முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 30 ஏப்ரல், 2009

முஸ்லிம்களுக்கெதிரான பொருளாதார சவால்கள்

இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இந்த முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். (முஃப்தி தகி உஸ்மானீ - உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை)
19 ஆம் நூற்றாண்டானது அரசியல் அடக்குமுறை ஆண்டாக, இந்த நூற்றாண்டில் பலமிக்க மேற்குலக நாடுகள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளையும், இன்னும் பல முஸ்லிம் நாடுகளையும் அடக்கி தங்களது அடிமை நாடுகளாக பிரகடனப்படுத்திக் கொண்ட நூற்றாண்டாக இருந்தது. கடந்த 20 ம் நூற்றாண்டு முடிந்து விட்டாலும், அந்த நூற்றாண்டில் பல நாடுகள் தொடர்ச்சியாக அவற்றின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டன. இருப்பினும், இந்த நாடுகளுடன் முஸ்லிம் நாடுகளும் விடுதலை அடைந்தாலும் அந்த விடுதலையின் மூலம் அரசியல் சுநத்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும், இன்னும் நாம் கருத்துச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவற்றில் நாம் சாதிக்க வேண்டியதிருக்கின்றது, சொல்லப் போனால் நாம் அவற்றை இன்னும் அடைந்து கொள்ளவில்லை. எனவே, பெற்று விட்ட அந்த அரசியல் சுதந்திரத்தை இன்றைக்கும் இந்த முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்க இயலாமல் இருந்து வருகின்றது.
இன்றைக்கு முஸ்லிம் உலகு புதிய நூற்றாண்டை புதிய பல எதிர்பார்ப்புக்களுடன் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றி வாழத் துடித்துக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நேரத்தை அது எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நோக்கங்களை கனவுகளின் ஊடாக நாம் அடைந்து விட முடியாது. நமது நோக்கங்களை அடைய வேண்டுமானால், அதற்கான கடின உழைப்புத் தேவை, அந்த உழைப்பானது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் கொடுத்த விலையை விட அதிகமாகக் கொடுக்க வேண்டியதிருக்கின்றது. நம்முடைய முழுத் திட்டங்களையும் நாம் மீள் பரிசோதனை செய்தாக வேண்டும், முழுமையான திட்டங்களுடன், கூட்டாக இணைந்து, அதனை புரட்சி மனப்பான்மையுடன் அணுகி, நமது நோக்கங்களை சாதிக்கப் புறப்பட வேண்டும். இங்கே, நாம் செய்யக் கூடிய பணிகள் குறித்து, இருவித தலைப்புகளில் உங்களுடன் உரையாட விரும்புகின்றேன்.
நமக்கு நாமே உதவி
நமது பொருளாதார திட்டங்களை மறுகட்டமைப்புச் செய்வது
நமக்கு நாமே உதவி
நம்முடைய பிரச்னையின் வேர்கள் எங்கிருக்கின்றது என்றால், நாம் நம்முடைய பொருளாதாரத் திட்டங்களுக்குப் பிறரை நம்பி இருப்பதில் இருந்து கொண்டிருக்கின்றது. நம்மில் பலர் மேற்கத்திய நாடுகளிடம் அதிகமான அளவில் கடன்களைப் பெற்றிருக்கின்றோம். இன்னும் சில நாடுகள், தமது உள்கட்டமைப்பு வளர்ச்சி மட்டுமல்ல, அன்றாடச் செலவினங்களுக்குக் கூட மேற்கத்திய நாடுகளைச் சார்ந்து இருந்து கொண்டிருக்கின்ற நிலை தான் நம்மிடம் காணப்படுகின்றது. இங்கே மிகவும் வருத்தத் தக்க செய்தி என்னவென்றால், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு உண்டான வட்டி செலுத்தப்படாமல், அந்த வட்டியுடன் முதலும் வளர்ந்து கொண்டிருக்க, மேலும் மேலும் கடனை வாங்கிக் குவித்து, அதனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையைத் தான் காணுகிறோம்.
நம்முடைய பொருளாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாடுகளை எதிர்ப்பார்ப்பதே ஒரு வியாதியாகும், அது நம்முடைய பொருளாதாரத்தைச் சூறையாடுவது மட்டுமின்றி, அது நம்முடைய சுயாதிக்கத்தையும் இன்னும் நம்முடைய தேவைகளைக் கூட அவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகும் நிலைக்கும் நாம் தள்ளப்படுகின்றோம், சில நேரங்களில் நம்முடைய சுயலாபங்களுக்காக அந்த விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கின்றது. இந்த கடனளிப்பவர்கள், கடனை நமக்குக் கொடுப்பதற்கு முன்பே நம் மீது அவர்களது சொந்த விதிமுறைகளை நம்மீது திணிப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. இந்த விதிமுறைகள் தொடர்ச்சியாக நம்மை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விடுகின்றது, மேலும் நம்முடைய சுயதேவைகளைக் கூட விட்டுக் கொடுத்து, அவர்கள் இடும் கட்டளைகளுக்குப் பணிந்து போகும் நிலைதான் அங்கு உருவாகின்றது. கடனுக்காக அந்நிய நாடுகளைச் சார்ந்திருப்பதன் காரணமாக, எழக் கூடிய தீமைகளை நான் பெரிதாகப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லாத ஒன்று.
அதிகபட்ச தேவைகளின்றி, கடன் வாங்குவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை, கடனில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு முஸ்லிம்களை அறிவுறுத்துகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை, கடன் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத ஒருவரது ஜனாஸாவுக்கு தொழுவிக்க மறுத்து விட்ட நிகழ்வு நமக்கு, சிறந்ததொரு பாடமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இன்னும், முஸ்லிம் ஆட்சியாளர் ஒருவர், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளரிடமிருந்து பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாமா? என்பது பற்றி அறிஞர் பெருமக்கள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள். அதற்கான பதில் : அவ்வாறு பெறக் கூடிய பரிசுப் பொருட்களின் மூலம், முஸ்லிம் சமுதாயத்தின் மீது எந்த வித நிர்ப்பந்தத்தையும் திணக்கும் நோக்கம் இருக்கக் கூடாது.
அந்நியர்களிடம் கடன் பெற்றுக் கொள்வதை, இஸ்லாமிய சட்ட வழிமுறைகள் தடை செய்கின்றன, அவ்வாறு கடன் பெற்றுத் தான் வாழ முடியும் என்ற கஷ்டமான நிலை இருந்த போதிலும், அதனைத் தவிர்ந்து வாழவே முயற்சிக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நாம் பட்டிருக்கக் கூடிய கடனானது, நம்மிடம் வளங்கள் இல்லை என்பதனால் விழைந்ததல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் என்றுமே வளங்கள் இல்லாமல் இருந்ததில்லை. அவர்களிடம் இயற்கையின் வளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இன்னும் இந்த பூமிப் பந்தின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் மீது நாம் வீற்றிருக்கின்றோம். இடையே இந்தியாவையும், இஸ்ரேலையும் தவிர்த்து, இந்தோனேஷியா முதல் மொராக்கோ வரை நம்முடைய தேசம் விரிந்திருக்கின்றது. உலகின் எண்ணெய்த் தேவையில் 50 சதவீதத்தை நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம். உலகின் கச்சாப் பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒன்றை நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றொம். இன்னும் சொல்லப் போனால், மேற்குலகில் முதலீடு செய்திருக்கின்ற தொகையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாம் பட்டிருக்கின்ற கடன்களை அடைத்து விடலாம்.
சமீபத்திய இஸ்லாமிய வளர்ச்சி வங்கி (ஐனுடீ-ஐளடயஅiஉ னுநஎநடழிஅநவெ டீயமெ) யின் அறிக்கையின்படி, கடந்த 1996 ல் உறுப்பினர்கள் பெற்றுள்ள கடன் தொகையானது 618.8 பில்லியன் டாலர்களாகும். இதே நேரத்தில், மேற்கண்ட தொகையை விட அதிகமான இருப்பை, இஸ்லாமிய உலகானது மேற்குலகில் சொத்துக்களாக வைத்திருக்கின்றது. இந்த புள்ளி விபரமானது, மிகச் சரியானது என்று சொல்ல இயலாது. ஏனெனில், சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அதனை வெளியிட மாட்டார்கள் என்பதனாலாகும். இருப்பினும், பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின்படி, 800 லிருந்து 1000 பில்லியன் டாலர்கள் மதிப்பளவுக்கு மேற்குலகில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த வளைகுடா யுத்தத்திற்குப் பின்பு, இதில் 250 பில்லியன் டாலர் அளவுக்கு, அரபுக்கள் மேற்குலகிலிருந்து எடுத்து தங்களது சொந்த நாடுகளுக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். நடப்பது என்னவென்றால், நாம் முதலீடு செய்திருக்கின்ற தொகையை நாமே, அதிக வட்டி கொடுத்து கடனாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.
மேலே நாம் காட்டிய புள்ளி விபரங்கள் அதிகப்படியானதாக இருந்தாலும் கூட, நம்முடைய வளங்களை நாமே முறையாகப் பேணிக் கொள்வதன் மூலம், இந்த முஸ்லிம் சமுதாயம் பிறரிடம் கையேந்தாத நிலைக்குக் கொண்டு வர முடியும், இன்றைக்கு இந்த முஸ்லிம் உம்மத் 600 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்காது என்பதே உண்மையாகும். நம்மீது இருக்கின்ற இந்த அந்நியக் கடன் சுமையானது, யாரும் நம் மீது சுமத்தியதல்ல, மாறாக, நாமே தேடிக் கொண்டது. நம்முடைய வளங்கள் நம்மை விட்டு ஏன் சென்று விட்டன என்பதைப் பற்றி நாம் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. இந்தக் காரணிகளைக் களைவதற்கு நாம் என்றுமே முயற்சி எடுத்ததுமில்லை, சுய சார்புக்கான நம்பிக்கையை நம் மக்களிடம் ஏற்படுத்தியதுமில்லை. மோசடியான மற்றும் அடக்குமுறை மிக்க வரிவிதிப்புகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை. முதலீடுகளின் மீது அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த முயன்றதில்லை. இன்னும் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையையும் நாம் பேணிக் கொள்ளவில்லை. நம்முடைய வளங்களை எவ்வாறு லாபமான ரீதியில் பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி நாம் கவலைப்பட்டதுமில்லை, இவை அனைத்தையும் விட இஸ்லாமிய அடிப்படையிலான ஒற்றுமையை நம்மிடையே விதைப்பதற்கு நாம் தவறி விட்டோம், இன்னும் சுகாதாரமிக்க எழுச்சி மிக்க இஸ்லாமிய உம்மத்தை அதன் மூலம் கட்டமைக்கத் தவறி விட்டோம்.
நம்முன் இருக்கின்ற இந்த சவால்களைச் சந்தித்து, நமது பின்னடைவுகளைச் சரி செய்வதற்கு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தினை அதிகபட்ச செலவினங்கள் மூலம் கொண்டாடுவதன் மூலம் சீர் செய்ய முடியாது. இந்த சவால்களை நாம் மிகவும் தீவிரமானதொன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பொருளாதார மற்றும் அரசியல் தலைமைகள், அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நம்மை விடுவித்து, சுயசார்புள்ளவர்களாக எவ்வாறு மாற்றம் பெறுவது என்பது பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். இதற்கு அடிப்படையான வளங்கள் நம்மிடைய இருக்கின்றன. இப்பொழுது நம்முடைய தேவை என்னவென்றால், இந்த உம்மத்தின் வளங்களை ஒருங்கிணைத்து, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான புதிய யுக்திகள் தேவைப்படுகின்றன, இன்னும் நமக்கிடைய சகோதரத்துவமும் வளம் பெற வேண்டியதிருக்கின்றது, இன்னும் பரஸ்பர புரிந்துணர்வுகள் மற்றும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்றது.
திருமறை கூறுகின்றது :
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே..!
இன்றைய முஸ்லிம் உம்மத் ஓருடலாகச் செயல்படுவதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை, இந்த உம்மத் உயிர்காப்பு மருந்தைப் போல தங்களுடைய சிந்தனையில் ஏற்றிக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் எழுந்திருக்கின்றது. புவியியல் எல்லைக் கோடுகள் - அவர்களைப் பல்வேறு நாட்டவர்களாகவும், எல்லைப் பிரச்னையில் மூழ்கிக் கொண்டுள்ளவர்களாகவும் பிரித்துப் போடக் கூடாது. நாட்டின் எல்லைக் கோடுகள் யாவும் உள்நாட்டு விவகாரங்களையும், நிர்வாகச் செயல்பாடுகளுக்காகவுமே இருக்க வேண்டும். இவை அனைத்தையும் விட, அனைத்து முஸ்லிம் நாடுகளும் நம்மிடையே நிலவுகின்ற பொதுப் பிரச்னைகளுக்காக, நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் காப்பது நம்முடைய கடமை என்ற பொது நல அடிப்படையில் ஒன்றுபட வேண்டும், அதனைப் போல உலக ரீதியாக சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பொதுநல அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.
நம்மை விட்டுச் சென்று விட்;ட காலங்களில், தொழில் கண்டுபிடிப்புகள் எவ்வாறு தனிநபர் ஆதிக்கமாக மேற்குலகில் காணப்பட்டன என்பதை அறிவோம். இப்பொழுது, இன்றைய உம்மத் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தொழிற் பிற்போக்குத் தனத்தை சரி செய்வதற்கு, அவற்றை சீர்படுத்தக் கூடிய திறமையான முஸ்லிம்கள் தேவைப்படுகின்றார்கள். அந்த திறமைகள் நமக்கு எதற்குத் தேவைப்படுகின்றதென்றால், நம்முடைய உம்மத்திற்கு சேவை செய்வதற்காகவும், அதனூடாக இஸ்லாமியப் பிரச்சாரம் மேலோங்குவதற்காகவும் தான்.
அந்த சேவையின் மீது அழைப்புப் பணியின் அடையாளம் இருக்க வேண்டியது அவசியம் என்பதுமாகும். இதற்கான முழு ஒத்துழைப்பும் நமது தலைவர்களிடம் இருந்து வர வேண்டும். இதுவே அந்தத் தலைமைகள் சந்திக்கவிருக்கக் கூடிய மிகப் பெரிய சவாலாகவும் இருக்கும். இதனை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும், அது இந்த உம்மத்திற்காக மட்டுமல்ல, அவர்களது அரசியல் வாழ்வும் கூட இதில் அடங்கி இருக்கின்றது. இதில் நீங்கள் அதிகக் கவனமும், பொறுப்பும் எடுத்துச் செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றீர்கள், (ழுஐஊ) ஓஐசி என்ற இந்த இயக்கத்தின் தோள்களின் மீதும் இந்தச் சுமை இருக்கின்றது, இதற்கான ஆரம்பத்தை நாம் தொடங்க வேண்டும், முஸ்லிம்களின் திறமைகளை ஒன்றிணைத்து, அதற்குப் புதிய செயல்வடிவம் கொடுத்து, அதனை நம்முடைய உம்மத்திற்காக ஒன்றிணைந்து நாம் வழங்க வேண்டும்.
நமது பொருளாதார திட்டங்களை மறுகட்டமைப்புச் செய்வது
20 ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸம் கோலோச்சியது, கம்யூனிஸத்தின் எழுச்சியின் காரணமாக, கம்யூனிஸத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே போர் மூண்டது, இதில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது. கம்யூனிஸத்தின் வீழ்ச்சியை அவர்களது பரிசோதனையில் வெற்றி பெற்றதனைப் போல அதனைக் கொண்டாடினார்கள், அது மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வெற்றி பெற்றதாக முதலாளித்துவ வாதிகள் அதனைக் கொண்டாடினார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது அதிருப்தி கொண்டவர்கள், அதன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக உருவாக்கியது தான் கம்யூனிஸம், குறிப்பாக, வளங்களைப் பங்கிடுவதில் காட்டப்பட்ட பாகுபாட்டின் காரணமாக, இந்தப் பாகுபாடு நூற்றாண்டு நெடுகிலும் இந்த முதலாளித்துவத்தில் ஊறி வந்திருப்பதும், கம்யூனிஸத் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
கம்யூனிஸம் இப்பொழுது வீழ்ந்து விட்டதன் காரணமாக, முதலாளித்துவத்தினிடம் உள்ள கேடுகள் யாவும் நியாயமானவைகளாக ஏற்றுக் கொள்ள இயலாது. அதனைவிட, முதலாளித்துவத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட இன்னுமொரு கொள்கையான கம்யூனிஸத்திடம் உள்ள குறைபாடுகளே காரணமாகும் என்றே கருத வேண்டும். இன்றைக்கு முதலாளித்துவம் வளங்களைப் பங்கிடுவதில் காட்டுகின்ற பாகுபாடுகள், அதனுடைய பொருளாதாரத்தில் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது, வறுமை என்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. இந்த வறுமை என்பது முதலாளித்துவம் தோற்றுவித்த பிரச்னைகளில் தலையாயது, இதனை அவர்கள் தீர்க்கவில்லையென்றால், கம்யூனிஸத்தை விட இன்னொரு வேகமான கொள்கை ஒன்று, இதனை எதிர்த்து பிறப்பெடுக்கலாம்.
இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இந்த முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். இன்றைய உலகு சந்தித்துக் கொண்டிருக்கின்ற மிகப் பெரும் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைவதற்கு, திருமறைக் குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட திட்டங்களினால் முடியும். அதில் தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் (ஆழnழிழடல), சந்தைப் பொருளாதாரம், இன்னும் வளங்களைப் பங்கிடுவதில் நீதமாக நடந்து கொள்வதற்கான சட்ட திட்டங்கள், இவை அனைத்திலும் பாரபட்சப் போக்கைக் களைந்து, அனைவரும் சமூக நலன் கருதி லாப நோக்கோடு தொழில் முனைப்புக் காட்டும் திட்டத்தை கொண்டு வர முடியும்.
கம்யூனிஸத்தின் எழுச்சி எவ்வாறு உருவானதெனில், முதலாளித்துவத்தில் காணப்பட்ட பாரபட்சப் போக்கின் உத்வேகத்தினால் எழுந்தது, அதன் காரணமாகவே தனியார் ஆதிக்கம் (ஆழnழிழடல), சந்தைப் பொருளாதார சக்திகள் ஆகியவை மறுக்கப்பட்டு, கம்யூனிஸப் பொருளாதாரம் என்ற அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற இயற்கைக்கு முரணான பொருளாதாரத் திட்டம் உருவானது, இந்தத் திட்டம் செயற்கையாகவே செயல்பட்டது, அடக்குமுறையாகவும் இருந்தது. தனிப்பட்டவர்களின் சுதந்திரம் பறிபோன போது, உற்பத்திக் குறைவை ஏற்படுத்தியது, அரசின் மிதமிஞ்சிய அதிகாரமானது அதிகாரமிக்கவர்களின் கையில் ஆடும் பொம்மைகளைப் போல மக்களின் நிலையை உருவாக்கி விட்டது.
முதலாளித்துவத்தின் பாரபட்சப் போக்கிற்கான அடிப்படைத் தவறுகளாக தனியார் ஆதிக்கம் (ஆழnழிழடல) மற்றும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவை மட்டும் காரணமல்ல. அங்கே காணப்படுகின்ற பாரபட்சத்திற்குக் காரணம் என்னவெனில், நீதமான அல்லது அநீதமான சம்பாத்தியம் ஆகியவற்றுக்கு இடையேயான வரைவிலக்கணம் என்ன என்பதும், அதுவே அந்த பாரபட்சப் போக்கிற்கு அடிப்படையுமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதினாலாகும்.
இதில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற வட்டி, சூது, நிச்சமற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயனீட்டாளர்களின் அநீதமான ஆசையை உருவாக்குவதன் மூலம் அதிக லாபம் ஈட்டுதல் ஆகியவை அனுமதிக்கப்படுதல், இவை யாவும் சுய ஆதிக்கத்திற்கு வழிவகை செய்கின்றன, இன்னும் தேவையின் பொழுதும் இன்னும் உற்பத்தியை வழங்கும் பொழுதும் அவற்றின் இயக்கங்களை செயலிழக்கச் செய்து விடுகின்றது. அவற்றின் இயற்கையான நடவடிக்கைகளில் தலையிட்டு, அவற்றின் இயக்கங்களை தடுத்து நிறுத்துவதோடு, சுயஆதிக்கம் (ஆழnழிழடல) காரணமாக, லாபம் ஒன்றே பிரதானம் என்ற போதையை உருவாக்கி விடுகின்றது.
இன்னும் வட்டியானது, பணக்கார தொழில் அதிபர்களுக்கும் மிகவும் வசதியானதொன்றாக இருக்கின்றது. இவர்கள் பொதுமக்கள் வங்கிகளில் இட்டு வைக்கும் சேமிப்பில் இருந்து கிடைக்கக் கூடிய வருமானங்களை தங்களது வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். வங்கிகளில் இட்டு வைக்கும் தொகைகளின் மூலமாக மிகப் பெரும் லாபம் சம்பாதிக்கும் அதேவேளையில், அந்த லாபத்திலிருந்து ஒரு சிறு தொகையை ஏற்கனவே நிர்ணயித்திருக்கும் அளவில் வட்டியாக, முதலீட்டாளர்களுக்கு லாபமாக வழங்குகின்றார்கள். இன்னும் அந்த வட்டியின் மூலம் கிடைத்த அந்த சிறு வருவாயையும், உற்பத்திச் செலவினமாக அவர்களிடமிருந்தே மீண்டும் பெற்றுக் கொண்டு விடுகின்றார்கள். இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், பொது மக்கள் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் தொகைகளை, இந்தப் பணக்காரர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு எடுத்துப் பயன்படுத்தி, அதன் மூலம் கொழுத்த லாபம் அடைந்து கொள்கின்ற அதேவேளையில், பணத்தை வங்கிகளில் வைத்திருப்பவர்களுக்கு எதனையும் லாபமாகக் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். அவர்கள் வட்டியாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்கின்ற லாபமானது, உற்பத்திச் செலவினமாக மீண்டும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுவதனால், முதலீட்டாளர் வெறுங்கையுடன் விடப்படும் அதேவேளை, முதலாளி கொழுத்த லாபத்திற்கு சொந்தக்காரராக மாறி விடுகின்றார். இதுவும் ஒரு சூதாட்டம் போன்றதே, பல நபர்களின் வளங்கள், சில நபர்களின் கைகளுக்கு மாறி விடுகின்றது, உழைக்காமல் வருகின்ற லாபத்திற்காக மனிதனிடம் அழிவிற்கான சிந்தைனை ஓட்டத்தைத் தூண்டுவதற்குக் காரணமாகின்றது. நிச்சயமற்ற வரவு செலவுகள், இயற்கையான சந்தைப் பொருளாதார இயக்கத்தில் தடங்களை ஏற்படுத்துகின்றன மற்றும் வளங்களைப் பங்கிடுவதில் பாரபட்சப் போக்கை உருவாக்குகின்றன.
இஸ்லாம் சந்தைப் பொருளாதாரத்தை வளர மட்டும் விட்டிருக்காது, இன்னும் அவற்றின் இயற்கைத் தன்மையோடு அதனை வளர விட்டிக்கும், ஏகாதிபத்திய (ஆழnழிழடநைள) போக்கை அது சாகடித்திருக்கும். இரண்டு விதமான பொருளாதார நடவடிக்கைகளை அது வளர அனுமதித்திருக்கும்.
முதலாவதாக,
வருமானங்கள் இறைவனின் கட்டளைகளின்படி பெறப்படக் கூடிய வழிமுறைகளை அது காட்டியிருக்கும். அது ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) மற்றும் ஹராம் (தடைசெய்யப்பட்டவை) என்ற இரண்டு வரையறைக்குள் கொண்டு வரப் பட்டிருக்கும். இந்த இரண்டு அடிப்படைகளும், ஏகபோக உரிமையையும், பாரபட்சப் போக்கையும், அநீதத்தையும், முறையற்ற வருமானத்தையும் மற்றும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டிருக்கும்.
இன்றைக்கு இருக்கின்ற நவீன பொருளாதார யுகத்தில், பொதுமக்களின் சேமிப்புகளை வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதோடு, அதனை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த முஷாராக மற்றும் முதாராபா ஆகியவற்றின் துணையோடு, வட்டிக்குப் பதிலாக, வளர்ச்சியினால் விளைந்த நன்மைகளை பொது மக்களே நேரடியாக அனுபவிக்கும் நிலையை உருவாக்குவதோடு, இதன் காரணமாக எழுகின்ற மறுமலர்ச்சியானது பணக்காரார்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைப்பதற்கும் வழி செய்யக் கூடிய நிலையை உருவாக்கும்.
இரண்டாவதாக,
இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான ஸக்காத் (ஏழைவரி) மற்றும் ஸதகாத் (விருப்பத்தின் அடிப்படையில் தர்மம்) ஆகியவற்றைக் கொண்டு பெறப்பட்ட ஹலாலான நிதிகளை, சந்தைப் பொருளாதாரத்தில் பங்கு பெற்ற இயலாதவர்களுக்கும், சம்பாதிக்க வழியற்றவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வழி ஏற்படுத்துகின்றது.
மேற்கண்ட இரண்டு முறைகளின் மூலமாக, பொருளாதாரமானது எல்லோருக்குமிடையிலும் சுற்றி வரச் செய்யப்படுகின்றது. ஒருவரிடம் மட்டும் குவிந்து கொண்டிருக்கின்ற நிலை மாற்றப்படுவதோ, அதற்கான சந்தர்பத்தின் வாசல்களும் கூட அடைக்கப்பட்டு விடுகின்றன.
மேற்கண்ட அனைத்து இஸ்லாமிய திட்டங்களும் எழுத்துருவில் தான் நம்மிடையே இருந்து கொண்டிருக்கின்றதே ஒழிய, நடைமுறை வாழ்வில் அவை நடைமுறைப்படுத்தப்படவே இல்லை, அதற்கான மாதிரி வாழ்க்கையை இந்த உலகத்திற்கு முஸ்லிம்கள் எடுத்துக் காட்டவே இல்லை. ஏன் முஸ்லிம் நாடுகள் கூட தங்களது பொருளாதார வளங்களை, இஸ்லாமிய அடிப்படையில் கட்டமைப்பதற்கு முயற்சிகளை எடுக்கவில்லை. நம்மில் பலர் இன்னும் இந்த முதலாளித்துவம் ஏற்படுத்தித் தந்த சட்ட திட்டங்களின் அடிப்படையைத் தான் பேணிக் கொண்டிருக்கின்றோம், இந்த அரைவேக்காட்டுத் தனமான திட்டத்தைப் பின்பற்றியதன் காரணமாக, முதலாளித்துவ நாடுகளில் விளைந்த பொருளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தியது தான் மிச்சமாகும். துரதிருஷ்டவசமாக, இஸ்லாமிய சட்ட திட்டங்களை நாம் பேணிக் கொள்ளாததன் காரணமாக, பாரபட்சப் போக்குகள் மற்ற மேற்கத்திய நாடுகளை விட நம்மிடம் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.
இத்தகைய இழிநிலையைத் தொடர அனுமதிக்கக் கூடாது. நம்முடைய வழிமுறைகளை நாம் தேடி அவற்றைப் அமுல்படுத்தாதிருந்தால், இயற்கையாகவே புரட்சிக்கான திட்டங்கள் உருவாகி, அது தனது பாதையைத் தானே தேடிக் கொண்டு விடும். அந்த புரட்சியின் காரணமாக எழக் கூடிய விளைவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பொருளாதார அடிப்படைகள் மீளாய்வு செய்யப் பட வேண்டும், அவற்றை திருமறைக் குர்ஆனின் அடிப்படையையும், சுன்னாவின் அடிப்படையைக் கொண்டும் கட்டமைக்க வேண்டும். நம்முடைய வெற்றியானது எதில் இருக்கின்றது என்றால், இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன், அவற்றின் வழிகாட்டுதலுடன் கூடிய முன்மாதிரிமிக்க பொருளாதாரத் திட்டத்தை இந்த நூற்றாண்டில் வழங்குவதன் மூலம், மனித சமுதாயத்திற்கு இந்த நூற்றாண்டில் இஸ்லாம் வழங்கிய மிகப் பெரிய பரிசாகவும் அளிப்பதில் தான் இருக்கின்றது. இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன் கூடிய பொருளாதாரத்தை நாம் மிகச் சரியானபடி வழங்கினோம் என்றால், கடந்த காலத்தில் நம்முடன் உலகு ஏற்படுத்திக் கொண்ட உறவை விட, மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையை நாம் காண்போம்.

முதலாளித்துவம் பற்றி முஹம்மத் குதுப்
வட்டியும், ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.
எனினும் இப்பிரச்னையைச் சிறிது ஆழமாக ஆராய்வோம். இயந்திரம் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியினை இஸ்லாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்கும்? வேலையையும் உற்பத்தியையம் இஸ்லாமிய சட்ட வாக்கங்களும் சட்டங்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தியிருக்கும்?
தொடக்கத்தில் முதலாளித்துவம் மனித சமுதாயத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியது என்பதில், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களிடையே – கார்ல் மார்க்ஸ் உட்பட – கருத்தொற்றுமை இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகையினால் உற்பத்தி பெருகிற்று. போக்குவரத்து தொடர்புகள் விருத்தியடைந்தன. தொழிலாள வர்க்கத்தினர் அநேகமான அல்லது முற்றாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த காலத்தை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
ஆனால் இந்தப் பெருமைமிக்க காட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் இயற்கையான வளர்ச்சி முதலாளிகளின் கைகளில் செல்வம் குவியவும், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் படிப்படியாக குறையவும் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டுகளின் நோக்கில் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களை பல்வேறு பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலாளிகள் உபயோகிக்க இயலுமாயிற்று. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலிகள் சீரான வாழ்க்கை நடாத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை. எல்லா லாபத்தையும் முதலாளிகளே சுரண்டிக் கொண்டு தம் ஊழல் மிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு அதனைச் செலவிட்டதே இதற்குக் காரணமாகும்.
அதுவுமன்றி, தொழிலாளர்களுக்குக் கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் அவர்கள் வாங்கி நுகரவும் இயலவில்லை. இதனால் மேலதிகமாக உற்பத்தியான பொருட்கள் சேர்ந்து குவியத் தொடங்கின. எனவே முதலாளித்துவ நாடுகள் தம் மேலதிக உற்பத்திப் பொருட்களை விற்பதற்குப் புதிய சந்தைகளைத் தேடின. இது, குடியேற்ற நாடுகள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. இதனால் பல்வேறு நாடுகளிடையே சந்தைகள் சம்பந்தமாகவும் மூலம் பொருள் வளங்கள் சம்பந்தமாகவும் இடையறாத சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. இவை அனைத்தினதும் விளைவு பேரழிவை ஏற்படுத்திய யுத்தங்களாகும்.
மேலும், குறைந்த கூலிகள் காரணமாகவும், அதிகரித்து வரும் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை நுகர்வு சொற்பமாகவும் இருப்பதனாலும் பொருளாதார தளர்ச்சி ஏற்படுவதனால் முதலாளித்துவ முறையானது அடிக்கடி நெருக்கடி நிலையை எதிர்நோக்குகிறது.
முதலாளித்துவ முறையின் குறைகள் அனைத்துக்கும் காரணம் முதலின் தன்மையாகும் என்றும் முதலாளிகளின் தீய எண்ணமோ அல்லது சுரண்டல் புத்தியோ அல்லவென்றும் உலகாதாய வாதிகள் கூறுகின்றனர். இத்தகைய அப்பாவித்தனமான, விசித்திர சிந்தனையின் பொருள், பல விதமான உணர்ச்சிகளையும் சிந்தனா சக்தியையும் கொண்ட மனிதன், பொருளாதார பலத்தின் எதிரில் கையாலாகாத – எதுவும் செய்யச் சக்தியற்ற – ஒரு படைப்பாளன் என்பதாகும்.
முதலாளித்துவம் முன்பு தேசியக் கடன்களிலேயே தங்கி இருந்தது. பின்பு இது வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தது. வங்கிகள், வட்டியைப் பிரதிபலனாகக் கொண்டு நிதி அலுவல்களை நடத்தியதோடு கடன்களையும் வழங்கின. இக்கடன்களும் வங்கிகள் ஈடுபடும் பெரும்பாலான வேறு பல அலுவல்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை.
ஒருபுறம், முதலாளித்துவத்தின் மற்றொரு அம்சமான கடும் போட்டி சிறு கம்பெனிகளை ஒழித்து விடுகிறது. அல்லது அவற்றை ஒரு பெரிய கம்பெனியாக இணைத்து விடுகிறது. இது ஏகபோக உரிமைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.
இஸ்லாம் ஏக போக உரிமைக்கும் தடை விதித்துள்ளது. 'ஏக போக உரிமையை ஏற்படுத்திக் கொள்பவர் தவறு செய்தவராவார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இஸ்லாம் வட்டியையும், ஏக போக உரிமையையும் தடை செய்து விட்டதனால், சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் யுத்தத்தையும் கொண்ட இன்றைய தீய நிலைக்கு முதலாளித்துவம் வளர்வது சாத்தியமாகியிராது.
செல்வம் தனிநபர்களிடம் குவிவதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு குவிவதற்கு அடிப்படையாக இருக்கின்ற வட்டியை முற்று முழுதாக இஸ்லாம் தடையும் செய்திருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் சரிசமமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதில் பாரபட்சப் போக்கை இஸ்லாம் தடை செய்கின்றது. வயது மற்றும் சுகவீனம் காரணமாக உழைக்க இயலாதவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசினைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்னும் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு உண்டான செலவினங்களை, பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அரசின் நிதியகத்தின் பணிகளே என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
மக்களின் உரிமைகளை சரிசமமாகப் பேணுவதும் மட்டுமல்ல, அரசின் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் குடிமக்களுக்கு உண்டு என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கான உத்ரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது.
தற்கால 'நாகரீக' மேல்நாடுகளில் காணப்படுவது போன்ற அரக்கத்தனமான நிலைக்கு முதலாளித்துவத்தை இஸ்லாம் வளர விட்டிருக்காது. தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் போக்கையும் அது வளர விட்டிருக்காது. குடியேற்றம், யுத்தம், மக்களை அடிமைப்படுத்துதல் என்பன உட்பட முதலாளித்துவத்தின் எல்லாத் தீமைகளையும் இஸ்லாம் தடுத்திருக்கும்.
வழக்கம் போல இஸ்லாம், பொருளாதார விதிகளையும் சட்டங்களையும் ஆக்குவதோடு திருப்தியடைந்து விடுவதில்லை. அது சட்டங்களுடன், தார்மீக, ஆன்மீகத் தூண்டுகோள்களையும் பயன்படுத்துகின்றது. ஆன்மீக, தார்மீகப் பண்புகளுக்கு ஐரோப்பாவில் செயல் ரீதியான பயனில்லை என்று காண்பதனால் கம்யூனிஸ்டுகள் அதனை ஏளனஞ் செய்கின்றார்கள்.
ஆனால் இஸ்லாத்தில் தார்மீக, ஆன்மீகப் பண்புகள் மனிதனின் செயல்களுடன் தொடர்புபடுத்தியே நோக்கப்படுகின்றன. இஸ்லாம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலையும், சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதையும் முரண்பாடற்ற வித்தில் ஒன்றிணைப்பதற்கு நிகரற்றதொரு வழியாகக் கையாள்கிறது.
ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவதன் தவிர்க்க முடியாத விளைவுகளான எல்லா வகை ஆடம்பர வாழ்க்கையையும் புலனின்பங்களையும் இஸ்லாம் தடுத்து விடுகிறது. ஊழியர்களுக்கு அநீதமிழைப்பதையும் தடுத்து விடுகின்றது.
செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றது. செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை தங்களுக்காகச் செலவிட்டுக் கொள்வதன் காரணமாகத் தான், பெரும்பாலான மக்கள் வறுமையாலும், இல்லாமையாலும் வாடுகின்றனர்.
இஸ்லாம் மக்களிடையே ஏற்படுத்தும் ஆன்மீக மேம்பாடானது, அவர்களை இறைவனுக்கு நெருங்கியவர்களாக ஆக்கி மறுவுலகில் இறைவனின் சன்மானத்தைப் பெற எதிர்பார்த்து, அவனது உவப்பைப் பெற முயற்சிப்பதில் உலக இன்பங்கள் இலாபங்கள் அனைத்தையும் துறக்குமாறு செய்கிறது. இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நடப்பவனும், மறுவுலகில் நரகம், சுவர்க்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவனுமான ஒரு மனிதன், செல்வத்தைக் குவிப்பதில் தீவிரமாக ஈடுபடவோ, தனது சொந்த நோக்கங்களை அடைவதற்கு சுரண்டலிலும் அநீதியிலும் ஈடுபடவோ மாட்டான் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறாக, தார்மீக, ஆன்மீக நெறிப்படுத்துகை, முதலாளித்துவத்தின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஆக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்கள் ஆக்கப்படும் போது, மக்கள் தண்டனைக்கு அஞ்சுவதன் காரணமாகவன்றி, மக்கள் தம் மனச்சாட்சியின்படி நடப்பதன் காரணமாக, அச்சட்டங்களைப் பேணிச செயலாற்றுவர் என்பது உறுதி.
கிழடு தட்டிய முதலாளித்துவம்!
அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 17 லட்சம் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
செப்டம்பர் 26 அன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்ட புள்ளி விவரங்கள் அமெரிக்க ஏழைகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வறுமை விகிதம் 12.7 சதவீதமாக வளர்ந்து விட்டது. 3 கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்கள் அன்றாடம் வெறும் வயிற்றோடு படுக்கப் போகிறார்கள். நடுத்தர மக்களின் ஆண்டு வருமானனும் 42000 டாலராகச் சுருங்கி விட்டது. தனிநபர் வருமானமும் 1991 க்குப் பிறகு முதல் தடவையாக 1.8 சதவீதம் சரிந்து விட்டது.
இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத அமெரிக்கர்கள் மிகச் சிலரே. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கல்லூரி பட்டாதாரிகளோ வேலை கிடைக்காமல் அலைகிறார்கள். லட்சக்கணக்கானோர் தங்களின் உடல்நலக் காப்பீட்டைத் திரும்பப் பெற்று விட்டார்கள். மருந்துகளின் விலை விண்ணைத் தொடுவதால் அவற்றை வாங்க முடியாமல், பென்ஷனில் காலம் தள்ளும் முதியவர்கள் தத்தளிக்கிறார்கள். கனடாவில் மூன்று ரூபாய்க்கு விற்கும் மருந்து அமெரிக்காவில் முப்பது ரூபாய்க்கு விலை போகிறது.
இது தொடர்பாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள விமர்சனம் சுவையானது, பொருள் பொதிந்தது.
அவுட்லுக் 20, அக்டோபர் 2003 இதழில் அனிதா எழுதுகிறார் : 'முதலாளித்துவத்தின் எழுச்சியாக இதனைச் சொல்ல முடியாது. இது பன்னாட்டு வணிக முதலைகளின் மோசமான பேராசையைத் தான் வெளிப்படுத்துகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் விளைவாக, மன்னிக்க முடியாத சமூக அநீதிகள் அமெரிக்காவை வாட்டத் துவங்கி விட்டன.
முத்தாய்ப்பாக, அனிதா சொல்லியுள்ள கருத்து தான் சரியான பஞ்ச். 1980 களின் கடைசி ஆண்டுகள் கம்யூனிஸத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறின என்றால் 21 ம் நூற்றாண்டின் தொடக்கம் கிழடு தட்டிய முதலாளித்துவச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாக அமைந்துள்ளது.
இதனைத் தானே மௌலான சையத் அபுல் அஃலா மௌதூதி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் முராத்பூரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில், 'ஒரு காலம் வரும். அப்போது கம்யூனிஸம், மாஸ்கோவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவலை கொள்ளும். முதலாளித்துவ ஜனநாயம் வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் தன்னுடைய பாதுகாப்புக்காக நடுநடுங்கத் தொடங்கும்' என்று சொல்லி இருந்தார்.
இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். தயாராகுமா? இல்லை இன்னும் விரல் நகத்தில் சாயம் பூசலமா? கூடாதா?, பிறையைப் பார்ப்பாதா? கணக்கிடுவதா? என்பதிலேயே தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்குமா!! சிந்திக்க வேண்டியது இன்றைய உம்மத்தின் பொறுப்பு.
தொகுப்புக்கு உதவியவைகள் :
முஃப்தி தகி உஸ்மானீ அவர்கள் உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி