முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வெள்ளி, 27 மார்ச், 2009

இமாம் அபூ ஹனீஃபா அன் நுஃமான் (ஹிஜ்ரி 80-150)

இமாம் அபூ ஹனீஃபா அன் நுஃமான் (ஹிஜ்ரி 80-150) இன்றைக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ஏதாவதொரு மத்ஹபின் வழிமுறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத ஒன்று. ஆனால் அவர்கள் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளுக்கு மாற்றமில்லாதிருந்தால் அவை விவாதத்திற்கிடமின்றி அவற்றைப் பின்பற்றுவதில் எந்தத் தவறுமில்லை.
இன்றைக்கு அதிகமான முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் மத்ஹபுகளாவான : அபூ ஹனீஃபா, மாலிக் இப்னு அனஸ், முஹம்மது இப்னு இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ, அஹ்மது இப்னு ஹம்பல் ஆகியோர்களின் மத்ஹபுகளாகும்.
இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் குணச் சிறப்பியல்புகளைப் பார்ப்போம். இவருடைய பெயரால் அழைக்கப்படும் மத்ஹபுகள் இந்திய துணைக்கண்டம், மற்றும் துருக்கி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவிலன் பல பகுதிகளிலும் பரவி நிற்கின்றன.
அபூ ஹனீஃபா அன் நுஃமான் அவர்கள் ஈராக்கின் கூஃபா என்னும் நகரில் ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு பிறந்தார்கள். இவர் நேர்வழி பெற்ற அந்த நபித்தோழர்களின் இரண்டாவது சந்ததியில் பிறந்த சிறப்புக்குரியவராவார். இன்னும் அவர் சில நபித்தோழர்களிடமும், இன்னும் நபித் தோழர்களுக்குப் பின் வந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடமும் நேரடியாகக் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். இன்றைக்கு ஃபிக்ஹு என்றழைக்கக் கூடிய இஸ்லாமிய மார்க்க விளக்கச் சட்டங்களை முதன் முதலாகத் தொகுத்தளித்த பெருமை, இமாம் அபூ ஹனீஃபா அவர்களையே சாரும். இவற்றை அவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஆதார ஒளியில் திரட்டினார்கள்.
காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு மார்க்கக் கல்வி அளித்தது, போக பகல் நேரங்களில் அவர் ஒரு வெற்றிகரமான வியாபாரியாக விளங்கினார். மார்க்கக் கல்வியை போதிக்கும் ஆசிரியராகவும், வியாபாரியாகவும் சிறந்த முறையில் விளங்கினார், அவற்றில் தனது தனி முத்திரையைப் பதித்தார். வியாபாரத் தொடர்புகளை நேர்மையான முறையில் மட்டுமல்ல, நியாயமான முறையிலும், கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாகவும் நடந்து கொண்டார். வியாபாரத்தில் பெறப்படும் லாபம் நியாயமானதாக இருந்தாலும் கூட, தனது மனதுக்கு அது சங்கடத்தைத் தரும் என்றால், அத்தகைய லாபத்தைக் கூட பொறுத்தத்தாது அதனைத் தவிர்த்து விடுவார்.
ஒருமுறை பெண் அவரது கடைக்கு வந்து, தனது பட்டு உடையை விற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விற்றுத் தருவதாக வாக்களித்த அபூ ஹனீஃபா அவர்கள் அதன் அடக்க விலை குறித்து அந்தப் பெண்மணியிடம் கேட்ட பொழுது, அந்தப் பெண் 100 திர்ஹம் என்று கூறினார். ஆனால் அபூ ஹனீஃபா அவர்களோ, இந்த ஆடை அதனை விலை போகக் கூடியது என்று கூறி, அவர் கண் முன்பே 500 திர்ஹம்களுக்கு விற்று, அந்தப் பணத்தை அந்தப் பெண்ணுக்கு வழங்கினார்.
இன்னொரு முறை, தனது வியாபாரப் பங்குதாரரிடம் ஒரு குறிப்பிட்ட துணியைக் காட்டி, இதில் சில குறைபாடுகள் உள்ளன. எனவே, இதனை விற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த பங்குதாரரோ ஏதோ மறதியில் அந்த குறிப்பிட்ட ஆடையை விற்று விட்டார். இதனை அறிந்த அபூ ஹனீஃபா அவர்கள் அன்றைய வியாபரம் முழுவதையும் தானமாக வழங்கியதோடு, அந்த தொழில் பங்குதாரரரை நீக்கியும் விட்டார்.
ஆசிரியராகக் கடமையாற்றிய அபூ ஹனீஃபா அவர்கள், உதவி தேவைப்படக் கூடிய மாணவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் அவர்கள் தங்களது கவனத்தைக் கல்வி கற்பதில் செலவிட வைத்தார். இவரது இந்த உதவியின் மூலம் மாணவர்களை மட்டுமல்ல, மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களையும் உருவாக்க முடிந்தது. எப்பொழுதெல்லாம் அவர் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஆடைகள் வாங்குகின்றாரோ, அப்பொழுது தனக்குத் தெரிந்த மார்க்க அறிஞர்களுக்கும் சேர்த்தே ஆடைகளை வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
குறிப்பாக அவரது தாராள குணம் நகரெங்கும் அறிந்த ஒன்று என்பதால், மக்களை தங்களது தேவைகளுக்காக அவரை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருநாள் அபூ ஹனீஃபா அவர்கள் ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு மனிதர் அபூ ஹனீஃபா அவர்களைப் பார்த்து விட்டு ஒளிந்து கொள்ள முயற்சி செய்தார். இதனைப் பார்த்து விட்ட அபூ ஹனீஃபா அவர்கள் அந்த நபரை அழைத்து, ''என்னைப் பார்த்ததும் நீங்கள் ஏன் ஒளிந்து கொள்ள முயற்சி செய்கின்றீர்கள்?'' என்று வினவினார்கள். அதற்கு அந்த நபர் தங்களிடம் நான் 10 ஆயிரம் திர்ஹம்களை வாங்கினேன். அதனைக் குறிப்பிட்ட தவணையில் என்னால் செலுத்த முடியவில்லை. அதன் காரணமாகத் தான் நான் ஒளிய நேரிட்டது என்று கூறினார். இதனைக் கேட்ட அபூ ஹனீஃபா அவர்கள் அந்தக் கடனை ரத்து செய்ததோடு, தங்களுக்கு நான் மிகவும் சிரமம் கொடுத்து விட்டேன் இன்னும் உங்களது உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம்.
மிகச் சிறந்த இஸ்லாமிய வாழ்க்கையை மேற்கொண்ட இமாம் அவர்கள், மக்களுடன் இரக்கத்துடனும் கனிவுடனும் நடந்து கொண்டதோடு, மக்கள் தொடர்பில் மிகச் சிறந்து விளங்கினார்கள். உடல் நலமில்லாதவர்களை அணுகி விசாரிப்பது, யாரையாவது பார்க்க இயலா விட்டால் அவரைப் பற்றி விசாரிப்பது போன்ற நற்குணங்களை தன்னுள் வளர்த்து வந்தார்.
ஒருமுறை இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்கார குடிகாரருக்கும் நடந்த சம்பவம் மிகவும் சுராஷ்யமானதொன்று. அந்த பக்கத்து வீட்டுக் குடிகாரர் எப்பொழுதும் குடித்து விட்டு, இரவு நேரங்களில் சப்தம் போட்டு பாடிக் கொண்டு, இவரை அதிகம் தொந்திரவு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு அந்தப் பக்கத்து வீட்டில் இருந்து எந்தப் பாட்டுச் சப்தமும் வரவில்லை, நிசப்தமாக இருந்தது. மறுநாள் காலை அவரைப் பற்றி விசாரித்த பொழுது, அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதாகத் தகவல் வந்தது. இதனை அறிந்த மாத்திரத்தில் அபூஹனீஃபா அவர்கள் அந்தப் பகுதி கவர்னரிடம் சென்று, அந்தக் குடிகாரருக்காக வாதாடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்ததோடு, அவர் சிறையில் இருந்த நாட்களில் ஏற்பட்ட பொருளாதார நஷ்டத்தை ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி செய்தார். அபூ ஹனீஃபா அவர்களின் இந்தப் பேருதவி, அந்த குடிகாரரைச் சிந்திக்க வைத்தது. இவர் மீது பெருமதிப்புக் கொள்ள வைத்தது. அடுத்த நாள் முதல் இது நாள் வரை தான் செய்து வந்த பாவச் செயலுக்கு பிராயச்சித்தமாக, இஸ்லாமியக் கல்வியைக் கற்பதில் தனது நேரத்தினைச் செலவு செய்ய முடிவெடுத்த அவர், அபூ ஹனீஃபா அவர்கள் பள்ளிவாசலில் நடத்தி வரக் கூடிய இஸ்லாமிய வகுப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.
எங்கே நாம் தவறிழைத்து விடுவோமோ என்று அவர் பயந்ததன் காரணமாக, கலீஃபாக்களும், கவர்னர்களும் அவரை நீதிமன்ற நீதிபதியாகவும், முக்கிய பொறுப்புக்களில் அமர்த்திய பொழுதும் அவர் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதன் காரணமாக கலீஃபா ஜாஃபர் அல் மன்சூர் அவர்கள் இவரைச் சிறையிலும் அடைத்தார். அந்தச் சிறையிலேயே ஹிஜ்ரி 150 ல் மரணமடைந்தார்.
ஆட்சியும் அதிகாரமும் அவரை நான்கு சுவர்களுக்குள் அடைத்து அவரது உயிரைப் போக்கினாலும், இன்றைக்கு உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் அவரது சேவையை நினைவு கூர்ந்து கொண்டிருப்பதோடு, இஸ்லாமிய வரலாறு அவரை என்றென்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி