முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 20 மே, 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கம் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 12 ந் தேதி (12.06.2010) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் நடைபெற இருக்கின்றது.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ளன.அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

வியாழன், 13 மே, 2010

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை ஏற்பாடு செய்த முப்பெரும் விழா!

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை ஏற்பாடு செய்த முப்பெரும் விழா!
ஜமாதுல் அவ்வல், ஹிஜ்ரி 1431 - ஏப்ரல் 2010

ஷரீஅத் சட்ட மேதை பெங்களுரூ மவ்லானா S. ஸைஃபுத்தீன் ரஷாதீ ஹழ்ரத் கிப்லா மற்றும் வடகரை மவ்லவீ K.M. ஷாஹுல் ஹமீது பாகவீ ஹழ்ரத் ஆகியோர் பங்கேற்றனர்!
பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதல் முறையாக பள்ளி மாணவர்களின் சிறப்பு பட்டிமன்றம்!!


04-05-2010 செவ்வாய்க் கிழமை பகல் 2:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி (திருமண மண்டபம்) மஹால் அரங்கில் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு... 6ம் ஆண்டு கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்க பரிசளிப்பு விழா மற்றும் பேரவையின் 8ம் ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

மாநாட்டிற்கு பேரவையின் தலைவரும், குத்பு முஹ்யத்தீன் (புதுப்பள்ளி) ஜும்ஆ மஸ்ஜிதின் இமாமுமான மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் M.S. காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் தலைமையேற்க, பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் ஆகியவற்றின் தலைவர் ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ், ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் நிர்வாகி அல்ஹாஜ் கலிமா K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் மற்றும் அல் ஹாஸ் அறக்கட்டளையின் நிர்வாகி அல்ஹாஜ் S.O. சைய்யது ஆரிஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் நிர்வாகியும், ஸித்தீக்கிய்யா திருக்குர்ஆன் பயிற்சி மையத்தின் முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் H. அப்துஸ் ஸமத் ரஷாதீ, திருக்குர்ஆன் கிராஅத் ஓத, பிஜ்ஆ கம்ப்யூட்டர் மையத்தின் இயக்குநர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ M. முஹம்மது ஷேக் ஆதம் ஃபாஜில் மழாஹிரி B.A., வரவேற்புரையாற்ற, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic)த்தின் பொதுச் செயலாளரும், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் செயலாளருமான மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இனிதே துவங்கின.

முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக பேரவை ஏற்பாடு செய்திருந்த மழலை வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு கிராஅத், கலிமா மற்றும் துஆ மனனம் ஆகிய போட்டிகள், 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு 15 சூராக்கள் மனனம், பாங்கு மற்றும் பொது அறிவு போட்டிகள், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு சொற்பொழிவு, 15 சூராக்கள் பொருளுடன் மனனம் மற்றும் கட்டுரை போட்டிகள் போன்றவற்றில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டாவது நிகழ்ச்சியாக கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பரங்கிப்பேட்டை மாநகர மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை ஏற்பாடு செய்யும் கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கம் குறித்த சிறப்புகள், பயன்கள் குறித்த சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியினை மாணவர்கள் இருவர் சிறப்பான முறையில் நிகழ்த்தி காட்டினர்.

மூன்றாவது நிகழ்ச்சியாக பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதல்முறையாக பள்ளி மாணவர்களின் சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'குடும்ப அமைதியின்மைக்கு பெரிதும் காரணம்... மாமியாரா? மருமகளா?' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பட்டிமன்றத்தில் 'மாமியாரே!' என்ற அணியில் மூன்று மாணவர்களும், 'மருமகளே!' என்ற அணியில் மூன்று மாணவர்களும் தங்கள் கருத்துக்களை அழகான முறையில் அழுத்தமாக சிறப்பான மேற்கோள்கள், கதைகள், சம்பவங்கள் போன்றவற்றுடன் மக்கள் மன்றத்தில் பதிவு செய்தனர். இப்பட்டிமன்றத்திற்கு மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., நடுவராக செயல்பட்டு அழகிய தீர்ப்பை வழங்கினார்.

இரண்டாவது அமர்வில் முதல் நிகழ்ச்சியாக வாழ்த்துரையும், ஆலிம்களின் சிற்றுரைகளும் இடம்பெற்றன.

பரங்கிப்பேட்டை தவ்லத் நிஸா (நிஸ்வான் மதரஸா) மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வரும், வாத்தியாப்பள்ளியின் முத்தவல்லியுமான மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் M. அப்துல் காதர் மரைக்காயர் உமரீ வாழ்த்துரை வழங்கினார். அல்-பாகியாத் திருக்குர்ஆன் பயிற்சி மையத்தின் முதல்வர் மவ்லவீ காரீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் M. முஹம்மது ஃபாரூக் பாகவீ, 'பர்தா - ஒரு பார்வை' என்ற தலைப்பிலும், நவாப் பள்ளி ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஃப்ழலுல் உலமா R. ஜாக்கிர் ஹுஸைன் மன்பயீ B.A., 'தேய்ந்து வரும் மார்க்கப்பற்று' என்ற தலைப்பிலும், கவுஸ் பள்ளிவாசல் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் காரீ K. முஹம்மது நிஜாமுத்தீன் காஷிஃபி, 'மக்தப் மதரஸாக்களின் அவசியம்' என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினர்.

இரண்டாவது நிகழ்ச்சியாக ஷரீஅத் விளக்க மாநாடு துவங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த தேரிழந்தூர் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ K.M. ஷாஹுல் ஹமீது பாகவீ ஹழ்ரத் அவர்கள், 'இளைஞர்கள்...! சமுதாயத்தின் தூண்கள்!!' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பெங்களுரூ ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஷரீஅத் சட்ட மேதை மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் S. ஸைஃபுத்தீன் ரஷாதீ ஹழ்ரத் கிப்லா அவர்கள், 'நாயகத்தின் வாக்கும், நமது போக்கும்' என்ற தலைப்பில் மாநாட்டு பேருரையாற்றினார்கள்.

மூன்றாவது அமர்வாக பேரவை ஏற்பாடு செய்திருந்த மழலை வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் மற்றும் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் அமைத்து நடத்தப்பட்ட கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கில் கலந்து கொண்டு, தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதே போன்று மழலை வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு கிராஅத், கலிமா மற்றும் துஆ மனனம் ஆகிய போட்டிகள், 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு 15 சூராக்கள் மனனம், பாங்கு மற்றும் பொது அறிவு போட்டிகள், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு சொற்பொழிவு, 15 சூராக்கள் பொருளுடன் மனனம் மற்றும் கட்டுரை போட்டிகள் போன்றவற்றில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசுகளும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பேரவையின் செயலாளரும், மூனா ஆஸ்திரேலியா மெட்ரிக் பள்ளியின் அரபு ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ A. லியாகத் அலீ மன்பயீ, நன்றியுரையாற்றியதுடன், பேரவையின் செயற்பாடுகள் குறித்து வந்து வாழ்த்து கடிதங்களையும் வாசித்தார். பேரவையின் தலைவரும், குத்பு முஹ்யத்தீன் (புதுப்பள்ளி) ஜும்ஆ மஸ்ஜிதின் இமாமுமான மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் M.S. காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்களின் துஆவுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.

இச்சிறப்பு மிகு மாநாட்டில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் அரங்கம் நிரம்ப தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றமை, பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி இன்னும் இதுபோன்ற பயனுள்ள பல மாநாடுகளையும், நிகழ்ச்சிகளையும் அதிகமதிகம் நடத்த வேண்டும் என்ற பேராவலையும் தூண்டி விட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஸீரத்துன் நபி விழாக் குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி