முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

சனி, 4 ஏப்ரல், 2009

இஸ்லாமிய திருமண முறை

இஸ்லாமிய திருமண முறை
--------------------------------------------------------------------------------
திருமணம் என்பது தம்பதிகள் தங்களுக்குள் செய்து கொள்ளுகின்றதொரு வாழ்க்கை ஒப்பந்தம் என்பது மட்டுமல்ல. அது தம்பதிகள் இறைவனுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும். பொறுப்புடன் வாழ விரும்புவோரின் பொறுப்புள்ள இறை உணர்வின் வெளிப்பாடாகும்.
மக்கள் பெண் பார்க்கும் போது இஸ்லாத்தைக் கடைபிடிக்கின்ற பெண்ணாகப் பார்க்க வேண்டும். அதைப் போன்று மணமகனைப் பார்த்தாலும் இஸ்லாத்தைக் கடைபிடிக்கின்ற ஆணாகப் பார்க்க வேண்டும். ஏதோ திருமணம் செய்ய வேண்டுமே என்று திண்ணையில் தூங்கிக் கொண்டு இருப்பவனுக்கு திருமணம் முடிக்கக் கூடாது. தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, பெண்ணுடைய வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. திருமணம் செய்தால் திருந்தி விடுவான் என்ற சிலர் சில ஆண்களுக்கு திருமணம் செய்கின்றார்கள். அவ்வாறு செய்து பெண்ணின் வாழ்க்கையை விஷப்பரீட்சையாக ஆக்கக் கூடாது.
இஸ்லாம் வழங்கும் திருமணச்சட்டங்கள் ஆண், பெண் இருபாலருக்கும் சம அளவில் பொருந்துவதாகும். எடுத்துக்காட்டாக, பிரம்மாச்சாரியத்தைக் குறிப்பிடலாம்.
பிரம்மச்சாரியம் என்பது ஆண்களுக்கு எப்படி ஆகாதோ அதைப் போன்று பெண்களுக்கும் ஆகாது என்கின்றது. இஸ்லாம் பெண்களைப் பொறுத்தவரை திருமணங்கள் ஆண்களை விட முக்கியமானதாகும்.
ஆணைப் பொறுத்தவரை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிய வேண்டும். மணம் முடித்ததும் மனைவியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டும்.நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
உங்களின் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையை கட்டுப்படுத்தும் கற்பைக் காக்கும் யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். ஆதாரம் : புகாரி
இவ்வாறெல்லாம் சொல்லும் இஸ்லாம் மார்க்கம் தான் திருமணம் பேசும் போது சில ஒழுக்கங்களைச் சொல்கிறது. ஏதோ பெண்ணை பார்த்தோம். பேசி முடித்தோம், திருமணம் முடிந்தது என்றில்லாமல் அதற்கென சில ஒழுக்கங்களையும், அதன் முறைகளையும் சொல்லித் தருகிறது.
இன்றுள்ள பெற்றோர்கள் பெண் அழகாகவும், வசதியான இடத்துப் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றார்களே ஒழிய, அவளின் குணநலன்கள், பண்பாடுகள், நாகரீகம், பிறரை மதித்து நடத்தல், இஸ்லாமிய அறிவு என்பது பற்றியெல்லாம் கவனித்து, பெண்ணைத் தேர்வு செய்வதில்லை. இதன் விளைவு பெண் தமிர் பிடித்தவளாகவும், எதிர்த்துப் பேசக் கூடியவளாகவும், குடும்பத்தைக் கவனிக்காமல் பிரச்னை என்றால் தாய் வீட்டிற்கு சென்று விடுபவளாகவும் தான் இருக்கிறாள். இதனால் தான் நமது நாயகம் கண்மணி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
பெண்ணை அவர்களின் அழகுக்காக (மட்டும்) மணம் முடிக்காதீர்கள். எனெனில் அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம். அவர்களின் செல்வத்துக்காக (மட்டும்) மணமுடிக்காதீர்கள். ஏனெனில் அவர்களின் செல்வம் அவர்களை வழி தவறச் செய்து விடலாம். எனினும் நல்லொழுக்கத்துக்காக அவர்களை மணம் புரியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற கரு நிறத்து அடிமைப் பெண் (நல்லொழுக்கமற்ற அழகிய பெண்ணைவிட) மேலானவள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி) ஆதாரம் : இப்னு ஹிப்பான்.
அதுமட்டுமல்லாமல் அழகு என்பது நிரந்தரமானதல்ல! அது ஒரு விபத்தில் கூட அந்த அழகு அழிந்து விடலாம். பணம் என்பது இன்றைக்குப் போகும் நாளைக்கு வரும். இதையெல்லாம் இவர்கள் கண்களில் பட்டாலும் அதைக் கண்டும் காணாமல் இருப்பார்கள்.
இன்னும் பெண்ணின் பெற்றோர் பெண்களிடம் சம்மதம் கேட்பதேயில்லை. பெண் என்றால் நாம் சொல்வதைக் கேட்கணும். நமக்குக் கட்டுப்பட்டு இருக்கணும், குடிகாரன், விபச்சாரன் என்று தெரிந்திருந்தும், அவனது வசதி வாய்ப்புகளைக் காட்டி, அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அவளும் ஒரு பெண் என்ற வகையில் உணர்வுள்ள மனித வர்க்கம் தானே என்று நினைத்து, பெண்ணின் சம்மதத்தைக் கேட்பதில்லை. அவளுக்கென உணர்வுகள், ஆசைகள் இருக்காதா? என்று நினைப்பதில்லை. இந்த தவறு பொருப்பாளர் முஸ்லிம்களிடம் தான் உள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கன்னிப் பெண்ணாயினும், விதவை பெண்ணாயினும் சம்மதம் பெற வேண்டுமென்ற போது கன்னிப் பெண் எப்படி சம்மதிப்பாள். வெட்கப்படுவாளே என்று தோழர்கள் கேட்க அவளது மௌனமே சம்மதம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்.
சிலர் மணமக்களை காண்பிப்பதில்லை. எங்களுக்கு பழக்கம் இல்லை என்று தட்டிக் கழிப்பார்கள். இதனால் பின்னால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாத நிலையில், மணமுடிக்கப்படும் திருமணங்களில் சில இன்றைக்கு மணமான அன்றே விவாகரத்துக் கோரும் நிலைக்குச் சென்றுள்ள நிகழ்வுகள் நமது சமுதாயத்தில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
இத்தகைய பிரச்னைகள் சமுதாயத்தில் தலைதூக்காமல் இருப்பதற்கான ஒரே வழி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடி மணமக்கள், ஒருவரை ஒருவர் பார்த்திருக்க வேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் அறிந்திருப்பதும் கூட மிகச் சிறந்ததாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்கலாம் என்ற ஒரு மனிதனின் உள்ளத்தில் அல்லாஹ் எழுப்பி விட்டால், அவளைப் பார்த்துக் கொள்வதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்லமா (ரலி) ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா
இன்றைக்கு திருமணத்தில் முக்கிய இடம் வகிப்பது வரதட்சணை என்ற கொடிய வியாதியாகும். வரதட்சணையாக பீரோ, கட்டில், நகை, என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். சுயமரியாதையை விட்டு மற்றவர்களிடம் கடன் கேட்டு, ஓசி கேடடு மாப்பிள்ளை எதிர்பார்க்கும் வரதட்சணைச் சாதனங்களைக் கொடுப்பார்கள். இதன் மூலம் வரதட்சணை என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கௌரவப் பிச்சை எடுக்கின்றார்கள். தானும் ஒரு பெண் தானே, தன் கல்யாணத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று சற்றும் மாப்பிள்ளையைப் பெற்ற தாய் நினைப்பதில்லை.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் தொகையை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள் என்று இறைவன் கூறுகின்றான். (அல்குர்ஆன் : 4:4)
மகிழ்வோடு கொடுங்கள் என்று கூறுகின்றானே தவிர, மன வேதனையுடன் அவர்களிடமிருந்து நீங்கள் வாங்குங்கள் என்று கூறவில்லை. மஹர் தொகையை 1001, 501 ரூபாய் என்று கொடுக்கின்றார்கள்.அவ்வாறு கொடுக்கக் கூடாது. பெண்ணிடம் மஹர் தொகை எவ்வளவு வேண்டும் என்று கேட்க வேண்டும். வசதியில்லை என்றால் தன் வசதிக்கு ஏற்ற அந்த மஹரை ஏற்றுக் கொள்ளக் கூடிய பெண்ணை மணம் செய்யுங்கள்.
சிலர் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்னை, தலாக், தற்கொலை முயற்சி, தற்கொலை என்று இஸ்லாம் எதிர்க்கின்ற, வெறுக்கின்ற முடிவுகளுக்குச் சென்று விடுகின்றார்கள். கௌரவம், சொந்தம் விட்டுப் போகக் கூடாது, என்ற பல காரணங்களை முன்னிட்டு முடித்து வைக்கப்படும் திருமணங்கள் பல வாழ்நாள் முழுவதும் பிரச்னைகளுடனேயே கழிகின்றது. பிரச்னை முற்றியவுடன் அது ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கின்றது.
கீதாம் என்பவர் தன் மகளுக்கு பிடிக்காமல் மண முடித்துக் கொடுக்க, இது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே இது செல்லத்தக்கதல்ல என்று கூறினார்கள். பின் அப்பெண் வேறு ஒருவரை மணமுடித்துக் கொண்டாள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : அபூதாவூத், ஹாகிம்
பெற்றோர்களே! உங்கள் மானப்பிரச்னை, கௌரவப் பிரச்னை என்றும் அழகு பணம் என்றும் உங்கள் பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொள்ளாமல், நோகடிப்பதை விட பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொண்டு நல்ல பெற்றோர்களாகவும், நல்ல மாமியார்களாகவும் நடந்து கொள்க.

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி