காவுக்குத் திரும்புவது, நம்முடைய தலைவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக் கொள்வது போல அவர்களது பார்வை அமைந்திருந்தது.
அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இரைத்த நீராய் ஆகி விட்டதே..! இன்னும் அவர்கள் முடங்கி விடவில்லை, மக்காவிற்குத் திரும்புவதற்கும் விரும்பவில்லை. மாறாக, அவர்களுக்குள் கூடி ஆலோசனை செய்து, இன்னுமொரு சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்தனர்.
இறுதியாக, ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி அம்ர் அவர்கள், இந்த திட்டத்தின்படி நாம் நடந்தால் உண்மையிலேயே நஜ்ஜாஸி கண்டிப்பாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார். இந்தத் திட்டம் நிச்சயமாக நமக்குத் தோல்வியைத் தராது என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்ட அப்துல்லா அது என்ன திட்டம் சொல்லுங்கள் என்று கேட்டார்.
அதாவது, முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை மனிதராகவும், இறைவனுடைய தூதராகவும் தான் நம்பிக்கை கொள்கின்றார்கள், ஆனால் கிறிஸ்தவர்களோ அவரை கடவுளாகக் கருதுகின்றார்கள். முஸ்லிம்களுடைய புதிய வேதமானது, இன்னும் முஸ்லிம்களின் அந்த நம்பிக்கையானது, முஸ்லிம்கள் மீது மன்னர் நஜ்ஜாஸி வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைத் தகர்த்தெறியக் கூடியதாக இருக்கும். இன்னும் முஸ்லிம்கள் தரக் கூடிய பதிலால் மன்னரது அனைத்துப் பிரதானிகளும் கடுமையாகக் கொதித்தெழுவார்கள் என்றும் கூறினார்.
அடுத்த நாள் காலையில் மன்னரது அவைக்குச் சென்ற குறைஷிகளின் தூதுக் குழுவினர், நேற்றைய தினம் நாங்கள் ஒரு தகவலை உங்கள் முன் கொண்டு வரத் தவறி விட்டோம், அதாவது இந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனது மகனாக ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக, அவரை ஒரு மனிதராகவும் இன்னும் இறைவனது அடிமையாகவும் தான் கருதுகின்றார்கள். எனவே, நீங்கள் அந்த முஸ்லிம்களை மீண்டும் அழைத்து, ஈஸா (அலை) அவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை மன்னர் நஜ்ஜாஸி முன் வைத்தனர்.
இப்பொழுது முஸ்லிம்கள் அவைக்கு வரவழைக்கப்பட்டு, ஈஸா (அலை) அவர்கள் பற்றிய உங்களது நம்பிக்கைகள் என்ன என்று கேட்கப்பட்டது. ஜாஃபர் (ரலி) அவர்கள் சத்தியத்தை முழங்கினார்கள். எங்களது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறும் போது, அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது திருத்தூதருமாவார்கள், இன்னும் அல்லாஹ்வினுடைய ஆவி (ரூஹ்)யினாலும், இன்னும் அவனது வார்த்தை (கலிமா) யினாலும் வந்துதித்தவராவார் என்றும், தனது பதிலை முடித்தார்.
ஜாஃபர் (ரலி) அவர்களிடமிருந்து, ஈஸா (அலை) பற்றித் தெரிவித்த அந்த முழுமையான கருத்தைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், தனது பாதங்களை தரையில் அடித்துக் கொண்டு, ஆச்சரியத்துடன், ''நான் எதனை உங்களிடமிருந்து கேட்டேனோ அவை அனைத்தும் சத்தியம், ஈஸா (அலை) அவர்கள் தன்னைப்பற்றி என்ன கூறியிருக்கின்றார்களோ, அதிலிருந்து நீங்கள் எதனையும் மாற்றவுமில்லை, சேர்க்கவுமில்லை, மிகச் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார்.
இப்பொழுது முஸ்லிம்களின் பக்கம் திரும்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், நீங்கள் எனது தேசத்தில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம், உங்களுக்கு எந்த சிறு தொந்தரவுகளும் அணுகாது.
பின்னர் குறைஷிகளின் தூதர்களின் பக்கம் திரும்பிய மன்னர், ''இறைவனுடைய மிகப் பெரும் கருணையால், நாங்கள் எங்களுக்குத் தேவையான பதிலையும், விளக்கத்தையும் பெற்றுக் கொண்டோம்''. நீங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
மக்காவிலிருந்து சதித் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் வந்த அந்தத் தூதுக் குழுவினர், வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்கள்.
அபீசீனியாவில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை படம் பிடித்தவாறு நம்முடைய நினைவலைகளுக்கு விருந்தாக்கி வைத்திருப்பவர், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள். அவர்கள் இந்த முழு வரலாற்றையும் பதிவு செய்து வைத்து, நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள், அபீசீனியா வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், அங்கு அவர்கள் அனுபவித்த அமைதியான வாழ்வு பற்றியும், மன்னர் நஜ்ஜாஸி அவர்களது உயர்ந்த பண்புகள், குணநலன்கள் பற்றியும் விவரித்திருந்தாலும், தமது சொந்த மண்ணைப் பிரிந்து வாழ்ந்த அவர்களது மனங்களில் மக்காவைப் பற்றி நினைவுகள் அடிக்கடி வந்து போய் அவர்களை நோய் பிடித்தவர்கள் போல வாட்டியது. அதுவே ஒரு மனநோயாகவும் மாறியது.
எப்பொழுது மக்காவில் அமைதி திரும்பும், எப்பொழுது நாம் நமது சொந்த மண்ணை மிதிப்போம் என்றே அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள், இப்பொழுது மக்காவின் நிலைமை முற்றிலும் மாற்றம் பெற்று விட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தினைத் தழுவியதன் காரணமாக, அவர்களது தலையீட்டின் காரணமாக மக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியைக் கேட்ட அபீசீனியாவில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் சந்தோசமடைந்தார்கள். இன்னும் தங்களது நாட்டிற்குத் திரும்பவும் முடிவெடுத்தார்கள். அவர்களுடன் உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் தனது குடும்பத்துடன் மக்காவுக்கு திரும்பத் தீர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் மக்காவை அடைந்த போது தான், இது வெறும் புரளி என்பதையும், மக்காவில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை, கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் அறிந்து கொண்ட செய்தி அவர்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை.
ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து மக்காவிற்கு அவர்களைத் திரும்பத் தூண்டியது. ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களையறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (சுஜுது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப்பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித்தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.
முஸ்லிம்களுக்கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லையாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்வதை நிறுத்தி விட்டு, மதீனாவிற்குச் செல்லுமாறு பணித்தார்கள். அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள். இன்னும் ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து) வருகின்ற முஸ்லிம்களை தங்களது சொந்த சகோதரர்கள் போல கவனித்துக் கொள்வதாகவும் அன்ஸார்கள் (மதீனத்து முஸ்லிம்கள்) வாக்குறுதி அளித்தார்கள்.
அபூ ஸலமா (ரலி) குடும்பத்தினரின் ஹிஜ்ரத்
அபூ ஸலமா (ரலி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா (ரலி) அவர்களது குடும்பத்தார் ஓட்டகத்தை மறித்து, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு,
அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ.. அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் விட்டு விட்டுத் தான் போக வேண்டும்.
நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்..! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப்பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்கள் எங்களது இரத்தமும், சதையும் ஆவார்கள், எனவே அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள்.
சற்று முன் மதீனாவை நோக்கிய பயணத்தில் இருந்து கொண்டிருந்த ஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது, தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா (ரலி) அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார், உம்மு ஸலமா (ரலி) அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா (ரலி) அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.
ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது முற்றிலும் பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா..! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா (ரலி) அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரலி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..! உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரலி) மற்றும் அபூ ஸலமா (ரலி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய், இந்த பெண்ணை ஏன் நீங்கள் இப்படி சித்தரவதை செய்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பெண்ணை இப்படி குழந்தைகளைப் பிரித்து வைத்து அழகு பார்ப்பது முறையா? என்று அவர்களது தவறை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னதன் பின்பு, அவர்கள் தங்களது தவறை உணர்ந்து, குழந்தைகளை திருப்பிக் கொண்டு வந்து உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். அத்துடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி தந்தார்கள்.
ஆனால் எப்படி அவரால் தன்னந்தனியாக மதீனாவுக்குச் செல்ல முடியும்? அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தன்னந்தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். தன்ஈம் என்ற இடத்திற்கு அருகே செல்லும் போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த உதுமான் பின் தல்ஹா அவர்களை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். இந்த உதுமான் பின் தல்ஹா அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
உம்மு ஸலமா (ரலி) அவர்களைப் பார்த்த உதுமான் பின் தல்ஹா அவர்கள், உம்மு ஸலமா அவர்களே..! தன்னந்தனியாக நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். உம்முடன் வருவதற்கு உமது குடும்பத்தில் எவருமா கிடைக்கவில்லை? என்று வினா எழுப்பிய அவருக்கு, நான் எனது இறைவனை முழுமையாகச் சார்ந்து இந்தப் பயணத்தைத் துவங்கினேன், அவனே எனது பாதுகாவலன், அவனே எதிரிகளிடமிருந்து என்னைச் சூழ்ந்து காக்கிறவன், அவனால் மட்டுமே என்னைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் பயணத்தைத் தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.

உதுமான் பின் தல்ஹா அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு துணைக்காக மதீனா வரை வரச் சம்மதித்தவராக, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் உதுமான் பின் தல்ஹா அவர்களது இந்த உதவியைப் பின்னாளில் இவ்வாறு நினைவு கூரக் கூடியவராக இருந்தார். அந்த அறியாமைக்காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா! இவரைப் போல கிஞ்சிற்றும் கெட்ட எண்ணம் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை, அவர் எனக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவில்லை, எந்த தொந்தரவும் செய்யவில்லை. எப்பொழுதெல்லாம் ஓய்வெடுக்க ஒட்டகத்தை நிறுத்தினாலும், ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு, அவர் எங்களை விட்டு தூரப் போய் விடுவார். அதன் மூலம் எனக்கு அவர் சங்கோஜமும், சங்கடமும் ஏற்படுவதிலிருந்து என்னைப் பாதுகாத்தார். பின்பு பயணத்தைத் துவங்கும் போது, நானும் எனது பிள்ளைகளும் ஒட்டகத்தில் ஏறி உட்காரும் வரைக்கும் தூர நின்று கொண்டு விட்டு, நாங்கள் ஏறி முடித்ததும், ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவார்.
சில நாட்கள் கழித்து மதீனாவின் வெளிப்புறப் பகுதியில் அமைந்த இடமான கூபாவிற்கு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்கள் அந்த இடத்தில் தான் குடியிருந்தார்கள். எனவே, அபூ ஸலமா (ரலி) அவர்களும் கூட இங்கு தான் இருக்க வேண்டும், நீங்கள் அவருடன் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் நான் திரும்பிப் போகின்றேன் என்று கூறி உதுமான் பின் தல்ஹா அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள்.
உதுமான் பின் தல்ஹா அவர்கள் செய்த, இந்த காலம் அறிந்து செய்த உதவியானது மறக்கக் கூடியதல்ல, அவரது நற்பண்பு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறுக் கூடியவர்களாக உம்மு ஸலமா (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
இறுதியாக, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள், அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா (ரலி) அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.
அபூ ஸலமா (ரலி) ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். ஆனால் இந்தப் உஹதுப்; போரில் அபூ உஸமா ஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்து அதிக ரணத்தைத் தந்து கொண்டிருந்தது.
உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களை எதிராகப் போர் செய்வதற்குத் தயாராகும்படியும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப் புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா (ரலி) அவர்களைத் தான், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். இந்தப் படையில் மிகப் பெரும் படைத்தளபதிகளாக விளங்கிய அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரலி) மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) போன்ற மிகச் சிறப்புப் பெற்ற தளபதிகளும் இடம் பெற்றிருந்தார்கள்.
அபூ ஸலமா (ரலி) அவர்களிடம் இஸ்லாமியக் கொடியைக் கொடுத்து விட்டு, போர் உத்திகளை எவ்வாறு வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.
பனூ அஸத் குலத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதியின் எல்லைக் கோட்டுக்கருகே நமது படைகளை நிறுத்துங்கள். அவர்கள் வந்து தாக்குதவற்கு முன்பாக நீங்கள் அவர்களை தாக்க ஆரம்பித்து விடுங்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து விடாதீர்கள் என்று கட்டளையிட்டார்கள்.
இப்பொழுது, அபூ ஸலமா (ரலி) அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப் படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். உஹதுப் போரின் வெற்றிக்குப் பின், நடந்த இப்போரில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஏனெனில் சுற்றி உள்ள யூத மற்றும் எதிரிகளுக்கு இதன் மூலம் சிறந்த பாடத்தையும், முஸ்லிம்களைப் பற்றிய அச்ச உணர்வையும் ஊட்ட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருந்த காரணத்தால், தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து, வெற்றி அல்லது வீர மரணம் என்ற உயர்ந்த நோக்கத்தில் போரை, வெற்றியை நோக்கிக் கொண்டு சென்ற முஸ்லிம்கள், இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.
இந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்தையும் மறந்து தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்காகவும், இறைத்திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா (ரலி) அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலைகுலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள்.
இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்த இடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அதிகமான கனீமத் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மதீனாவை விட்டுக் கிளம்பி 29 நாட்கள் கழித்து மீண்டும் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் 8 ம் தேதியன்று முஸ்லிம்கள் மீண்டும் மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.
அபூ ஸலமா (ரலி) அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா (ரலி) மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.
அபூ ஸலமா (ரலி) மரணம்
அபூ ஸலமா (ரலி) அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா (ரலி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரலி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரலி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இன்னும் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்றும் தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.
இந்தப் பிரார்த்தனைக்குப் பின்பு, அபூ ஸலமா (ரலி) அவர்களை மரணம் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா (ரலி) அவர்களின் கண்களை மூடினார்கள். அபூ ஸலமா (ரலி) அவர்கள் தனக்காகப் பிரார்த்தித்ததை அறிந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள், அபூ ஸலமாவை விட மிகச் சிறந்த கணவர் யார்? என்று ஆச்சரியப்பட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரலி) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பிரார்த்தித்தேன், இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் திருமணம்
இப்பொழுது இறைவன் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கிணங்க, முதலில் அபுபக்கர் (ரலி) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி, அவர்களை மணந்து கொள்ளத் தயாராகக் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களை மணந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.
பின்பு உமர் (ரலி) அவர்கள் மணந்து கொள்ளத் தயாராக இருந்தும், அதனையும் மறுத்து விடுகின்றார்கள்.
பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் மணக்கத் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி அனுப்பி விடுகின்றார்கள்.
இப்பொழுது உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொள்ள மூன்று நபர்கள் காத்திருக்கின்றார்கள். தலை வெடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு..! அதற்குக் காரணமும் இருந்தது.
முதலாவதாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளை நான் உதாசிணம் செய்தால், நான் செய்து வைத்திருக்கின்ற நற்செயல்கள் அழியக் காரணமாகி விடுமே..!
இரண்டாவதாக, நானோ வயதான பெண்.
மூன்றாவதாக, எனக்கோ அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நான் எந்த முடிவை எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்களே..! நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவனிடம் முறையிட்டு, இதற்கு சரியான தீர்வை வழங்குமாறு அவனிடமே உதவி கோருங்கள், நானும் உங்களுக்காக துஆச் செய்கின்றேன் என்று கூறி அவர்களது மன உலைச்சலுக்கு தீர்வு சொன்னார்கள்.
இன்னும் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) இவ்வாறு பதில் கூறினார்கள். நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன் தான், பிள்ளைகளைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று வாக்குறுதியளித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த பதிலால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணக்கச் சம்மதித்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார்களுடன் இணைவதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் அபூ ஸலமா (ரலி) அவர்கள் தனது மனைவிக்குச் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறியது. ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது.
அன்னையின் சிறப்புக்கள்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளின் அஸர் தொழுகையின் பின்பு தனது மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் நலம் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மனைவிமார்களின் வீடுகளுக்குப் புறப்படும் பொழுது, எங்களில் மூத்தவரான உம்மு ஸலமா (ரலி) அவர்ளின் வீட்டிலிருந்து ஆரம்பித்து, இறுதியில் எனது (ஆயிஷா (ரலி)) வீட்டோடு முடித்துக் கொள்வார்கள்.
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.
நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்,
நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப்பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.
அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததுடன், ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப் ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)
இன்னும் சூரா அத் தவ்பா வின் பல வசனங்கள் அன்னையவர்களின் இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்ட காரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான். (9:102)
இன்னும் இந்த வசனமும்,
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (9:118)
மேலே உள்ள இறைவசனங்கள், கஅப் இப்னு மாலிக் (ரலி), ஹிலால் பின் உமைய்யா (ரலி), மராரா பின் அர்ராபிஆ (ரலி) ஆகியோர்கள், இறைவனிடம் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து கொண்டதன் பின்பு, அதன் பலனாக அவர்களை மன்னித்து மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான். மேலே உள்ள மூன்று தோழர்களும், எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, இறைவன் இந்த மூன்று பேர்களையும் மன்னித்துத் தான் மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான்.
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தான், மேற்கண்ட வசனம் அருள் செய்யப்பட்டது. இரவின் இறுதிப் பகுதியில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த மூன்று நபர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
இதனைக் கேட்ட அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த நற்செய்தியை அவர்களிடம் தெரிவிக்கச் சொல்வோமா? என்று கேட்டார்கள். இந்த அகால நேரத்தில் அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். காலை பஜ்ருத் தொழுகைக்குப் பின்பு யாரிடமாவது சொல்லி அனுப்பி, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று கூறினார்கள். இந்த செய்தியைக் கேட்ட அந்த மூன்று பேரும் மகிழ்ச்சி அடைந்தார்கள், இன்னும் அனைத்து நபித்தோழர்களும் சந்தோஷமடைந்தார்கள்.
இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.
சல்மான் அல் ஃபார்ஸி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உரையாடுவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு தஹிய்யா கல்பி (ரலி) என்ற தோழரும், இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அங்கிருந்தார்கள். பேசி முடித்த பின், சற்று முன் உரையாடி விட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியுமாக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்கள்.
அவர் உங்களது மதிப்பிற்குரிய தோழர் தஹிய்யா கல்பி (ரலி) அவர்கள் என்று அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதன் பின், இல்லை..! வந்தவர் ஜிப்ரீல் (அலை) அவர்களாவார்கள், அவர் தஹிய்யா கல்பி (ரலி) அவர்களுடைய உருவத்தில் வந்திருந்தார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவு முறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.
இஸ்லாமியச் சட்ட வழங்கல்களில் மற்றும் தீர்ப்பு வழங்குவதில் தனிச்சிறப்புப் பெற்ற நபித்தோழர்கள் பலர் அன்னையின் பெயரால் பல மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அன்னையின் பெயரால் அறிவிக்கப்படும் பல சட்டத்தீர்ப்புகளைக் கொண்டு, அந்தத் தீர்ப்புகள் செல்லத்தக்கவை என்று அவர்கள் சான்று பகர்ந்திருக்கின்றார்கள்.
நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் தகுதி பெற்ற நபித்தோழர்களின் பட்டியலில் அன்னையவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களாவன :
1. உம்மு ஸலமா (ரலி)
2. அனஸ் பின் மாலிக் (ரலி)
3. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி)
4. அபூ ஹுரைரா (ரலி)
5. உதுமான் பின் அஃப்பான் (ரலி)
6. அப்துல்லா பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
7. அப்துல்லா பின் ஜுபைர்(ரலி)
8. அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி)
9. ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)
10. ஸல்மான் ஃபார்ஸி(ரலி)
11. ஜாபிர் பின் அப்துல்லா(ரலி)
12. முஆத் பின் ஜபல் (ரலி)
13. அபுபக்கர் சித்தீக் (ரலி)
14. தல்ஹா பின் உபைதுல்லா(ரலி)
15. ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
16. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
17. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
18. உபாதா பின் ஸாமித் (ரலி)
19. முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி)
மொழித்துறையிலும் அன்னையவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவருக்கு நிகராக இருந்தவர்கள் மிகச் சிலரே. அவர்கள் பேசும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே பேசுவார்கள், அவர்களது கருத்துக்கள் தெளிவான உச்சரிப்புடன் வெளிப்படும். இன்னும் அவர்களது எழுத்துக்களும், நல்ல மொழிநடையைக் கொண்டதாக இருக்கும்.
அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சியை கண்டு களிக்கும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தார்கள். அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள் அன்னையவர்களில் முதலாவது மரணமடைந்தவர்கள் என்றால், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அன்னையர்களிலேயே இறுதியாக மரணமடைந்தார்கள். யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது தான் அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் மற்ற தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
(... அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கம் துவக்கம்

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐந்தாம் ஆண்டு கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்க தொடக்க நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம்கள், நகர பெரியோர்கள், பெற்றோர்கள் மற்றும் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கத்தில் அரபு பேச்சு பயிற்சி, மார்க்கச் சட்டங்கள், தஜ்வீத் முறையில் திருக்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் ஹதீஸ் மனப்பாடம், கிராஅத் பயிற்சி, நடைமுறை ஸுன்னத்துகள், நாற்பது நபிமொழிகள் மற்றும் ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவுகள் என மார்க்கம் சம்பந்தமான அனைத்து கல்வியையும் சிறப்பான முறையில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு விபரங்கள் பெற பேரவையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், 20 ஏப்ரல், 2009

தீனிய்யாத் பயிலரங்கம்

நகர ஜமாஅத்துல் உலமாவின் மக்தப் மாணவர்களின் கோடைகால தீனிய்யாத் பயிலரங்கம் அல்ஹம்துலில்லாஹ் இனிதே இன்று முதல் துவங்கியது பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பதினென்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவர்களும் திரளாக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

நம்பிக்கையாளர்களின் தன்மைகள்

நம்பிக்கையாளர்களின் தன்மைகள்
-------------------------------------------------------------------------------- எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். (72:14)
மேற்கண்ட வசனத்தின்படி ஒருவர் முஸ்லிமாகி விட்டதன் காரணமாக, யூதர்களும், கிறிஸ்தவர்களும் நினைத்துக் கொண்டிருப்பது போல தான் சொர்க்கத்தைப் பெற்றுக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை கொள்ளலாகாது. சொர்க்கத்தில் நுழைவது என்பது இறைவன் மனிதர்கள் மீது காட்டும் கருணையினால் விளைவதாகும். சொர்க்கச் சோலைகளில் வீற்றிருப்போர் பற்றி இறைமறையிலே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவன் இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.
எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள். (3:107)
இங்கே ரஹ்மத் என்ற அடைமொழி கொண்டு சொர்க்கத்தைக் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இங்கு நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் இறைவனின் கருணையினாலன்றி, வேறெதனைக் கொண்டும் நாம் சொர்க்கச் சோலைகளில் நுழைந்து விட முடியாது. இவ்வாறு சொர்க்கச் சோலைகளில் நுழையக் கூடிய ஒருவரது தன்மைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி, இறைவன் சூரா அல் முஃமினூன் மற்றும் அல் மஆரிஜ் ஆகிய சூராக்களில் விவரித்துள்ளான். சூரா அல் மஆரிஜ் - ல்
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான். (70:19-21)
இங்கே இறைவன் மனிதனைப் பற்றிய பொதுவான தன்மைகளைப் பற்றி விவரிக்கின்றான். மனிதர்களில் அநேகம் பேர் பொறுமையிழந்த அவசரக்காரர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களை ஒரு துன்பம் தொட்டு விடும் என்றால் அவர்கள் பதறுகின்றார்கள். அதேநேரத்தில் அவர்களை ஒரு நன்மை அடைந்து விடுமென்றால், அந்த துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை மாற்றிக் கொடுத்து விட்டோமென்றால், அதன் காரணமாக இறைவனுக்கும் மற்றும் மனிதர்களுக்கு செலுத்த வேண்டிய உரிமைகளைச் செலுத்த மறுத்து விடுகின்றார்கள்.
இதில் விதிவிலக்காணவர்களும் உண்டு. மேலே சுட்டிக் காட்டப்பட்டவர்கள் தவிர இன்னும் சிலர் இருக்கின்றார்கள், இவர்கள் முந்தையவர்களைப் போல நடக்க மாட்டார்கள், அவர்களது பண்புகள் தனித் தன்மை கொண்டவையாக இருக்கும் என்பதைக் கீழ்வரும் குர்ஆன் வசனம் மூலம் இறைவன் மனிதர்களுக்கு விவரிக்கின்றான் :
தொழுகையாளிகளைத் தவிர- (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள். அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. யாசிப்போருக்கும் விறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு). (அல் மஆரிஜ் : 22-25)
இங்கே இறைவன் அந்த நல்லடியார்கள் பற்றிக் கூறும் பொழுது, அந்த நல்லடியார்கள் தங்களைச் சுற்றியுள்ள தேவையுடையவர்களின் தேவைகளைப் பற்றிய கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள், பிறரது உரிமைகளைப் பேணக் கூடியவர்களாகவும், தங்களது பொருட்களில் இருந்து அவர்களுக்குச் செலவழிப்பவர்களாகவும், இன்னும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்வங்களில், ஏழைகளின் உரிமைகள் கலந்திருக்கின்ற என்பது பற்றியும் மிகவும் கவமுடையவர்களாகச் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இன்னும் செலவழிப்பதைக் கூட அவர்கள் வீண் விரையமாகச் செலவு செய்ய மாட்டார்கள். கணக்குப் பார்த்து இறைவனது வரம்புகளைப் பேணி செலவுகளைச் செய்து கொள்வார்கள். இறைவன் விதித்துள்ள ஜகாத் எனும் கடமையை அவர்கள், தங்களிடமுள்ள செல்வங்களில் இருந்து இரண்டரை சதவீதத்தைப் பிரித்தெடுத்து முறையாகச் செலவு செய்யக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
ஜகாத்தைப் பற்றியும் அதன் பொருள் பற்றியும் இறைத்தூதர் வழி வந்த அபுபக்கர் (ரலி) அவர்கள் உணர்ந்திருந்த காரணத்தினால் தான், ஜகாத்தை முறையாக வழங்காதவர்கள் மீது போர் தொடுக்கவும் அவர்கள் முடிவெடுத்தார்கள். தொழுகையை நிலைநிறுத்துவது எவ்வாறு ஒரு முஸ்லிமின் மீது கடமையோ அவ்வாறே ஜகாத்தையும் நிறைவேற்றுவது கடமை என்று அவர்கள் வாதிட்டார்கள். எனவே தான் இறைவன் தொழுகையையும், ஜகாத்தையும் இணைத்தே திருமறையிலே பல இடங்களில் குறிப்பிட்டுக் கூறியிருக்கின்றான். ஜகாத்தைத் தவிர்த்து இன்னும் தான தர்மங்களையும் வழங்குமாறு இறைவன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியும் இருக்கின்றான்.
தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; (73:20)
இறைநம்பிக்கையாளர்களின் அடுத்த பண்புநலன்கள் எவ்வாறு இருக்குமெனில், அவர்கள் மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். இதனை அவர்கள் உதட்டின் நுனியில் வைத்து வாய் வார்த்தையாக நம்பாமல், நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த கூலி வழங்கப்படக் கூடிய நாளொன்று இருக்கின்றது, அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாளாகிய மறுமை நாள் என்பதாகும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பி, வாய்மையாக ஒப்புக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். யாருடைய வலக் கரத்தில் நன்மையின் ஏடுகள் வழங்கப்பட இருக்கின்றனவோ, அவர்களது வெற்றியின் ரகசியம் கீழ்க்கண்ட வசனத்தில் அடங்கியுள்ளது,
''நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.'' (69:20)
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள். இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சுpயவாறு இருப்பார்களே அவர்கள். நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல. (70:26-28)
இன்னும் அவர்கள் மறுமையில் இறைவன் தரவிருக்கக் கூடிய தண்டனைகள் பற்றிப் பயந்தவர்களாக இருப்பார்கள். மறுமையின் தண்டனையைப் பற்றிய வசனத்தைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் வினவினார்கள், இறைத்தூதுர் (ஸல்) அவர்களே! நீங்களுமா அந்த மறுமையின் தண்டனையைப் பற்றிப் பயப்படுகின்றீர்கள்! அதற்கு, ஆம்! நானும் தான் அந்த மறுமையின் தண்டனைகள் குறித்து பயப்படுகின்றேன், இறைவனின் அந்தத் தண்டனைப் பயத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் என்று எவரும் கிடையாது என்று விடைபகர்ந்தார்கள்.
எனவே, இஸ்லாத்தின் பால் வழுவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கூட நாம் அந்த மறுமை தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற்று விட்டோம் என்று இறுமாப்பு கொள்ளலாகாது. எத்தனை நல்லமல்கள் தான் அவர் செய்திருந்தாலும், இன்னும் அவர் மிகச் சிறப்பான நல்லமல்களைச் செய்வதற்கு முயற்சிப்பதோடு, இன்னும் மேலதிகமாக இறைவனின் தண்டனை பற்றிய அச்சத்தை அதிகம் சுமந்து கொண்டிருப்பவராகவும் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்- தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நியதிக்கப்பட மாட்டார்கள். எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள். (70:29-31)
இறைவன் அனுமதித்திருக்கின்ற பாலியல் உறவு பற்றிய வரையறைகளைத் தவிர்த்து, மாற்று வழியை எவனொருவன் கண்டு கொள்கின்றானோ அவனது அந்தச் செயல்பாடுகள் இறைவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இன்னும் முஸ்லிம்களின் பண்புநலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இறைவன்,
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். (70:32)
வாக்குறுதிகள் என்பது, கடன் போன்றது, எது விஷயத்தில் அவர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்களோ அதனை திருப்பிச் செலுத்தியே தீர வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.(70:33)
இன்னும் அவர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கு எதனைச் சத்தியமாகச் செய்து கொண்டானோ அதனை நிறைவேற்றுவதிலும் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
இன்னும் அவர்கள் தொழுகையை முறையாகப் பேணி வருவார்கள், அதுவன்றி இறைவன் கட்டாயக் கடமையாக்கிய பர்ளுகளையும், இன்னும் ஆர்வமூட்டப்பட்ட சுன்னத்துக்களையும் அவர்கள் பேணி வருவார்கள் என்றும், இறைநம்பிக்கையாளர்களின் பண்புநலன்களைப் பற்றி அவன் தன்னுடைய திருமறையிலே விவரிக்கின்றான்.
இறைநம்பிக்கையாளர்களின் பண்புநலன்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்த இறைவன், தொழுகையில் ஆரம்பித்து, அவர்களது பண்புகளை தொழுகையிலேயே முடித்திருக்கின்றான் என்பதை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஏனெனில் தொழுகை என்பது இறைவனின் பார்வையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தான் மறுமை நாளிலே ஒவ்வொருவரிடமும் வினவப்படவிருக்கின்ற முதல் கேள்வியாக இந்தத் தொழுகை அமைந்துள்ளது. அவன் தன்னுடைய தொழுகையில் சரியானவனாகக் கணிக்கப்பட்டு விட்டானென்றால் அவன் வெற்றி பெற்றவனாவான். தொழுகையில் பொடுபோக்காக இருந்தவனென்றால், அவனது எந்த நற்செயல்களும் இறைவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். 70:35
எனவே, மேலே இறைவன் சுட்டிக் காட்டிய தன்மைகளை எவர் கொண்டிருக்கின்றாரோ, அத்தகையவர்களுக்கு இறைவன் தன்னுடைய அருட்கொடையாக சுவனச் சோலைகளைப் பரிசாகத் தருவதாக வாக்களித்துள்ளான். இன்னும் சுவனச் சோலைகளை ஆசை வைக்கக் கூடிய அனைவரும், இறைவன் மேலே சுட்டிக் காட்டியவை தவிர இன்னும் ஏராளமான இஸ்லாமிய நடைமுறைகளைப் பேணி வாழ வேண்டியவராகவும் இருக்கின்றார். இறைவன் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியவற்றை முறையாக ஒருவர் பேணி நடக்க ஆரம்பித்து விடுவாரென்றால், ஏனையவைகளைப் பின்பற்றுவதென்பது அவருக்கு மிக எளிதானதொன்றாக ஆகி விடும். ஆக, ஒட்டுமொத்தமாக இறைவனது கட்டளைகளைப் பின்பற்றி நடக்க ஒருவர் ஆரம்பித்து விடுவாராகில், அவர் இறைவனின் கருணையினால் சொர்க்கச் சோலைகளை அனந்தரங் கொள்ளக் கூடியவராக அவர் தகுதி பெற்றுவிடுவார். இறைவன் அவனது வரையறைகளைப் பேணி நடக்கக் கூடிய சமுதாயமாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!!
இறைவன் மனிதர்களுக்கு வழங்கக் கூடிய அருட்கொடைகளிலேயே மிகச் சிறப்பான அருட்கொடை எதுவென்றால், மனிதர்களை வழிகெடுக்கக் கூடிய அனைத்து வழிகேடுகளிலிருந்தும் அவனைக் காத்து, இரட்சித்து, தன்னுடைய நேர்வழி என்ற அருள் ஒளியின் பால் நுழையச் செய்வதேயாகும். அவன் நேர்வழி வழங்கியபின் அந்த நேர்வழியைப் பின்பற்றி அதனை வழுவாது பின்பற்றி வாழ்பவனைக் குறித்து இறைவன் மிகவும் திருப்தியுற்று, மகிழ்ச்சியும் அடைகின்றான். இதனை இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான். அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் ''ஸலாமுன்'' (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)'' என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:43-44)
இன்னும் இத்தகைய நேர்வழி பெற்ற நல்லடியார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து சுபச் செய்தியாக சொர்க்கம் பற்றி நன்மாரயம் கூறப்படுகின்றது.
எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக! (33:47)
இத்தகைய மிகச் சிறப்பான நற்கொடைகளைப் பெற்றுக் கொண்ட நல்லடியார்கள் பட்டியலில் இறைவன் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக! ஆமீன்!!

குடும்பக் கட்டுப்பாடு ஒரு புரட்டு வாதம்

குடும்பக் கட்டுப்பாடு ஒரு புரட்டு வாதம்
-------------------------------------------------------------------------------- உலகம் முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு செய்யுங்கள் என்று பலவிதமான பிரச்சாரங்களை பல்வேறு செய்தி ஊடகங்கள் மூலம் ஆளும் அரசுகள் செய்து வருகின்றன. அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா? சுற்றுச் சூழல் சீர்கேடு, இட நெருக்கடி, உணவு நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களை முன் வைக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் 'நாம் இருவர், நமக்கிருவர்' என்று கூறியவர்கள், பிறகு 'நாமிருவர் நமக்கொருவர்' என்று கூறினார்கள். இப்போது 'நாமே குழந்தைகள் நமக்கேன் குழந்தைகள்' என்று புதுப் பல்லவி பாட ஆரம்பித்துள்ளார்கள். இதுபற்றி ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் திருமறைகுர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.'உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும், அது வசிக்கும் இடத்தையும், சென்று சேருமிடத்தையும் அவன் நன்கறிவான்'
மேலும், நாம் பூமியை விரித்தோம். அதில் மலைகளை நாட்டினோம். அதில் எல்லா வகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச் செய்தோம். மேலும், வாழ்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம். உங்களுக்காகவும், நீங்கள் எவற்றிற்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பிளங்களுக்காகவும் (படைத்தோம்) (அல்குர் ஆன் 15:19,20)
இவ்வசனங்களில் படைத்த இறைவன் மனிதர்களுக்கும், மற்ற அவனுடைய படைப்பினங்களுக்கும் உணவுக்கும், இதர வாழ்வியல் தேவைகளுக்கும் பொறுப்பேற்பதாக கூறுகிறான். ஆனால், மனிதர்கள் தங்களிடமுள்ள குறைமதியைப் பயன்படுத்தி குதர்க்கமான் காரணங்களைக் கொண்டு வருகிறார்கள். ஆக, இவர்கள் கொண்டு வரும் காரணங்கள் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிப்பவர்கள் மக்கள் தொகை வளர்ச்சியால் நகரங்களில் ஜனத்தொகை அதிகமாகிறது என்றும், இதனால் இட நெருக்கடி ஏற்படுகிறது என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் வாழத் தகுந்த இடங்கள் அதிகமாகவே உள்ளது. பூமியில் மொத்த நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியைக் கூட மனிதன் பயன்படுத்துவதில்லை. ஆரம்ப காலத்தில் குடிசைகளிலும் கரைந்து போகும் வீடுகளிலும் வாழ்ந்தவன் இன்று உறுதியான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிக்கின்றான். எனவே, பல ஆயிரம் ஆண்டுகள் பிறக்கும் குழற்தைகளுக்கும் குடியேறத் தேவையான காலியிடங்கள் பூமியில் உள்ளன. அந்தக் காலியிடங்கள் நிரம்பி விட்டாலும் கூட அடுக்கு மாடிக் கட்டிடங்கள் எழுப்பி குடியேற்றிவிட முடியும். எனவே, இட நெருக்கடியைக் காரணம் மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்வது கொஞ்சமும் அறிவுக்குப் பொருந்தாததாகும்.
நகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் வாகனங்கள் அதிமாகி வருகிறது. இதனால் அங்குள்ள காற்றில் ஆக்ஸிஜன் குறைவு ஏற்படுகிறது என்று இனியொரு குற்றச் சாட்டை முன் வைக்கிறார்கள். ஏற்கனவே புகை, அதனால் ஏற்படும் சுற்றுச் சூழுல் சீர்கேடுகளை குறைப்பதற்கு உரிய வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டு மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்வது எந்த வகையில் நியாயம்? மேலும், சுற்றுச் சூழல் சீர் கேடுகளைத் தடுப்பதற்கான வழி முறைகளை கண்டுபிடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? காலைக் கடிக்கும் செருப்பை மாற்றுவதை விட்டுவிட்டு, காலையே குறைக்க முயலும் செயலாகவல்லவா இருக்கிறது. கிராமப்புற மக்கள் தான்; நகர்புற வாழ்கைக்கு ஆசைப்பட்டு நகரங்களை நோக்கி வருகிறார்கள். நகர வசதிகளில் சிறிதேனும் கிராமங்களில் உருவாக்கினால், அவர்கள் ஏன் வருகிறார்கள். கிராமங்களை ஆளும் அரசுகள் புறக்ணித்ததால் வந்த விளைவே இது. கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தினால் இதைக் குறைக்க முடியும்.
மேலும், உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள். என்னவோ இவர்கள் தான் உணவளிப்பது போன்று நினைப்பு! இந்தியாவை பற்றி பாரதியார் 5 கோடி முகமுடையாள் என்று சுகந்திர காலத்தில் கவிதை பாடினார். 5 கோடி மக்கள் தொகையாக இருந்த போது வங்கதேசம் பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், இன்று அப்போதைய இந்தியாவின் பெரும்பகுதி பிரிந்த நிலையில் 100 கோடி மக்கள் தொகை பெருகி விட்டது. இன்று 2000ல் மத்திய உணவுக் கழகத்தில் வரலாறு காணாத அளவு உணவுப் பொருள் தேங்கிக் கிடக்கிறர். எந்த அளவுக்கெனில், சாதாரணமாக நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோகம் செய்வதற்கு அரிசி கோதுமை உட்பட அனைத்து தானியங்களின் மொத்த தேவை 2 கோடி டன் மட்டுமே. ஆனால், இப்போது மத்திய சேமிப்புக் கிடங்குகளில் 4 கோடி டன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 1943ல் ஏற்பட்ட வங்கதேச பஞ்சமும் கூட உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட பஞ்சம் அல்ல. வங்கதேசப் பஞ்சத்தை ஆய்வு செய்த அமர்தியா சென் (நோபல் பரிசு பெற்ற மேதை) பின்வருமாறு கூறுகிறார், பஞ்சத்திற்கு முந்தைய ஆண்டின் உணவு உற்பத்தி போலவே அந்த ஆண்டின் உணவு உற்பத்தியும் இருந்தது. எனவே, உணவு உற்பத்தியின் வீழ்ச்சி, பஞ்சத்திற்குக் காரணமில்லை. அது மனிதர்களின் போராசையால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சமே. பஞ்சத்திற்கு காரணம் பதுக்கலும், விலை உயர்வும், நிர்வாகச் செயல் திறமையின்மையும் தான். இப்படிப்பட்ட பதுக்கலும், விலை உயர்வும் இரட்டைக் குழந்;தைகள். எனவே, பதுக்கலை எல்லா அரசுகளும் முற்றிலும் ஒழிக்க முன்வர வேண்டும். இதுபற்றி இஸ்லாம் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றை பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குரியவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல் : இப்னு மாஜா
மேலும், முன்பெல்லாம் 6 மாதச் சாகுபடி முறையில் உணவு உற்பத்தி செய்யப்பட்டது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 3 மாதத்திலேயே இன்று சாகுபடி செய்யக் கூடிய நிலையைப் பார்க்கிறோம். இன்னும், ஆராய்ச்சியின் மூலம் இந்தக் கால அளவையும் குறைக்க முடியும்.
நாட்டின் பெருமளவு நிலங்கள் தரிசாக கிடக்கிறது. அவற்றைப் பயன்படுத்த எந்த வித உருப்படியான திட்டத்தையும் ஆளும் அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு தண்ணீர் பற்றாக்குறையை காரணமாகக் கூற முடியாது.
வானிலிருந்து நாம் சரியாக கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர் அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 23:18)
இவ்வசனத்தின் மூலம் நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான். மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தலாம். மழை நீரைச் சேமிப்பதற்கு ஏரி, குளம், குட்டைகளை விட சிறந்த இடம் எதுவுமில்லை. இதனால் நிலத்தடி நீர் பரவி கிணறுகளில் நீர் பெருகும். இவற்றை முறையாக விவசாயத்திற்கு பயன் படுத்தவும் முடியும். ஆனால் இந்தியாவில் ஆளும் அரசுகள் இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை.
இன்னும் ஆறுகளிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையுமில்லை. கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் கங்கை நதி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து களர் நிலங்களை விளை நிலங்களாக ஆக்கலாம். ஆனால், ஆட்சியாளர்களின் அசிரத்தையின் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இன்னும், மக்களிடையே உணவுப் பொருட்களை வீண் விரயம் செய்யும் போக்கு அதிகமாக உள்ளது. பெரும்பாலும், மேல்தட்டு வர்க்கத்தில் உணவுப் பொருட்களை வீணடிப்பது ஒரு நாகரீகமாகி வருகிறது. நடுத்தர வர்க்கமோ விருந்துகள் என்ற பெயரில், விருந்தினர்களை திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பலவித உணவுப் பதார்த்தங்களை தயார் செய்து வீண் விரயம் செய்யும் நாகரீக மயக்கத்தில் இருக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உணவுத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலையை ஏற்படுத்த முடியும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
'உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்.' (அல்குர்ஆன் 7:31)
இப்படி உணவுகளை வீணடித்து விட்டு, உணவு உற்பத்தியை பெருக்க உருப்படியான வழியிருந்தும் மக்கள் தொகையை குறைக்க 'குடும்பக்கட்டுப்பாடு செய்' என்று சொல்வது அறிவுடையவர்களுக்கு ஆகுமா?
வேலை வாய்ப்பின்மை அதிகமாகும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே வேலையில்லையா? படிக்காதவன் நாட்டுக்குச் சோறு போடுகிறான். படிச்சவன் நாட்டைக் கூறுபோடுகிறான் என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கு ஏற்ப படிக்காதவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் படித்தவனுக்கு வேலை செய்வது இழுக்காக தெரிகிறது. உடை கசங்காத (றூவைந ஊழடடயச துழடி) வேலை தேடுகிறார்கள். இன்னும், வேலைக்கு சென்றாலும், அரசியல் வாதிகளுடனும், செல்வந்தர்களுடனும் சேர்ந்து கொண்டு அளவுக்கதிகமான பொதுச் சொத்துக்களை அபகரிக்கிறார்கள். அபகரித்த பணத்தை பயன்படுத்தாமல் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்து, வீணடித்து வருகிறார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாட்டில் விவசாயத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் தராமல் ஆளும் அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றன. காவிரி – கங்கை போன்ற மிகப் பெரிய திட்டங்களின் மூலமும், விவசாய நடவடிக்கைகள் மூலமும் பெருமளவு வேரை வாய்ப்பினை உருவாக்க முடியும். நாட்டின் வளர்ச்சி வீதத்தை, அதாவது முன்னேற்றத்தைப் பேசுகிறார்கள், மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிப் பேசுவதில்லை. இந்தியாவின் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த இன்னும் திட்டங்கள் முறையாக தீட்டப்படவில்லை.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல் என்ன? பல்லாயிரம் கோடி முதலீட்டில், பெரிய பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கி பொருள்களை ஏராளமாக உற்பத்தி செய்து குவிப்பதா? இல்லை என்கிறார் அமிர்தா சென். எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மக்களாயிருப்பவர்கள் ஏழை மக்கள்தான். இவர்கள் அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான உடல் நிலை, அதன் மூலம் வேலை செய்வதற்கான அறிவுக் கூர்மையையும் உடல் வலிமையையும் ஏற்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப் பட வேண்டும். இப்படி எல்லா மக்களின் வாழ்விலும் வளர்ச்சி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்க முடியும். மக்களின் மனித சக்தியை கணக்கில் கொள்ளாமல் முதலீடுகளைப் பெருக்குவதும், தொழில் மயமாக்குவதும், பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதும் மட்டுமே நடந்தால் அது இறுதியில் படுதோல்வியிலேயே முடியும். மக்கள் பஞ்சத்திற்கும், வறுமைக்கும் ஆளாவார்கள். வேலை வாய்ப்பின்மை அதிகமாகும். இந்த மாதிரி தொழிற்சாலைகளில் முதலீடு செய்வது, உற்பத்தியை பெருக்குவது மட்டுமே அடிப்படையாக கொண்ட சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றிய மெக்ஸிகோ, இந்தோனேசியா போன்ற நாடுகள் பெரும் தோல்வியைக் கண்டன. எனNவு, ஆளும் அரசுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கான உளப்பூர்வமான நடவடிக்கைகளை முறையாக எடுக்காமல் வெளிநாட்டினருக்கு அன்னிய முதலீடு என்று அடகு வைப்பதிலேயே குறியாக இருப்பவர்கள் மக்கள் தொகையை குறைக்கச் சொல்வது என்ன நியாயம்?
இன்னும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை இதை நிர்பந்தமான சூழ்நிலையிலேயே தவிர இதை ஆதரிக்க முடியாது.
நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் அல்லாஹ்வின் மீது சரியான முறையில் நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்திருங்கள். அவன் உங்களுக்கு உணவளிப்பான். குருவிகளுக்கு உணவளிப்பது போல்! அவை காலை நேரத்தில் உணவு தேடிய வண்ணம் தம் கூடுகளை விட்டுப் புறப்படுகின்றன. அப்போது அவற்றின் வயிறுகள் மெலிந்து காலியாக இருக்கின்றன. மாலையில் தம் கூடுகளுக்கு திரும்பிவரும்போது அவற்றின் வயிறுகள் நிரம்பியிருக்கின்றன.
அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி) நூல் : திர்மிதீ
எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் சொல்லும் காரணங்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன். நம் அனைவர் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன

பரங்கி மாநகர வெள்ளாற்று பாலத்தின் ஒரு பகுதி

சனி, 18 ஏப்ரல், 2009

இறைவன் அருளாள் அதிவிரைவில் நடைபெற்று வரும் பாலத்தின் ஒரு பகுதி

பரங்கி மாநகர மக்களின் 50 வருட கால கணவுகளின் ஒரு பகுதி இறைவன் விரைவில் நிறைவுபெற செய்வானாக.


பரங்கி மாநகர மக்களின் 50 வருட கால கணவுகளின் ஒரு பகுதி இறைவன் விரைவில் நிறைவுபெற செய்வானாக.

வியாழன், 9 ஏப்ரல், 2009

தன்னம்பிக்கை பகுதி - சாதனை படைக்க வேண்டுமா?

தன்னம்பிக்கை பகுதி - சாதனை படைக்க வேண்டுமா? தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறா மாணவர்களிடம் காரணம் கேட்டேன். வினாத்தாள் மிகவும் கடினமாயிருந்தது பாடத்திட்டத்தை விட்டு வெளியிலிருந்து வினாக்கள் வந்திருந்தன. ஆசிரியர் வகுப்பில் நடத்தாத பாடங்களிலிருந்து வினாக்கள் வந்திருந்தன. முக்கியமான பகுதிகளிலிருந்து வினாக்கள் வரவில்லை. விடைத்தாளை மிகவும் கடுமையாகத் திருத்தி விட்டார்கள். திருத்திய ஆசிரியர் மனைவியிடம் சண்டை போட்டு வந்திருப்பார் போலும் என்னைச் சுழித்து விட்டார். கம்ப்யூட்டர் கோளாறு 82 ஐ 28 என்று போட்டுவிட்டது. இவ்வாறெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் கூறினார்கள். ஆனால் ஒருவருக்கும் கூட நான் சரியாகப் படிக்கவில்லை அதனால் தேர்ச்சி பெறவில்லை என்று பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மை இல்லை. வாழ்க்கையில் இப்படித்தான் மற்றவர்கள் மீது பழி சுமத்திவிட்டு நாம் நம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம். நல்லது நடக்கிற போது நான்தான் காரணம் எப்படியெல்லாம் உழைத்தேன் தெரியுமா? என்று தம்பட்டம் அடிக்கும் மனிதன் தவறு நடக்கிறபோது மட்டும் மற்றவர்கள் மீது பழி சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள நினைக்கிறான். கண்ணாடி டம்ளர் விழும் சப்தம் கேட்டது என்னவென்று கேட்டேன் டம்ளர் விழுந்து விட்டது என்று பதில் வந்தது. இன்னொரு சப்தம் கேட்டது என்னவென்று கேட்டேன் மேஜை இடித்து விட்டது என்று பதில் வந்தது. நினைத்துப் பாருங்கள் இந்த மனிதன் முகம் எனக்குப் பிடிக்கவில்லை இவன் கையிலிருக்க மாட்டேன் என்றா டம்ளர் தானாகக் கீழே விழுந்தது? அல்லது இவன் எப்போது இந்த பக்கம் வருவான் இவனை இடிக்க வேண்டுமென்று சபதம் போட்டா மேஜை இடித்தது? என் கவனம் சிதறி டம்ளரை கீழே போtட்டுவிட்டேன். சரியாகப் பார்த்து நடக்காமல் மேஜை மீது இடித்துக் கொண்டு விட்டேன். என்று எத்தனை பேர் தங்கள் செயல்களுக்குப் பொறுப் பேற்றுப் பதில் தருகிறார்கள்? தான் ஏற்கும் எந்தவொரு செயலுக்கும் தானே பொறுப்பு என்று ஏற்றுக்கொள்கிற மனிதர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தக் கற்றுக் கொண்டவராவார். மகனை ரேஷன் கடைக்குப் போய் அரிசி சர்க்கரை வாங்கி வரச் சொன்னாள் தாய், மகனுக்கு அது பிடிக்க வில்லை கோபம் கோபமாக வந்தது. அதே நேரம் மறுக்கவும் முடிய வில்லை காசு வாங்குவது கார்டு எடுப்பது பை எடுப்பது ரேஷன் கடைக்கு நடந்து போவது அங்கே இரண்டு மூன்று பேரே நின்றிருந்த க்யூவில் நிற்பது எடைபோட்டு வாங்குவது திரும்பிக் கொண்டு வருவது எல்லாமே அவனுக்குப் பெரும் சுமையாகவும் துன்பமாகவும் இருந்தன. அதே சமயம் இன்னொரு வீட்டில் தாய் தனது மகனிடம் இதே வேலையைச் சொன்ன போது இது யார் வீட்டு வேலை என் வீட்டு வேலை என் வீட்டுக்காக எனக்காக நான் செய்கிறேன். நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? என்று மனமுவந்து மகன் ஏற்றுக்கொண்டு அந்த வேலையைச் செய்யும்போது முன்னால் ஒருவனுக்கு எவையெல்லாம் பெரும் சுமையாகத் தெரிந்தனவோ அவையெல்லாம் இவனுக்கு மிக எளிமையாகவும் அனுபவித்து மகிழ்ச்சி அடையக் கூடியதாகவும் இருந்தன. வீட்டு வேலையாக இருந்தாலும் அலுவலகப் பணியாக இருந்தாலும் சமுதாயப் பணியாக இருந்தாலும் என்னுடைய பொறுப்பு என்று ஏற்று இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கிறபோது அந்தப்பணி சீராகவும் செம்மையாகவும் அமைவதோடு ஆனந்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறது. அடுத்தவர்கள் வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில் எடுத்துச் செய்ய அஞ்சும் பணியை அல்லது தவிர்த்துக் கொள்ள நினைக்கும் பணியைத் துணிந்து பொறுப்பேற்றுச் செய்யும்போது தான் சாதனைகள் நிகழ்கின்றன. பொறுப்பேற்பவர்கள் சாதனையாளர்களாக நிலைக்கலாம். தப்பித்துக் கொள்ளவும் தவிர்த்துக் கொள்ளவும் ஏதோ கடமைக்காகவும் நினைப்பவர்கள் சாமான்யர்களாகவே சாகலாம். உங்களுக்கு எது விருப்பம்?

திங்கள், 6 ஏப்ரல், 2009

இறைவனை அஞ்சி நடப்பதில் இலக்கணம் வகுத்த பெண்கள்
-------------------------------------------------------------------------------- இந்தப் பகுதியில் நமது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு நமது சகோதரிகள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதைப் பற்றியும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களைப் பற்றியும் பேசி வந்தோம்.
நமது சகோதரிகளைப் பற்றிப் பேசிடும் போது இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தவர்கள்.
தொடக்கத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த போது தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள். பொருளால் அவர்கள் செய்த உதவிகளுக்கு அல்லாஹ்வே போதிய அளவில் நற்கூலிகளை வழங்கிட முடியும். அந்த அளவுக்கு தனது பொருள்களையெல்லாம் இறைவனின் பாதையில் தத்தம் செய்தவர்கள் - அள்ளித் தந்தவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்கள்.
அவர்களுக்குப் பின் இஸ்லாமிய இயக்க வளர்ச்சியில் பல்வேறு பெண்களும் ஆற்றிய அருந்தொண்டை பட்டியல் போட்டால் மாளாது. அதுபோல் தான் ஃபாத்திமா (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும்.
அவர்கள் இஸ்லாமிய இயக்க வளர்ச்சியில் மட்டுந்தான் நடுநாயகமாக விளங்கினார்கள் என்றில்லை. அவர்கள் இறையச்சம் என்ற இறைவனi அஞ்சி வாழ்வதிலும் நல்லதொரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
அந்த வகையில் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி!
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.
இரவு நேரத்தில் மதீனா நகரைச் சுற்றி நகர்வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இரவின் நடுப்பகுதி. அவர்கள் களைத்துப் போய் விட்டார்கள். ஒரு சுவர்மேல் சாய்ந்திருந்தார்கள். அப்போது வீட்டுக்குள் பெண்ணொருத்தி தன் மகளிடம் இப்படிக் கூறினாள் : மகளே! எழுந்திரு. அந்தப் பாலை தண்ணீருடன் கலந்து வை.
இதற்கு மகள் தாயிடம் இப்படிக் கேட்டாள் : தாயாரே.. நீங்கள் அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தலைவரின்) கட்டளையைச் செவிமடுக்கவில்லையா?
தாயார், அந்தக் கட்டளை என்ன? என்று கேட்டாள். அதற்கு மகள் அவர்கள் ஒருவரிடம் சொல்லி உரக்க ஒலிக்கக் கட்டளையிட்டார்கள். அது, பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது என்பதே!
இதைக் கேட்டதும் தாய் இப்படிச் சொன்னாள் : எழுந்து பாலை தண்ணீரோடு கலந்து வை. நீ உமர் உன்னைப் பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றாய் என்பதைத் தெரிந்து கொள்.
இதைக் கேட்ட மகள் இப்படிப் பதில் சொன்னாள் : நம்பிக்கையாளர்களின் தலைவர் பார்க்காவிட்டால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். வெளியில் அல்லாஹ்வை கீழ்ப்படிவதைப் போல் நடந்து கொண்டு அந்தரங்கத்தில் கீழ்ப்படியாமல் இருக்க என்னால் முடியாது.
ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் இதைச் செவிமடுத்தார்கள். உடனேயே தன்னுடன் வந்த உதவியாளர் அஸ்லம் (ரலி) அவர்களை அழைத்து அந்தப் பெண் யார் என்று அறிந்து வாருங்கள் என்றார்கள். அந்தப் பெண் யாரோடு பேசிக் கொண்டிருந்தாள், அவளுக்குத் திருமணமாகி விட்டதா என்பதையெல்லாம் கண்டு வாருங்கள் என்றார்கள். அஸ்லம் விசாரித்து, அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகவில்லை என்பதை வந்து சொன்னார்.
உடனேயே உமர் (ரலி) அவர்கள் தன் மகன்களை அழைத்து வரச் சொன்னார்கள். மகன்களும் வந்தார்கள். அவர்களில் ஆசிம் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணை மணந்து கொண்டார்கள்.
இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவர் தான் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரலி) என்ற இறையச்சமிக்க பின்னாள் ஆட்சியாளரின் தாய் ஆனார். இவரைத் தான் வரலாறு இரண்டாம் உமர் என்று அடையாளம் காட்டுகின்றது.
இஸ்லாத்தின் பிந்தைய வரலாற்றில் இவர்மிகவும் இறையச்சமுள்ள ஓர் ஆட்சியாளராய் திகழ்ந்தார்கள். இப்படி இறையச்சத்தில் மிகைத்தவர்களாகவும் இறையச்சமுள்ள தலைமுறையைத் தருபவர்களாகவும் திகழ்ந்தார்கள் இஸ்லாமியப் பெண்கள்.
கலீஃபா உமர் (ரலி) அவர்களே மிகையான இறையச்சம் உள்ளவர்கள். அவர்கள் இறையச்சமிக்க அந்தப் பெண்மணியைத் தான் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக மருமகளாக ஆக்கி மகிழ்ந்தார்கள்.
அவர்கள் இன்னொரு பெண்ணுக்கு அச்சப்படவும் செய்தார்கள். அந்த அதிசயப் பெண் பற்றி அடுத்து பார்ப்போம்.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி