முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 3 செப்டம்பர், 2009

பத்ருப் போர்

- எம். எம். அப்துல் காதிர் உமரி,
ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் வெளியீடு

மதீனா தேசத்தில் அரசு ஒன்றை நிறுவி முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். 'பத்ர்' எனும் இடம் மதீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருந்தது. அதை ஆக்ரமிப்பது மதீனாவின் மீது நடத்தப்படும் அத்துமீறலாகும். அப்படிச் செய்வதன் மூலம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வம்புச்சண்டைக்கு இழுக்கலாமென்று குறைஷிகள் எண்ணினர்.

பத்ரை மக்காக் குறைஷிகள் ஆக்கிரமிக்கும் போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வராவிட்டால் அவர்களிடம் போதிய படைபலம் இல்லையென்று கருதி, குறைஷிகள் மதீனாவுக்குள் அணிவகுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்ததும் இதைத்தான்.

குறைஷிகளில் சிலரின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ஒரு திட்டம் தயாரானது. அபூ சுஃப்யானின் தலைமையில் ஆயிரம் சுமைதாங்கி ஒட்டகங்களோடு ஒரு வணிகக் கூட்டம் சிரியா தேசம் செல்ல வேண்டும். அது திரும்ப வரும்போது அதன் தலைவர் அபூ சுஃப்யான் ஒரு தூதரை மக்கா தேசம் நோக்கி அனுப்ப வேண்டும். அத்தூதர், வணிகக் கூட்டம் பத்ரை வந்தடையும் தேதியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடனே அந்தத் தூதர் மக்கா தேசத்தின் வணிகக் கூட்டத்தை வழிமறித்துக் கொள்ளையடிக்க, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்ற வதந்தியைப் பரப்ப வேண்டும்.

ஏனெனில் சிரியா செல்வதற்கான இந்த வழி சர்வதேசச் சாலையாக இருந்தது. அனைத்து அரபு வணிகர்களுக்கும் இது மிகவும் முக்கியமான வழியாகும். இவ்வழியில் வரும் வணிகக் கூட்டத்தை வழிப்பறி செய்வது ஒட்டுமொத்த அரபியாவுக்கு எதிரான குற்றமாகும். இப்படிப்பட்ட செய்தியைப் பரப்புவதன் மூலம் அனைத்து அரபுகளிடமிருந்தும் தங்களுக்கு ஆதரவான அனுதாப அலையை உருவாக்க முடியும். ஏற்கனவே மதீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ள அரபுக் கூட்டத்தார் தம் அனுதாபத்தையும், ஆதரவையும் இதன் மூலம் விலக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகுமென்று குறைஷிகள் திட்டமிட்டார்கள். அவர்களின் அத்திட்டப்படியே மதீனாவுக்கு வடக்கே நஜ்து தேசத்திலுள்ள 'பனூ சுலைம்' மற்றும் 'பனூ கத்ஃபான்' படைகள் மக்காவின் படையோடு இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

மக்காவின் படைகள் 'பத்ரு'க்களம் வந்தது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததென்றோ, இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வழிமறிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் வந்ததென்றோ ஒருபோதும் கருத முடியாது. உண்மையில் அது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும்.

'பனூ பக்ர்' என்ற கூட்டத்தார் மக்காவின் எதிரியாகத் திகழ்ந்தனர். சர்வதேச வணிகப் பாதையைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்கே தாங்கள் போரிடச் செல்வதாகவும், எனவே தாங்கள் இல்லாத அச்சமயத்தில் மக்காவைத் தாக்கிவிட வேண்டாமென இந்த வதந்தியின் மூலம் குறைஷிகள் 'பனூ பக்கர்' கூட்டத்தினரை மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். குறைஷிகளின் சூழ்ச்சியை அறியாத அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தார்கள்.

ஆயிரம் பேர் கொண்ட மக்காவின் இராணுவம் பத்ர் களம் நோக்கிப் புறப்பட்டது. நஜ்து தேசத்துப் படைகளும் பத்ர் களம் நோக்கி வந்தன. திமஸ்கஸிலிருந்து திரும்பிய வணிகக்கூட்டம் நிறைய ஆயுதங்களைச் சுமந்து வந்தது. அக்கூட்டமும் மக்காவின் படையும் பத்ரில் ஒன்று கூடின. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது. ''பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கு எதிராக பத்ரில்) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டு மக்களைத் தடுத்தார்கள்.'' (அல் குர்ஆன் 8:47)

ஆனால் சில வரலாறுகளில் இதற்கு மாற்றமான தகவல்களும் உள்ளன. அபூ சுஃப்யான் தன் பாதையை மாற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அன்னாரின் தோழர்களும் தாக்காத அளவுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்து அபூ ஜஹலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், 'உம் ஒட்டகங்களையும் உடைமைகளையும் பாதுகாக்க நீர் வெளிவந்ததும் இறைவன் அவற்றைப் பாதுகாத்து விட்டான்; எனவே திரும்பச் செல்லவும், எனக் கூறியதாகக் கதை கட்டப்பட்டுள்ளது.

மக்காவாசிகளின் படையெடுப்பு மதீனாவாசிகளின் தூண்டுதலாலே ஏற்பட்டது என வாதிடுதல் பெரும் தவறு. மக்காவாசிகளோடு மதீனாவாசிகளின் மோதலுக்குக் காரணம் அவர்களின் படையெடுப்பு தான் என்பதற்கு அபூஜஹலின் கவிதையே போதுமான ஆதாரமாகத் திகழ்கிறது. 'பத்ரு'க்கு வருவதற்கு முன்பு இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ குறைஷிப் படையின் வருகையை அறியாது இருந்தனர் என்பதும் தவறு.

ஏனெனில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒட்டகக் கூட்டத்துடன் வந்த வணிகக் குழுவை வழிமறிக்க வந்தார்கள் என இதற்குப் பொருளாகிவிடும். உண்மையில் ஆக்கிரமிப்பதற்காக வந்த மக்கா தேசப் படையை எதிர்கொள்ளவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் 'பத்ரு'க்கு வந்தார்கள்.

முஸ்லிம்கள் இடம்பெயர்வதைக் குறைஷிகள் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தங்களை மதீனாவில் நிலைப்படுத்திக் கொண்ட காரணத்தால் மதீனாவின் மீது போர்ப் பிரகடனம் செய்தனர். அன்ஸாரித் தோழர்கள் ஒன்றைப் புரிந்து கொண்டனர். மக்காவின் படையெடுப்பு எந்த வினாடியிலும் நிகழலாம். மக்காவின் பல சிறு படைகள் மதீனா நோக்கி அணி வகுத்தன. அவர்களின் இந்த எண்ணத்தை அவை உறுதிப்படுத்திவிட்டன. அன்ஸாரித் தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மதீனாவின் எல்லைகளுக்குள்தான் பாதுகாப்பதென்று உறுதி பூண்டிருந்தனர். ஆனாலும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தனர். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பல பயணங்களின் மூலம் பல்வேறு கூட்டத்தாருடன் உடன்படிக்கைகள் ஏற்பட்டு 'பத்ரு'ம், அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளும் மதீனாவின் எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிட்டன. ஆகவே மதீனா தேசத்தின் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு என்பதை அன்ஸார்களும், முஹாஜிர்களும் நன்றாக அறிந்தே இருந்தனர். ஏனெனில் அவர்கள் மதீனா ஒப்பந்தத்தை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டிருந்தனர். சிலர் விளைவுகளைப் பற்றி அஞ்சியிருக்கலாம்; அதுவும் மனித இயல்புதான். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டான்.

மக்காவின் ஒட்டகக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டு வெளியில் வந்தார்கள் என்று செய்தி பரப்பப்பட்டது பெரும் ஆச்சரியயத்தைத் தருகிறது.

''அபூசுஃப்யான் சிரியாவிலிருந்து வருவதைக் கேள்விப்பட்டதும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை அழைத்து ''இதுவே குறைஷிகளின் உடைமைகள் அடங்கிய ஒட்டகக் கூட்டம். சென்று அதைத் தாக்குங்கள். அல்லாஹ் அதை நமக்கு இரையாக்கக் கூடும் என்று கூறினார்கள்'' என இப்னு இஸ்ஹாக் எழுதியுள்ளார்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட திருமறை வசன ஒளியில் இதை ஆதாரப்பூர்வமாகக் கருத முடியாது. நடுநிலையாகப் பார்த்தால் இது தவறான நோக்கத்தோடு புனையப்பட்டிருப்பது விளங்கும். இது பற்றி இப்னு இஸ்ஹாக், அபூ சுஃப்யான் செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒட்டகத்தில் பயணித்தவர் ஒருவர் மூலம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு தன் ஒட்டகக் கூட்டத்தை எதிர்கொள்ளத் தயாராவதை அறிந்தார். சுதாரித்துக் கொண்டு 'ளம்ளம் இப்னு அம்ர்அல் கிஃபாரி'யை மக்காவுக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்றடைந்ததும் தன் ஒட்டகத்தின் மூக்கை அறுத்து, அதன் சேணத்தைத் திருப்பி, தன் மேற்சட்டையைக் கிழித்துக் கொண்டவராக, ''குறைஷிகளே! நம் ஒட்டகங்கள்!? நம் ஒட்டகங்கள்!? அபூ சுஃப்யானோடு இருக்கும் உங்கள் உடைமைகளைச் சூறையாட முஹம்மதும் அவரின் தோழர்களும் தயாராகிவிட்டனர். நீங்கள் அதை வெல்வீர்கள் என எனக்கு நம்பிக்கை இல்லை. உதவுங்கள்! உதவுங்கள்!!' என்று மக்களிடம் கூறினார்'' என்றும் இப்னு இஸ்ஹாக் குறிப்பிடுகிறார்.

இவர்கள் கூறுவதுபோன்று இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தை வழிப்பறி செய்ய வந்திருப்பின் அதை அவர்கள் எளிதாகச் செய்திருக்க முடியும். பத்ரின் அருகிலிருந்து 'ளம்ளம்' என்பவர் மக்கா தேசத்தைச் சென்றடைய எப்படியும் ஆறுநாட்கள் ஆகியிருக்கும். மக்காக் குறைஷிகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள நான்கு நாட்களைச் செலவிட்டனர். அதோடு பத்ரை அடைய அவர்களுக்குப் பத்து நாட்கள் தேவைப்பட்டன. ஆயிரம் சுமைதாங்கி ஒட்டகங்களோடு பயணித்த அபூ சுஃப்யானிடம் விரையும் தன்மை இல்லை என்பது நிதர்சனம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படைக்கு அப்படி எந்தச் சுமையும் இல்லாததால் அவர்களால் விரைந்து இயங்க முடியும். பத்து கிலோ மீட்டர் தூரத்தை அடைத்துக் கொண்டு வந்த ஆயிரம் ஒட்டகங்களின் காவலுக்கு 24 நபர்களே இருந்தனர். விரைந்து செல்லும் ஒட்டகங்களைக் கொண்ட 30-40 முஸ்லிம் வீரர்களுக்கு அவற்றை எளிதாகவும் தாக்கியிருக்க முடியும். முஸ்லிம் படைகள், குறைஷிகளின் படை மற்றும் வணிகச் சுமைதாங்கி ஒட்டகங்களுடன் வந்த அனைவரும் 'பத்ர்' களத்திற்கு ஒரே நேரத்தில் வந்தடைந்தார்கள்.

இதை ஊன்றிக் கவனித்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் முடிவிலிருந்த 'பத்ர்' போர்க்களத்திற்குச் சென்றுள்ளார்கள். எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் எதிரிகள் நுழைந்தது படையெடுப்பு என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போரிடுவோருடன் நீங்களும் போரிடுங்கள்'' (அல்குர்ஆன் 2:190) என்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.

முஸ்லிம்கள் தாக்கப்படும்போது அவர்கள் எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது ஆகுமானதல்ல. எனவே போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ''போரிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது.'' (அல்குர்ஆன் 2:216) என்று இறைவன் கூறுகிறான்.

உண்மையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ சுஃப்யானின் வணிகப்படையைத் தாக்குவதற்காகச் சென்றிருந்தாலும் அதைத் தவறு என்று கூறமுடியாது. ஏனெனில் தம் தேசத்தையும், அதில் வாழும் மக்களையும் அழிப்பதைக் குறியாய்க் கொண்டிருக்கும் எதிரிகள் மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படுவதும் போர்த் தந்திரங்களில் ஒன்றே. தற்போதும் இம்மாதிரியான பொருளாதாரத் தடைகள் அமலில் உள்ளன. இதைக் கவனத்திற்கொள்வது அவசியம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் 'பத்ர்' போர்க்களம் சென்று போரிட்டது அவர்களின் முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறுவோரும் உள்ளனர். நிச்சயமாக இது முன் கூட்டிய நடவடிக்கை அல்ல. ஏனென்றால் மக்காவாசிகள் ஏற்கனவே போர் அறிவிப்பைச் செய்து விட்டனர். மக்கா தேசக் குறைஷிகள் முன்னரே போர்க் குழுக்களை அனுப்பிக் கொண்டும் இருந்தனர். மேலும் மக்காவின் படைகள் மதீனா நோக்கிப் புறப்பட்டதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிந்த நிலையில் இருந்தார்கள். இரு படைகளும் களத்தில் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் சந்தித்தன.

'பத்ர்' களம் மதீனாவிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும் மக்காவிலிருந்து 300 கி.மீ. தூரத்திலும் உள்ளது. மக்கா தேசக் குறைஷிகள்தான் முதலில் படையுடன் கிளம்பியுள்ளார்கள். அவர்கள் புறப்பட்டதை அறிந்த பின்னரே இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தங்கள் படையை நடத்திச் சென்று பத்ரில் அவர்களைச் சந்தித்தார்கள். 120 கி.மீ. தூரத்தில் இருந்து வந்த முஸ்லிம்களும், 300 கி.மீ. தூரத்தில் இருந்து வந்த மக்கா தேசக் குறைஷிகளும் ஒரே நேரத்தில் 'பத்ர்' களத்தை வந்தடைய வாய்ப்பில்லை. குறைஷிகள் மிகத் தாமதமாகப் புறப்பட்டு அதிக தூரத்தை அன்றைப் பாலைவனத்தில் மின்னல் வேகத்தில் கடந்து வந்தார்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது.

மதீனா ஒப்பந்தம் பற்றிய மேம்போக்கான விமர்சனம் கொடுக்கப்பட்டு விட்டது. மதீனா தேசத்தின் உருவாக்கத்தைச் சட்டபூர்வமாக்கிடவும் சம்பந்தப்பட்ட அனைவரும் தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும்படியும் தயாரிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணமாகும் இது. இன்றைய அரசியற் சட்டக் கலைச் சொல்லாக்கத்தில் சொல்லப்படுவதானால் இது ஓர் 'அரசியல் சாசனச் சட்டம்' ஆகும். மேலும் இது வருங்கால முஸ்லிம் தலைமுறைகளுக்கான சிறந்ததொரு முன்னுதாரணம் ஆகும்.

முஸ்லிம்களின் எந்த ஓர் அரசும் தனக்கென ஓர் அடிப்படைச் சட்டமின்றித் தன் தேசத்து அலுவல்களை நடத்தக் கூடாது. இவ்வொப்பந்தமானது பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் தனிக்கவனம் செலுத்தியுள்ளது. அதோடு உள்நாட்டு விவகாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கும் இச்சாசனம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. வருங்காலத்தில் அரசியல் சாசனம் இயற்றுவோருக்குச் சமூக வாழ்வின் பல அம்சங்களிலும் இது வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

மக்காவின் போர்ப்பிரகடனத்திற்கு மதீனாவின் ஒப்பந்தமே எதிரொலியாக இருந்தது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் போர் என்பது தேசிய அளவிலான ஆயத்தத்துடன் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். போர்ச் சட்டதிட்டங்களும் ஆவணரீதியாகப் பதிவு செய்யப்பட்டன. அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கக்கூடிய முதல் இடம் இதுதான். அவற்றின் சில முக்கிய அம்சங்கள் இதோ...

  • மக்களையும், நாட்டு எல்லைகளையும் பாதுகாப்பதற்காகவே போரில் இறங்க வேண்டும்.

  • தேசத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்தச் சமுதாய மக்களும் உடலாலும், பொருளாலும் போரில் பங்கெடுக்க வேண்டும்.
  • தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் போர் உள்ளடக்கி யுள்ளது. அவை வருமாறு:-
    1. உள்நாட்டு அமைதியும், பாதுகாப்பும்.
    2. ராஜதந்திர நடவடிக்கைகள்.
    3. முழு மனிதசக்தி.
    4. தேசத்தின் பொருளாதாரமும், இதர வளங்களும்.
    5. இருப்பிலுள்ள ஆயுதங்கள்.
    6. முழுக் கண்காணிப்பு.

யூதர்களுக்கு மனித உரிமைகளில் சம அந்தஸ்து வாக்களிக்கப்பட்டது. ஆனால் அதை அடைவதற்கு முஸ்லிம்கள் நிர்வாகம் செய்யும் இறையாட்சியமைப்பின் கீழ் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். இஸ்லாமியத் தேசச் சட்டங்களின் அடிப்படையில் கட்டளையிடும்போது அவர்கள் அதன்படி நடந்தாக வேண்டும். இந்த ஒப்பந்தம் உருவாகும் முன்பு யூதர்கள் சமூக, அரசியல் அந்தஸ்து இல்லாதவர்களாகவே மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வாழ்வில் இது ஒரு முன்னேற்றமாகத் திகழ்ந்தது. ஆனால் அந்த யூதர்கள் ஓராண்டிலேயே ''மதீனாவில் நிறுவப்பட்டுள்ள அந்த அரசையும், தேசத்தையும் அழிப்பதற்கு நாங்கள் சித்தமாயிருக்கிறோம்; இதுதான் எங்கள் வேலை'' என முகத்திரையை விலக்கிக் கொண்டு தங்களின் உண்மைத் தோற்றத்தைக் காண்பிக்கலாயினர். கருத்து வேற்றுமைகள் 'பத்ரு'ப் போருக்கு முன்னரே தலைதூக்கிவிட்டன.

இருப்பினும் 'பத்ரு'ப் போருக்குப் பின்னரே யூதர்கள் வெளிப்படையாகக் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் ஆயுதங்களைத் தவிர்த்து அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு மதீனாவை விட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட யூதர்கள் தங்களின் கதவு, சன்னல் களைக் கூட விட்டு வைக்காது அனைத்தையும் எடுத்துச் சென்றனர்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த யூதக் கூட்டத்தின் கலகத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் விட்டிருந்தால் மதீனா தேசத்தின் உள்நாட்டு அமைதியும், பாதுகாப்பும் பெரும் கேலிக்குள்ளாம் இருக்கும். கலகம் செய்த 'பனூ கைனுக்கா' எனும் கூட்டம் எண்ணிக்கை யில் பெரிய அளவில் இருந்தது. ஓரளவு இராணுவத் திறமையும் கொண்டிருந்தது.

இந்த யூதக்கூட்டத்தைப் பற்றி எழுத்தாளர் 'மார்கோலியத்' தன் நூலில் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.

"Certainly the Qainuqua might by themselves have been sufficient to deal with Muhammad (SAW) and three hundred followers, but their brothern could, without difficulty, have brought into the field a force four times its number with which he was attacking''

''முஹம்மத் (ஸல்) அவர்களையும் முந்நூறு நபித்தோழர்களையும் சந்திக்க 'பனூ கைனுக்கா' கூட்டமே போதுமானதுதான். ஆனால் இக்கூட்டத்தினரின் சகோதரக் கூட்டத்தவரோ இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படைபோன்று நான்கு மடங்குக் கூட்டத்தைத் திரட்டுவதை எளிதாகச் செய்து விட்டனர்.''

அப்படியிருந்தும் 'பனூ கைனுக்கா' கூட்டம் முஸ்லிம்களோடு போராடத் துணியவில்லை. அவர்கள் மதீனா ஒப்பந்தத்தின் ஒரு சட்டப் பிரிவை ஏற்றிருந்தனர். அப்பிரிவு ''நம்பிக்கைக் கொண்டோர் இறைவனை அஞ்சி அவனுக்குக் கீழ்ப்படிவதால் நிலைத்திருக்கும் உறுதி கொண்டுள்ளனர்; இறைவனிடமிருந்து வழிகாட்டுதலும் பெறுவர்'' எனக் கூறுகிறது.

இப்படிப்பட்ட இறைநம்பிக்கையாளர்களை எவ்வாறு அவர்களால் போர்க்களத்தில் எதிர்கொள்ள இயலும்? குழப்பம், கலகம், நம்பிக்கைத் துரோகம், சதி ஆகியவற்றை மறைவாகச் செய்திட முடியும்; வாளோடு வாள் மோதி அவற்றைச் செய்ய முடியுமா?

உலக வரலாற்றில் யூதர்கள் இதில் முக்கியமானப் பங்கு வகித்து அதன் மூலமே வளம் பெற்றிருக்கின்றனர்.

போதிய எண்ணிக்கையிலும் இராணுவ பலத்திலும் இருந்த யூதர்கள் மதீனா தேச அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்ததற்கு ஒரேயொரு காரணம், முஸ்லிம்களை வன்முறையில் சந்திக்காமல் அவர்களுக்குள்ளிருந்தே குழப்பங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். உலக வரலாற்றில் இவர்கள் இவ்வாறு சாதித்த சாதனைகளே ஏராளம்.

எனவேதான் யூதர்கள் மக்கா தேசக் குறைஷிகளோடு தொடர்பு வைத்திருந்தார்கள். யூதர்களின் சரணாகதிக்குச் சில நாட்களுக்குப் பின்பு அபூ சுஃப்யான் இரவோடு இரவாக மதீனா தேசம் நோக்கிப் படையெடுத்து வந்தார். ஆனால் 'பனூ கைனுக்கா'வின் சரணாகதியைக் கேள்விப்பட்டதுமே விரைவாகப் பின்வாங்கிச் சென்றுவிட்டார்.

யூதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டு இருந்தபோது, அபூ சுஃப்யான் தன் பயணத்தைத் துவக்கியிருக்கக்கூடும்.

யூதர்கள் விரைவாகவே சரணடைந்தது அவருக்குப் பெரும் ஏமாற்றமளித்தது. அவர் துரத்தப்பட்டார். ஆனாலும் கொண்டு வந்திருந்த 'பார்லி' மூடைகளைத் தூக்கி எறிந்து விட்டுப் படைகளுடன் தப்பி ஓடிவிட்டார். எனவே இப்படையெடுப்பு 'கஜ்வத்து ஸவீக்' எனப்படுகிறது. இங்கும் தன் தலைநகர் தாக்கப்பட்டதும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் போர்க்களம் புகுகிறார்கள் என்பது தெளிவாகிறது எதிரிகள் போரைத் தொடரவே விரும்பினார்கள். ஆகவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை அலட்சியம் செய்து தம் தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்துக் கொள்ளும் போக்கை விரும்பவில்லை. 'பனூ கைனுக்கா'வை முற்றுகையிட்டதன் மூலம் குழப்பங்கள் செய்யும் உள்நாட்டுச் சதிக்கு எதிராக விழிப்பாய் இருப்பதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னுதாரணம் காட்டி விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.

  1. கஸ்வத்து 'பனூ கைனுக்கா' (ரமலான், ஹிஜிரி 2 - கி.பி. 620)
  2. கஸ்வத்து ஸவீக், (ஷவ்வால் ஹிஜிரி 2)
  3. கஸ்வத்து 'பனூ சுலைம்' (ஷவ்வால், ஹிஜிரி 2)
  4. இரண்டாம் கஸ்வத்து 'பனூ சுலைம்' (துல்காயதா ஹிஜிரி 2)
  5. கஸ்வத்து 'பனூ கத்ஃபான்' (ரபியுல் அவ்வல், ஹிஜிரி 2)

மேற்கண்ட போர்கள் அனைத்தும் 'பத்ரு'ப் போர் முடிந்ததுமே நடைபெற்றன. அதோடு 'பனூ கைனூக்கா'வைத் தவிர அனைவருமே 'பனூ கத்ஃபான்' 'பத்ரு'ப் போரில் தோற்கடிக்கப் பட்டவர்கள். இம்மூன்று கூட்டத்தாரும் 'பத்ரு' போருக்குப் பின்பு மதீனாவோடு போரிட்டுக் கொண்டே இருந்தனர். குறைஷிகளும் அவர்களின் நேசக்கூட்டத்தாரும் தோல்வி அடைந்ததை அறிந்த 'பனூ கைனுக்கா' கூட்டத்தினர் கலகத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர்களின் கலகமும் அதைத் தொடர்ந்த மதீனாவின் மீதான படையெடுப்புகளும் நன்கு திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டன. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்தக் கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கூட்டத்தாரையும் தனித் தனியே எதிர்கொண்டு அக்கூட்டணியையே தோற்கடித்து விட்டார்கள். எதிரியைவிட எப்போதுமே விழிப்புணர்வில் ஒருபடி மேலிருப்பது, துல்லியமான தகவல்களைத் திரட்டுவது ஆகியவற்றில் முஸ்லிம் சமுதாயத்துக்கு இறைத்தூதர் (ஸல்)அவர்கள் முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார்கள். 'பனூ சுலைமும்' 'பனூ கத்ஃபானும்' சக்தி வாய்ந்த கூட்டங்கள். நாம் அலட்சியமாக இருந்து நேரமும் வாய்ப்பும் அளித்துவிட்டால் 'பனூ கத்ஃபான்' குழுவினர் ஆறாயிரம் வீரர்களைத் திரட்டி விடுவர் என்று கருதிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படையைத் திரட்டிட கால அவகாசமோ, வாய்ப்போ அவர்களுக்கு அளிக்கவில்லை. அக்கூட்டத்தார் தம் வீரர்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்தவுடனேயே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்று அவர்களைத் திணறடித்து விட்டார்கள். இருந்தாலும் இதனை முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறுவதும் பொருந்தாது. ஏனென்றால் 'பனூ சுலைமும்' 'பனூ கத்ஃபானும்' மதீனாவுக்கு எதிராக ஏற்கனவே பத்ரில் போரிட்டவர்கள். போர் இன்னும் முடிந்தபாடில்லை. இச்சிறு போர்களை இரண்டு தரப்பினருமே ஆக்ரமிப்பு என்றோ முன்கூட்டிய நடவடிக்கை என்றோ கூறி விட முடியாது.

இக்காலகட்டத்தில் மற்றுமொரு போர் நடவடிக்கை எடுக்கப் பட்டது. மக்காவுக்கு அருகேயுள்ள கடற்கரை நோக்கி நடத்தப்பட்ட படை அணிவகுப்புதான் அந்தப்போர். அப்போது எந்த எதிரியும் குறுக்கிடவில்லை. மக்காவின் எச்சரிக்கைகூட வெளிப்படவில்லை. அவர்களின் உணர்வைப் பரிசோதிக்கவும் தங்கள் பகுதிக்குள் நுழைந்து விட்ட எதிரிகளிடம் சவால்விடும் பலம் அவர்களிடம் உள்ளதா என்பதைக் கண்டறியவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போர் 'கஸ்வத்து பஹ்ரைன்' என அழைக்கப்படுகிறது. ஆனால் மக்காக் குறைஷிகள் வெளிவந்து மதீனாவின் படைகளை எதிர் கொள்வதில் விருப்பம் காட்டவில்லை.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இராணுவ உளவுப்படை ஒன்றை எப்போதும் தயாராக வைத்திருந்தார்கள்; அவர்கள் மக்கா பட்டாளத்தைப் பற்றிய இன்னும் அவர்களின் வணிக ஒட்டகங்கள் பற்றிய முழு விவரங்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். மதீனாவைத் தாக்குவதற்காக 'பனூ சுலைம்' கூட்டம் எடுத்த முயற்சிகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

இதேபோன்றுதான் 'பனூ கத்ஃபானி'ன் முயற்சிகளும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவ்வப்போது மக்காவுக்கு நேசமாக இருந்த நஜ்து தேசம் வழியாக மெசபட்டோமியாவுக்கு வணிக ஒட்டகங்களின் கூட்டத்தை அனுப்ப மக்காவாசிகள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது அவர்கள் அந்த வியாபார ஒட்டகங்களைப் பிடித்து வருமாறு ஜைத் இப்னு ஹாரிஸ்(ரலி) அவர்களை அனுப்பினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் இளமைக் காலத்தில் வணிகம் சென்ற பழக்கம் இருந்ததால் காலத்தையும், தொலைவையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டார்கள். ஜைத் (ரலி) அவர்கள் கராதாவின் சோலைகளை அடைந்தபோது அங்கு வியாபாரக் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அக்கூட்டத்தை வெற்றி கண்டு அவர்களின் பொருட்களை மதீனாவுக்கு எடுத்து வந்தார்கள்.

பஹ்ரைனுக்கு மதீனாவின் படைகள் பயணித்தன. சிரியாவுக்குச் செல்லும் வணிகப் பாதை மதீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; எனவே தங்களின் வணிக ஒட்டகங்கள் அவ்வழியில் பயணித்தால் கைப்பற்றப்படும் என்று நினைத்த குறைஷிகள், ''பயணம் கடினமாக இருந்தாலும் சரி, இலகுவாக இருந்தாலும் சரி நீங்கள் புறப்படுங்கள்!''

''உங்கள் உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போராடுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.'' (அல்குர்ஆன் 9:41)

அதே சமயத்தில் குறைஷிகள் தங்களின் பொருட்களைத் தம் கிட்டங்கியில் வைத்துக் கொண்டு சோம்பி இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து, சர்வதேசச் சந்தை இருக்கும் சிரியாவுக்குச் செல்ல மாற்றுப்பாதையான மெசபடோமியா வழியைத் தேர்வு செய்தனர். அது முன்பு சென்ற வழியைவிட அதிகத் தூரமுடையதாக இருந்தது; இருப்பினும் கூட அவர்கள் அதையே தேர்வு செய்தார்கள். ஏனென்றால் இப்போது குறைஷிகளுக்கு மதீனா தேசத்துப் படையை எதிர்க்கத் துணிவில்லாமல் போய்விட்டது. ஆனால் ஜைத்(ரலி) அவர்களின் வெற்றிகரமான முயற்சியால் குறைஷிகள் தேர்ந்தெடுத்த அந்த வழியும் அடைக்கப்பட்டு, குறைஷிகளின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ, அவரின் தளபதிகளோ எதிரிகளைச் சந்திக்க மதீனாவை விட்டும் வெளி வந்த தருணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒருமுறைகூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வரம்பு மீறவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் தம் படையோடு இறைக்கட்டளைக்கு இணங்கியே போரிடப் புறப்பட்டார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் நிகழ்ந்த முதல் போர் 'பத்ரு'ப் பெரும் போர். ஆனால் இதற்கு முன்னரே படையெடுத்துவந்த மக்காவின் சுமார் 300 வீரர்களோடு சுமார் 60 பேர் கொண்ட முஸ்லிம்கள் இரத்தச் சேதமின்றி மோதியிருக்கின்றார்கள்.

முஸ்லிம்கள் தங்களைவிடப் பன் மடங்கு பெரிய படைக்கெதிராகப் போரிட்டு அவர்களைத் தோற்கடித்து ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். எவ்வளவு சிறிய படையாக இருந்தாலும் பெரும்படையோடு வரும் எதிரிக்குப் புறமுதுகு காட்டியவர்களாக அவர்கள் ஒருபோதும் ஓடியதில்லை. அவர்களுக்கு இதில் நிலைத்திருக்கும் உறுதியை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவர்களுக்கு இந்தப் பண்புகள் அமையப்பெற்றன.

நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி