முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 19 ஆகஸ்ட், 2009

நோன்பு மற்றும் ரமழான் குறித்த தகவல்கள் சில....

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

1) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)

3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ, அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பு மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே, நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

ரமளான் நோன்பின் சிறப்புகள்

1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலால் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால் (அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தர்மமாக அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)

1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர், நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு யுத்தத்திற்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்கு சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரை சூழ்ந்து, மக்கள் கூடியிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. (ஆதாரம்: நஸாயி)

4) நபி (ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில், நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ”நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்” எனக் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்;: நஸாயி)

6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி (ஸல்) அவர்கள் (மக்கா) சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

7) கோடைகாலத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். (சூட்டின் காரணமாக)ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவிற்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபி (ஸல்) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) எத்தனையோ நோன்பாளிகள், அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, இப்னுமாஜா)

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் ” நோன்பாளி ” என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்...

(யாராவது) மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால், அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

1) நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்)

3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பாளியின் உளு

அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி (ஸல்) அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

பெருந்தொடக்குள்ள பெண்கள்

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால், விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்

1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நானும், மஸ்ரூக் என்பவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி (ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி முதல் நேரத்தில் தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) என்று நாங்கள் கூறினோம். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. (ஆதாரம்: திர்மிதி)

பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா)

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) "எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி