படம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும், பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும், அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும், பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
பத்ர் யுத்தம் (விளக்கப் படங்கள்)
படம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்பத்ர் தரும் படிப்பினைகள்
சுருக்கமான தகவல்
(ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) ‘பத்ர்’ போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.
பின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது! ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும் ‘பத்ரி’ல் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.
அல்லாஹ்வின் கழாவை ஏற்றுக்கொள்ளல்:
‘வானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின் ‘கத்ரை’ (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம்)
‘பத்ர்’ யுத்தம் அல்லாஹ்வின் ‘கத்ரின்’ வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.
‘மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)’ (8:8).
இங்கே அல்லாஹ்வின் நாட்டம்தான் நடைபெற்றது. இது குறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும் போது,
நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இலக்கு வைத்துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன் ஏற்பாடோ, சந்திக்கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான் எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி).
இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது,
‘(பத்ர் போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.’ (8:42)
அருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்று சேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.
எனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது!
நபி (ஸல்) அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக்குணர்த்துகின்றன.
கலந்தாலோசித்தலின் அவசியம்
மார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.
நபி (ஸல்) அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்து கின்றது.
மற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
‘நபி (ஸல்) அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அல்லாஹ்வின் தூதரே! இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்’ (அஸ்ஸீரதுன் னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).
நபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.
எதிரிகள் குறித்த விழிப்புணர்வு
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள். ‘பத்ர்’ களம் வந்த போதும் பலரை அனுப்பி புலணாய்வுத் தகவல் களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.
அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்:
உலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகளும் இருந்தன (அப்பிதாயா வன்னிஹாயா).
பௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.
‘உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்’ (8:10).
‘எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ என்று கூறினார்கள். (2:249)
எனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 8:9-12., 8:17).
கட்டுப்படுதலும் தூய பிரார்த்தனையும் உதவியைப் பெற்றுத்தரும்:
போர் நிகழ முன்னரே நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் (ஸல்) அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)
இவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.
‘(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது ‘(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்’ என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.’ (8:9).
இவ்வகையில் பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஹ்லாசுடன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோமாக!
இஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு இல்லை
‘பத்ர்’ யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன் என்ற பாசம் இன்றி சத்திய கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.
கருத்து வேறுபாட்டின் போது குர்ஆன் சுன்னாவின் பால் மீளுதல்:
‘பத்ர்’ போர் முடிந்த போது முஸ்லிம்கள் மத்தியில் ‘கனீமத்’ பொருள் பற்றிய கருத்து வேறுபாடு எழுந்தது. இது முதல் போர், முதல் ‘கனீமத்’ என்பதால் இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது கருத்து வேறுபாடு கொண்டனர். சிலர் ‘கனீமத்’தைப் பொறுக்கினர். அவர்கள் அவை தமக்குரியது என எண்ணினர். சிலர் இதில் கவனம் செலுத்தாது போரிட்டனர். மற்றும் சிலர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். இவர்களுக்கு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது,
‘போரில் கிடைத்த வெற்றிப் பொருள் (அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக. ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்’ (8:1) என்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது! எனவே, எமக்குள் ஏற்படும் பிணக்குகளையும், குர்ஆன், சுன்னா ஒளியில் தீர்த்துக்கொள்ள நாம் முயல்வோம்.
‘நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் -அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்’ (4:59).
அறிவின் முக்கியத்துவம்:
‘பத்ர்’ போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபி (ஸல்) அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களாவார்கள்’ (அத்தபகா துல் குப்ரா – இப்னு ஸஅத் 2116).
ஷைத்தான் தன் தோழர்களுக்கு சதி செய்வான்:
ஷைத்தான் மனிதனது பகிரங்க விரோதியாவான். அவன் எம்மை எப்படியும் நரகத்தில் தள்ளவே முயற்சி செய்வான். ‘பத்ர்’ யுத்தத்தில் இது தான் நடந்தது. காபிர்களின் உள்ளத்தில் கர்வத்தையும், மமதையையும் தூண்டி உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்றினான். இறுதியில் ‘பத்ர்’ களத்தில் மலக்குகளைக் கண்ட போது, நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் பார்க்கின்றேன் எனக்கூறி தன்னைப் பின்பற்றியவர்களைக் கை விட்டு விட்டான்.
‘அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.’ (51:16) என்ற வசனமும் இதை உணர்த்து கின்றது. எனவே ஷைத்தானை அறிந்து விழிப்புடன் இருக்கவேண்டும். மறுமையிலும் ஷைத்தான் தன் தோழர்களைக் கைவிட்டுவிடுவான்.
‘(மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) ”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையானதையே வாக்களித்திருந்தான். ஆனால், நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் என்றான். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறுசெய்துவிட்டேன். நான் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நான் காப்பாற்றுபவனில்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக அக்கிரமக் காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு” என்று கூறுவான்.’ (14:22)
எனவே, ஷைத்தானை எமது பகிரங்க எதிரியாகவே எடுத்து அவனை விட்டு விலகி வாழ முயற்சிப்போமாக!
நபியவர்களே அழகிய முன்மாதிரி:
‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ (33:21).
நபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் ‘பத்ர்’ போரின் போது பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.
‘பத்ர்’ போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூலுபாபா, அலி, நபி (ஸல்) ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.
‘ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்’ என்று சுழற்சி முறையில் நபி (ஸல்) அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும் ‘அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்’ என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல’ எனக் கூறினார்கள்’ (அஹ்மத்).
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.
இவ்வாறு, ‘பத்ர்’ களத்தில் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.
இவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிப்பினைகள் நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக!
நன்றி: உண்மை உதயம் மாத இதழ் 2007
வியாழன், 3 செப்டம்பர், 2009
பத்ரு போர் காட்சிகள்
- நபி (ஸல்) நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். (ஜைத் பின் அர்கம் (ரலி), புகாரி 3949) அதில் முதலாவது போர் பத்ருதான்.
- பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.
- குர்ஆனின் 3:123 முதல்127 வரையுள்ள வசனங்கள், 8:7, 9-13வரையுள்ள வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத் (ரலி) & இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி 3952, 3953 & 3954).
- பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப் (ரலி), புகாரி 3956, 3957 & 3958).
- குர்ஆனின் 22:19, 20 & 21 ஆகிய வசனங்கள் பத்ரு போரின் ஆரம்ப நிலை குறித்து இறக்கப்பட்டது. (அலி (ரலி) & அபுதர் (ரலி), புகாரி 3965, 3966 & 3967).
- பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர்கவசங்களுடன் ஜிப்ரயீல்(அலை) இறங்கி வருவதை நபி (ஸல்) அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி 3995).
- அபூ ஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்றவர்கள் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள். (அனஸ் (ரலி), புகாரி 3962, 3963, 3988 & 4020).
- 24 காபிர்களின் சடலங்கள் பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 'நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை இப்போது உணர்கிறீர்களா..' என்று நபி (ஸல்) கேட்டார்கள். (ஆய்ஷா (ரலி), அபூ தல்ஹா (ரலி) & இப்னு உமர் (ரலி), புகாரி 3976, 3980 & 4026).
- பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா (ரலி)க்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என நபி (ஸல்) நன்மாராயம் கூறுகிறார்கள். (அனஸ் (ரலி), புகாரி 3952).
- ஒரு திருமணத்தின் போது பத்ரு போரில் கொல்லப்பட்டவர்களை புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ் அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் (ரலி), புகாரி 4001).
- பத்ரு போரில் கலந்துக் கொண்ட முஹாஜிர்களுக்காக போர் செல்வத்திலிருந்து 100 பங்கு ஒதுக்கப்பட்டது. (ஜூபைர் பின் அவாம் (ரலி), புகாரி 4027)
தொகுப்பு: ஜி.என் - நன்றி: நமக்குள் இஸ்லாம்
பதினைந்து வருடத்தின் வெற்றியே பத்ர்!
பத்ரை ஏன் இவ்வாறு நோக்க வேண்டுமெனின் பலருக்கு பத்ரின் வெற்றியிலிருக்கும் கவர்ச்சி, அதுவரை நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் வெற்றிக்காக சமைத்து வந்த பாதையில் இல்லை. எனவே பாதை சமைக்காமலே வெற்றி பெறலாம் என்று பலர் கனவு காண்கிறார்கள். கனவு இல்லாதவர்களைவிட இவர்கள் எவ்வளவு மேல்.. என்றாலும், வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை என்ற பாடத்தை நாம் படிக்க வேண்டும். வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை. ஆனால் வரவழைக்கப்படலாம். நபிகளாரும் நபித்தோழர்களும் எடுத்துக் கொண்ட பதினைந்து வருட முயற்சியின் பயனாகவே பத்ர் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது தானகவும் வந்து விடவில்லை.
பத்ர் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். மலக்குகளும் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டார்கள். எதிரிகளை துவம்சம் செய்தார்கள். பத்ரில் முஸ்லிம்களுக்கு உதவி செய்த அல்லாஹ்வும், முஸ்லிம்களோடினைந்து போரிட்ட மலக்குகளும் அதற்கு முந்திய பதினைந்து வருடங்களில் இல்லாதிருக்கவில்லை. அவ்வாறாயின், அதுவரை அல்லாஹ்வின் உதவி ஏன் முஸ்லிம்களுக்கு வராமலிருந்தது? பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பத்ரில் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவக் காரணமென்ன?
ஒவ்வொன்றும் அவனிடம் ஒரு திட்டத்தின்படியே இயங்குகின்றது. அல்லாஹ்வின் படைப்பு, பராமரிப்பு பாதுகாப்பு, வழிகாட்டல், வழிதவறச் செய்தல், தீர்ப்பு வழங்குதல், தண்டித்தல் யாவும் சீரிய திட்டத்துக்குட்பட்டவைகளாகவே இருக்கின்றன. திட்டங்களைத் தீட்டி செயற்பட வேண்டிய அவசியம் இல்லாதிருந்த போதும் அல்லாஹ் ஒரு திட்டத்தினூடாகவே செயலாற்றுகின்றான். தன்னை மனிதர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பதும் அத்திட்டத்தினூடாகவே.
அவன் வானங்களையும் பூமியையும் ஓர் அழகான திட்டமிடலின் கீழ் படைத்து தனது வல்லமையை பறைசாற்றினான்.அதன் மூலம் அவன் தன்னை மனிதர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டான். அதுபோல மற்றுமோர் அழகான திட்டத்தின் கீழ் அந்த மனித சமுதாயத்தை வழி நடத்துகிறான். அதன் மூலம் இந்த மனிதர்களுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.
அந்த திட்டத்தின் ஒரு கட்டமே பத்ர்! பத்ர் ஒரு தற்செயலான நிகழ்வல்ல, எதிர்பாராமல் நடந்த வெற்றியுமல்ல. இன்று வரை உலகம் அதிசயிக்கும் ஒரு மகத்தான திட்டத்தின் வெற்றியே பத்ர்!
பத்ர், அல்லாஹ்வின் தூதர் மதீனாவில் காலடி எடுத்து வைத்த இரண்டாவது வருடத்தின் மிகப் பாரிய நிகழ்வாகும். அதற்கு சற்றேறக் குறைய பத்து வருடங்களுக்கு முன் அண்ணலார் மக்காவில் இருக்கின்ற வேளையில், உரோமர்களுக்கும் பாரசீகர்களுக்குமிடையே ஒரு யுத்தம் ஏற்படுகிறது. உரோமர்கள் அந்த யுத்தம் ஏற்படுகிறது. உரோமர்கள் அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்படுகிறார்கள். வேதத்தை உடையவர்களான உரோமர்களின் தோல்வி அண்ணலாரின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் அண்ணலாரைப் பார்த்துக் கூறுகிறார்கள் :
முஹம்மதே எமக்கும் உமக்குமிடையில் ஒரு போர் ஏற்படுமாயின் நிச்சயமாக நாங்கள் உம்மைத் தோற்கடிப்போம். பாரசீகர்கள் வேதத்தையுடைய ரோமர்கள் தோற்கடித்ததைப் போல..
எதிரிகளின் இந்த இறுமாப்புக்கு அல்லாஹ் பதில் கூறுகிறான் : "அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்." (சூரா அர்ரூம் : 1-5)
இந்த முன்னறிவிப்பின் பத்தாவது வருடம்.. ஆம்! பத்ரில் முஸ்லிம்கள் எதிரிகளை வெற்றி கொள்கிறார்கள். முஸ்லிம்கள் மகிழ்வுறுகிறார்கள். முஷ்ரிக்குகள் இரு தரப்பிலும் மீளாத்துயருக்கு ஆளாகிறார்கள். திட்டம் நிறைவேறுகிறது. சத்தியம் வெற்றியீட்டுகிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு வெற்றிக்கு கட்டியங்கூற, அதன் திட்டக் கருத்தாவினால் தான் முடியும். உலகில் இரு வெவ்வேறு நிகழ்வுகளை இணைத்து, முன்னறிவிப்புச் செய்யும் ஆற்றல், இந்த உலகை முழுமையாக தனது திட்டத்தில் நிருவகிப்பவனுக்கு மட்டுமே இருக்க முடியும்.
இந்த உலகம், மனித வாழ்வு அனைத்தும் ஒரு நுட்பமான திட்டத்தின் கீழ் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது இந்த உலகத்தையும் மனித வாழ்வையும் படைத்தவனின் திட்டமாகும். இந்த திட்டத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையின் வெறும் நிகழ்வுகளை மட்டுமே கண்டு கொள்ள முடியும்.அதன் விளைவாக அல்லாஹ்வையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பத்ர் இந்த உண்மையை உணர்த்தும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். 313 முஸ்லிம்களையும் 1000 முஷ்ரிக்குகளையும் அல்லாஹ் உதவிக்கு அனுப்பி வைத்த மலக்குகளையும் மட்டும் வைத்து பத்ரைப் பார்ப்போருக்கு அது ஓர் அதிசய நிகழ்வேயன்றி வேறில்லை. இவர்களது பார்வையில் பத்ர் மூஸா (அலை) அவர்களது தடியை அல்லது ஸாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகத்தை ஒத்ததாகும். இவற்றைப் பார்த்து அல்லாஹ் ஆகட்டும் என்று கூறுவான். இவை ஆகிவிடும். எப்படி ஆகியது என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியம். எங்களுக்குத் தெரியாது.
ஏனெனில் இத்தகைய நிகழ்வுகள் ஒரு திட்டத்துக்கு உட்பட்டவைகள் அல்ல. ஒரு சூலிலிருந்து பத்து மாதங்களாக வளர்ச்சியடையும் கரு ஒட்டகையாக உருவெடுப்பது அழகியதொரு திட்டம். கற் பாறைக்குள்ளிலிருந்து சாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகம் வெளிப்படுவது அதிசயம்.
பத்ர் ஓர் அதியசம் அல்ல. அது நிதர்சனம். அது ஆகட்டும் என்ற வார்த்தையால் ஆக்கப்பட்டது அல்ல. அந்த வார்த்தையின் சொந்தக் காரனால் வழிநடாத்தப்பட்ட அழகியதொரு திட்டம் அற்புதம் மீண்டும் நிகழ்வதில்லை. ஆனால் திட்டம் மீண்டும் அமுல் செய்யப்படலாம். பத்ரை அற்புதமாகப் பார்ப்பவர்கள் அதிசயத்து விட்டுப் போவார்கள். அழகியதொரு திட்டமாகக் காண்பவர்கள் அதனை மீண்டும் செயற்படுத்த முயல்வார்கள். பத்ர் முகட்டைப் பிளந்து கொண்டு வந்து கண்ணெதிரே நின்ற அவதாரமல்ல. பதினைந்து வருடங்களாக அல்லாஹ்வின் தூதரும் அன்னாரின் தோழர்களும் ஓயாது ஓடி ஒருங்கே அடைந்து கொண்ட வெற்றிக் கப்பமாகும். நாமும் ஓடினால் அந்த வெற்றிக் கம்பத்தை அடைவதொன்றும் சிரமமானதல்ல. முதலில் ஓடுவதற்கு பாதை வேண்டும். ஓட வேண்டிய இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். நாம் தற்போது ஓடுகின்ற பாதையையும் மாற்றியமைக்க வேண்டும். "நீங்கள் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்". (18:26)
பத்ர் 15 வருட வரலாற்றின் ஒரு மைல்கல் என்பதைப் பார்த்தேர். அந்த வரலாறு இதோ!
கொலை, கொள்ளை, பெண் அடிமைத்துவம், மது, சூது, விபச்சாரம், வறுமை, கோத்திரப் பூசல்கள், அடிமை வியாபாரம், சிசுக் கொலை, பிரபுத்துவம், பொருளாதார சீர்கேடுகள், வழிப்பறிக் கொள்ளையும் மரண அச்சுறுத்தலும் நிறைந்த சூழல் என்று அழுகிப் போயிருந்த ஒரு சமூகத்தில் நபி (ஸல்) அவர்களின் வருகை அமைகிறது. அல்லாஹ்வின் திட்டமும் ஆரம்பமாகிறது.
அந்தத் திட்டத்தின் முதல் கட்டம், முதல் நாற்பது வருடங்களாகும். இந்த காலத்தில் முஹம்மத் என்னும் மனிதர் உருவாக்கப்படுகிறார்.
நபிமார்களைத் தவிர உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், சமுதாய ஆரம்பகால் வாழ்க்கை சமுதாயச் சாக்கடைகளின் அசுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு முற்றிலும் மாற்றமாக முழுவதுமே அசுத்தமான ஒரு சூழலில் நபி (ஸல்) அவர்கள் வளர்கிறார்கள். ஆனால் அந்த அசுத்தங்களின் தாக்கங்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஒரு நோக்கமும் மாற்றமான திட்டமும் இருந்திருந்தால் ஒரு அனாதையின் வாழ்வு இவ்வளவு தூரம் நுட்பமாக பாதுகாக்கப்பட்டிருக்க முடியாது.
எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் : ஒரு திருமண வீட்டில் நடனமும் ஆடல் பாடல்களும் இடம்பெறுகின்றன. சிறுவர் சிறுமியர் விநோதம் காண அங்கே குழுமியிருந்தார்கள். நபிகளாரும் அப்போது ஒரு சிறுவர். அவரது கால்களும் அந்த இடத்தை நோக்கி நகர்கின்றன. என்ன ஆச்சரியம்! அந்த வீடு நெருங்குவதற்கு முன்பாக அவர்களை ஒரு மயக்கம் தழுவுகிறது. விழுந்து விடுகிறார்கள். மயக்கம் தெளிந்து எழுந்த போது அடுத்த நாள் பொழுது விடிந்திருக்கிறது. களைகட்டியிருந்த திருமண வீடு உறங்கிப் போயிருக்கிறது.
அண்ணலார் (ஸல்) அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே தீய செயல்களை வெறுத்தொதுக்கி வந்தார்கள். அவற்றின்பால் கவரப்பட்ட ஒரு சில வேளைகளில் அல்லாஹ் அவர்களைத் தடுத்துமிருக்கிறான். இது இத்திட்டத்தின் முதல் கட்டம்.
அடுத்த கட்டமாக அண்ணலாருக்கு அன்னாரின் நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் வழங்கப்படுகிறது. ஒரு பாரிய பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. அல்லாஹ் தனது திட்டத்தின்பால் அவர்களை வழிநடாத்துகிறான். "(நபியே!) உம்மை இலகுவான (இம்மார்க்கத்)தின்பால் நாம் இலகுவாக வழி நடாத்துவோம்".
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திட்டத்தை அமுல் செய்யும் பணியில் இறங்கினார்கள். அதன் முதற்கட்டமாக வாழ்க்கை பற்றி ஒரு தெளிவான சிந்தனையை முன் வைத்தார்கள். அந்த சிந்தனையின் சுருக்கம் இது தான் :
மனித வாழ்க்கைக்கு ஒரு துவக்கம் இருக்கிறது. ஆனால் முடிவு இல்லை. மனித வாழ்க்கை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமே உலக வாழ்க்கை. இது ஒரு தேர்வுக்கான கட்டமாகும். வாழ்வின் அடுத்த கட்டத்திற்காக இங்கு மனிதர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அந்த தெளிவு அவ்வளவு சுலபமானதல்ல.
"இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு". (3:178-179)
வாழ்க்கை பற்றிய இந்த சிந்தனையை அறிமுகம் செய்து, அதை மனித உள்ளங்களில் ஆழப்பதித்து, அந்த சிந்தனையை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் செயற்படுத்திக் காட்டுவதற்காக மதீனாவில் ஒரு களத்தையும் அமைத்த போது இந்தக் களத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அந்த அச்சுறுத்தலை எதிர் கொள்ள எத்தனித்த வேளையிலே பத்ர் இடம் பெறுகிறது.
பத்ரை நோக்கிய பாதை இதுவே! முஸ்லிம்களும் இந்த சிந்தனைக்கு வாழ்வளிக்க புறப்படுவார்களா? பத்ரை வெறும் நிகழ்வாகப் பார்க்காமல் அதன் பின்னால் உள்ள திட்டத்தைப் புரிந்து கொண்டவர்களே அதற்கு செயல்வடிவம் கொடுக்கப் புறப்படலாம்.
நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்
பத்ருப் போர்
மதீனா தேசத்தில் அரசு ஒன்றை நிறுவி முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். 'பத்ர்' எனும் இடம் மதீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருந்தது. அதை ஆக்ரமிப்பது மதீனாவின் மீது நடத்தப்படும் அத்துமீறலாகும். அப்படிச் செய்வதன் மூலம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வம்புச்சண்டைக்கு இழுக்கலாமென்று குறைஷிகள் எண்ணினர்.
பத்ரை மக்காக் குறைஷிகள் ஆக்கிரமிக்கும் போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வராவிட்டால் அவர்களிடம் போதிய படைபலம் இல்லையென்று கருதி, குறைஷிகள் மதீனாவுக்குள் அணிவகுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்ததும் இதைத்தான்.குறைஷிகளில் சிலரின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ஒரு திட்டம் தயாரானது. அபூ சுஃப்யானின் தலைமையில் ஆயிரம் சுமைதாங்கி ஒட்டகங்களோடு ஒரு வணிகக் கூட்டம் சிரியா தேசம் செல்ல வேண்டும். அது திரும்ப வரும்போது அதன் தலைவர் அபூ சுஃப்யான் ஒரு தூதரை மக்கா தேசம் நோக்கி அனுப்ப வேண்டும். அத்தூதர், வணிகக் கூட்டம் பத்ரை வந்தடையும் தேதியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடனே அந்தத் தூதர் மக்கா தேசத்தின் வணிகக் கூட்டத்தை வழிமறித்துக் கொள்ளையடிக்க, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்ற வதந்தியைப் பரப்ப வேண்டும்.
ஏனெனில் சிரியா செல்வதற்கான இந்த வழி சர்வதேசச் சாலையாக இருந்தது. அனைத்து அரபு வணிகர்களுக்கும் இது மிகவும் முக்கியமான வழியாகும். இவ்வழியில் வரும் வணிகக் கூட்டத்தை வழிப்பறி செய்வது ஒட்டுமொத்த அரபியாவுக்கு எதிரான குற்றமாகும். இப்படிப்பட்ட செய்தியைப் பரப்புவதன் மூலம் அனைத்து அரபுகளிடமிருந்தும் தங்களுக்கு ஆதரவான அனுதாப அலையை உருவாக்க முடியும். ஏற்கனவே மதீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ள அரபுக் கூட்டத்தார் தம் அனுதாபத்தையும், ஆதரவையும் இதன் மூலம் விலக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகுமென்று குறைஷிகள் திட்டமிட்டார்கள். அவர்களின் அத்திட்டப்படியே மதீனாவுக்கு வடக்கே நஜ்து தேசத்திலுள்ள 'பனூ சுலைம்' மற்றும் 'பனூ கத்ஃபான்' படைகள் மக்காவின் படையோடு இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
மக்காவின் படைகள் 'பத்ரு'க்களம் வந்தது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததென்றோ, இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வழிமறிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் வந்ததென்றோ ஒருபோதும் கருத முடியாது. உண்மையில் அது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும்.
'பனூ பக்ர்' என்ற கூட்டத்தார் மக்காவின் எதிரியாகத் திகழ்ந்தனர். சர்வதேச வணிகப் பாதையைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்கே தாங்கள் போரிடச் செல்வதாகவும், எனவே தாங்கள் இல்லாத அச்சமயத்தில் மக்காவைத் தாக்கிவிட வேண்டாமென இந்த வதந்தியின் மூலம் குறைஷிகள் 'பனூ பக்கர்' கூட்டத்தினரை மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். குறைஷிகளின் சூழ்ச்சியை அறியாத அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தார்கள்.
ஆயிரம் பேர் கொண்ட மக்காவின் இராணுவம் பத்ர் களம் நோக்கிப் புறப்பட்டது. நஜ்து தேசத்துப் படைகளும் பத்ர் களம் நோக்கி வந்தன. திமஸ்கஸிலிருந்து திரும்பிய வணிகக்கூட்டம் நிறைய ஆயுதங்களைச் சுமந்து வந்தது. அக்கூட்டமும் மக்காவின் படையும் பத்ரில் ஒன்று கூடின. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது. ''பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கு எதிராக பத்ரில்) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டு மக்களைத் தடுத்தார்கள்.'' (அல் குர்ஆன் 8:47)
ஆனால் சில வரலாறுகளில் இதற்கு மாற்றமான தகவல்களும் உள்ளன. அபூ சுஃப்யான் தன் பாதையை மாற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அன்னாரின் தோழர்களும் தாக்காத அளவுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்து அபூ ஜஹலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், 'உம் ஒட்டகங்களையும் உடைமைகளையும் பாதுகாக்க நீர் வெளிவந்ததும் இறைவன் அவற்றைப் பாதுகாத்து விட்டான்; எனவே திரும்பச் செல்லவும், எனக் கூறியதாகக் கதை கட்டப்பட்டுள்ளது.
மக்காவாசிகளின் படையெடுப்பு மதீனாவாசிகளின் தூண்டுதலாலே ஏற்பட்டது என வாதிடுதல் பெரும் தவறு. மக்காவாசிகளோடு மதீனாவாசிகளின் மோதலுக்குக் காரணம் அவர்களின் படையெடுப்பு தான் என்பதற்கு அபூஜஹலின் கவிதையே போதுமான ஆதாரமாகத் திகழ்கிறது. 'பத்ரு'க்கு வருவதற்கு முன்பு இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ குறைஷிப் படையின் வருகையை அறியாது இருந்தனர் என்பதும் தவறு.
ஏனெனில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒட்டகக் கூட்டத்துடன் வந்த வணிகக் குழுவை வழிமறிக்க வந்தார்கள் என இதற்குப் பொருளாகிவிடும். உண்மையில் ஆக்கிரமிப்பதற்காக வந்த மக்கா தேசப் படையை எதிர்கொள்ளவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் 'பத்ரு'க்கு வந்தார்கள்.
முஸ்லிம்கள் இடம்பெயர்வதைக் குறைஷிகள் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தங்களை மதீனாவில் நிலைப்படுத்திக் கொண்ட காரணத்தால் மதீனாவின் மீது போர்ப் பிரகடனம் செய்தனர். அன்ஸாரித் தோழர்கள் ஒன்றைப் புரிந்து கொண்டனர். மக்காவின் படையெடுப்பு எந்த வினாடியிலும் நிகழலாம். மக்காவின் பல சிறு படைகள் மதீனா நோக்கி அணி வகுத்தன. அவர்களின் இந்த எண்ணத்தை அவை உறுதிப்படுத்திவிட்டன. அன்ஸாரித் தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மதீனாவின் எல்லைகளுக்குள்தான் பாதுகாப்பதென்று உறுதி பூண்டிருந்தனர். ஆனாலும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தனர். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பல பயணங்களின் மூலம் பல்வேறு கூட்டத்தாருடன் உடன்படிக்கைகள் ஏற்பட்டு 'பத்ரு'ம், அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளும் மதீனாவின் எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிட்டன. ஆகவே மதீனா தேசத்தின் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு என்பதை அன்ஸார்களும், முஹாஜிர்களும் நன்றாக அறிந்தே இருந்தனர். ஏனெனில் அவர்கள் மதீனா ஒப்பந்தத்தை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டிருந்தனர். சிலர் விளைவுகளைப் பற்றி அஞ்சியிருக்கலாம்; அதுவும் மனித இயல்புதான். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டான்.
மக்காவின் ஒட்டகக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டு வெளியில் வந்தார்கள் என்று செய்தி பரப்பப்பட்டது பெரும் ஆச்சரியயத்தைத் தருகிறது.
''அபூசுஃப்யான் சிரியாவிலிருந்து வருவதைக் கேள்விப்பட்டதும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை அழைத்து ''இதுவே குறைஷிகளின் உடைமைகள் அடங்கிய ஒட்டகக் கூட்டம். சென்று அதைத் தாக்குங்கள். அல்லாஹ் அதை நமக்கு இரையாக்கக் கூடும் என்று கூறினார்கள்'' என இப்னு இஸ்ஹாக் எழுதியுள்ளார்.
ஏற்கனவே குறிப்பிடப்பட்ட திருமறை வசன ஒளியில் இதை ஆதாரப்பூர்வமாகக் கருத முடியாது. நடுநிலையாகப் பார்த்தால் இது தவறான நோக்கத்தோடு புனையப்பட்டிருப்பது விளங்கும். இது பற்றி இப்னு இஸ்ஹாக், அபூ சுஃப்யான் செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒட்டகத்தில் பயணித்தவர் ஒருவர் மூலம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு தன் ஒட்டகக் கூட்டத்தை எதிர்கொள்ளத் தயாராவதை அறிந்தார். சுதாரித்துக் கொண்டு 'ளம்ளம் இப்னு அம்ர்அல் கிஃபாரி'யை மக்காவுக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்றடைந்ததும் தன் ஒட்டகத்தின் மூக்கை அறுத்து, அதன் சேணத்தைத் திருப்பி, தன் மேற்சட்டையைக் கிழித்துக் கொண்டவராக, ''குறைஷிகளே! நம் ஒட்டகங்கள்!? நம் ஒட்டகங்கள்!? அபூ சுஃப்யானோடு இருக்கும் உங்கள் உடைமைகளைச் சூறையாட முஹம்மதும் அவரின் தோழர்களும் தயாராகிவிட்டனர். நீங்கள் அதை வெல்வீர்கள் என எனக்கு நம்பிக்கை இல்லை. உதவுங்கள்! உதவுங்கள்!!' என்று மக்களிடம் கூறினார்'' என்றும் இப்னு இஸ்ஹாக் குறிப்பிடுகிறார்.
இவர்கள் கூறுவதுபோன்று இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தை வழிப்பறி செய்ய வந்திருப்பின் அதை அவர்கள் எளிதாகச் செய்திருக்க முடியும். பத்ரின் அருகிலிருந்து 'ளம்ளம்' என்பவர் மக்கா தேசத்தைச் சென்றடைய எப்படியும் ஆறுநாட்கள் ஆகியிருக்கும். மக்காக் குறைஷிகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள நான்கு நாட்களைச் செலவிட்டனர். அதோடு பத்ரை அடைய அவர்களுக்குப் பத்து நாட்கள் தேவைப்பட்டன. ஆயிரம் சுமைதாங்கி ஒட்டகங்களோடு பயணித்த அபூ சுஃப்யானிடம் விரையும் தன்மை இல்லை என்பது நிதர்சனம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படைக்கு அப்படி எந்தச் சுமையும் இல்லாததால் அவர்களால் விரைந்து இயங்க முடியும். பத்து கிலோ மீட்டர் தூரத்தை அடைத்துக் கொண்டு வந்த ஆயிரம் ஒட்டகங்களின் காவலுக்கு 24 நபர்களே இருந்தனர். விரைந்து செல்லும் ஒட்டகங்களைக் கொண்ட 30-40 முஸ்லிம் வீரர்களுக்கு அவற்றை எளிதாகவும் தாக்கியிருக்க முடியும். முஸ்லிம் படைகள், குறைஷிகளின் படை மற்றும் வணிகச் சுமைதாங்கி ஒட்டகங்களுடன் வந்த அனைவரும் 'பத்ர்' களத்திற்கு ஒரே நேரத்தில் வந்தடைந்தார்கள்.இதை ஊன்றிக் கவனித்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் முடிவிலிருந்த 'பத்ர்' போர்க்களத்திற்குச் சென்றுள்ளார்கள். எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் எதிரிகள் நுழைந்தது படையெடுப்பு என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போரிடுவோருடன் நீங்களும் போரிடுங்கள்'' (அல்குர்ஆன் 2:190) என்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.
முஸ்லிம்கள் தாக்கப்படும்போது அவர்கள் எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது ஆகுமானதல்ல. எனவே போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ''போரிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது.'' (அல்குர்ஆன் 2:216) என்று இறைவன் கூறுகிறான்.
உண்மையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ சுஃப்யானின் வணிகப்படையைத் தாக்குவதற்காகச் சென்றிருந்தாலும் அதைத் தவறு என்று கூறமுடியாது. ஏனெனில் தம் தேசத்தையும், அதில் வாழும் மக்களையும் அழிப்பதைக் குறியாய்க் கொண்டிருக்கும் எதிரிகள் மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படுவதும் போர்த் தந்திரங்களில் ஒன்றே. தற்போதும் இம்மாதிரியான பொருளாதாரத் தடைகள் அமலில் உள்ளன. இதைக் கவனத்திற்கொள்வது அவசியம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் 'பத்ர்' போர்க்களம் சென்று போரிட்டது அவர்களின் முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறுவோரும் உள்ளனர். நிச்சயமாக இது முன் கூட்டிய நடவடிக்கை அல்ல. ஏனென்றால் மக்காவாசிகள் ஏற்கனவே போர் அறிவிப்பைச் செய்து விட்டனர். மக்கா தேசக் குறைஷிகள் முன்னரே போர்க் குழுக்களை அனுப்பிக் கொண்டும் இருந்தனர். மேலும் மக்காவின் படைகள் மதீனா நோக்கிப் புறப்பட்டதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிந்த நிலையில் இருந்தார்கள். இரு படைகளும் களத்தில் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் சந்தித்தன.
'பத்ர்' களம் மதீனாவிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும் மக்காவிலிருந்து 300 கி.மீ. தூரத்திலும் உள்ளது. மக்கா தேசக் குறைஷிகள்தான் முதலில் படையுடன் கிளம்பியுள்ளார்கள். அவர்கள் புறப்பட்டதை அறிந்த பின்னரே இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தங்கள் படையை நடத்திச் சென்று பத்ரில் அவர்களைச் சந்தித்தார்கள். 120 கி.மீ. தூரத்தில் இருந்து வந்த முஸ்லிம்களும், 300 கி.மீ. தூரத்தில் இருந்து வந்த மக்கா தேசக் குறைஷிகளும் ஒரே நேரத்தில் 'பத்ர்' களத்தை வந்தடைய வாய்ப்பில்லை. குறைஷிகள் மிகத் தாமதமாகப் புறப்பட்டு அதிக தூரத்தை அன்றைப் பாலைவனத்தில் மின்னல் வேகத்தில் கடந்து வந்தார்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது.மதீனா ஒப்பந்தம் பற்றிய மேம்போக்கான விமர்சனம் கொடுக்கப்பட்டு விட்டது. மதீனா தேசத்தின் உருவாக்கத்தைச் சட்டபூர்வமாக்கிடவும் சம்பந்தப்பட்ட அனைவரும் தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும்படியும் தயாரிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணமாகும் இது. இன்றைய அரசியற் சட்டக் கலைச் சொல்லாக்கத்தில் சொல்லப்படுவதானால் இது ஓர் 'அரசியல் சாசனச் சட்டம்' ஆகும். மேலும் இது வருங்கால முஸ்லிம் தலைமுறைகளுக்கான சிறந்ததொரு முன்னுதாரணம் ஆகும்.
முஸ்லிம்களின் எந்த ஓர் அரசும் தனக்கென ஓர் அடிப்படைச் சட்டமின்றித் தன் தேசத்து அலுவல்களை நடத்தக் கூடாது. இவ்வொப்பந்தமானது பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் தனிக்கவனம் செலுத்தியுள்ளது. அதோடு உள்நாட்டு விவகாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கும் இச்சாசனம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. வருங்காலத்தில் அரசியல் சாசனம் இயற்றுவோருக்குச் சமூக வாழ்வின் பல அம்சங்களிலும் இது வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.மக்காவின் போர்ப்பிரகடனத்திற்கு மதீனாவின் ஒப்பந்தமே எதிரொலியாக இருந்தது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் போர் என்பது தேசிய அளவிலான ஆயத்தத்துடன் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். போர்ச் சட்டதிட்டங்களும் ஆவணரீதியாகப் பதிவு செய்யப்பட்டன. அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கக்கூடிய முதல் இடம் இதுதான். அவற்றின் சில முக்கிய அம்சங்கள் இதோ...
மக்களையும், நாட்டு எல்லைகளையும் பாதுகாப்பதற்காகவே போரில் இறங்க வேண்டும்.
- தேசத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்தச் சமுதாய மக்களும் உடலாலும், பொருளாலும் போரில் பங்கெடுக்க வேண்டும்.
- தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் போர் உள்ளடக்கி யுள்ளது. அவை வருமாறு:-
1. உள்நாட்டு அமைதியும், பாதுகாப்பும்.
2. ராஜதந்திர நடவடிக்கைகள்.
3. முழு மனிதசக்தி.
4. தேசத்தின் பொருளாதாரமும், இதர வளங்களும்.
5. இருப்பிலுள்ள ஆயுதங்கள்.
6. முழுக் கண்காணிப்பு.
யூதர்களுக்கு மனித உரிமைகளில் சம அந்தஸ்து வாக்களிக்கப்பட்டது. ஆனால் அதை அடைவதற்கு முஸ்லிம்கள் நிர்வாகம் செய்யும் இறையாட்சியமைப்பின் கீழ் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். இஸ்லாமியத் தேசச் சட்டங்களின் அடிப்படையில் கட்டளையிடும்போது அவர்கள் அதன்படி நடந்தாக வேண்டும். இந்த ஒப்பந்தம் உருவாகும் முன்பு யூதர்கள் சமூக, அரசியல் அந்தஸ்து இல்லாதவர்களாகவே மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வாழ்வில் இது ஒரு முன்னேற்றமாகத் திகழ்ந்தது. ஆனால் அந்த யூதர்கள் ஓராண்டிலேயே ''மதீனாவில் நிறுவப்பட்டுள்ள அந்த அரசையும், தேசத்தையும் அழிப்பதற்கு நாங்கள் சித்தமாயிருக்கிறோம்; இதுதான் எங்கள் வேலை'' என முகத்திரையை விலக்கிக் கொண்டு தங்களின் உண்மைத் தோற்றத்தைக் காண்பிக்கலாயினர். கருத்து வேற்றுமைகள் 'பத்ரு'ப் போருக்கு முன்னரே தலைதூக்கிவிட்டன.
இருப்பினும் 'பத்ரு'ப் போருக்குப் பின்னரே யூதர்கள் வெளிப்படையாகக் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் ஆயுதங்களைத் தவிர்த்து அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு மதீனாவை விட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட யூதர்கள் தங்களின் கதவு, சன்னல் களைக் கூட விட்டு வைக்காது அனைத்தையும் எடுத்துச் சென்றனர்.இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த யூதக் கூட்டத்தின் கலகத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் விட்டிருந்தால் மதீனா தேசத்தின் உள்நாட்டு அமைதியும், பாதுகாப்பும் பெரும் கேலிக்குள்ளாம் இருக்கும். கலகம் செய்த 'பனூ கைனுக்கா' எனும் கூட்டம் எண்ணிக்கை யில் பெரிய அளவில் இருந்தது. ஓரளவு இராணுவத் திறமையும் கொண்டிருந்தது.
இந்த யூதக்கூட்டத்தைப் பற்றி எழுத்தாளர் 'மார்கோலியத்' தன் நூலில் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
"Certainly the Qainuqua might by themselves have been sufficient to deal with Muhammad (SAW) and three hundred followers, but their brothern could, without difficulty, have brought into the field a force four times its number with which he was attacking''
''முஹம்மத் (ஸல்) அவர்களையும் முந்நூறு நபித்தோழர்களையும் சந்திக்க 'பனூ கைனுக்கா' கூட்டமே போதுமானதுதான். ஆனால் இக்கூட்டத்தினரின் சகோதரக் கூட்டத்தவரோ இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படைபோன்று நான்கு மடங்குக் கூட்டத்தைத் திரட்டுவதை எளிதாகச் செய்து விட்டனர்.''
அப்படியிருந்தும் 'பனூ கைனுக்கா' கூட்டம் முஸ்லிம்களோடு போராடத் துணியவில்லை. அவர்கள் மதீனா ஒப்பந்தத்தின் ஒரு சட்டப் பிரிவை ஏற்றிருந்தனர். அப்பிரிவு ''நம்பிக்கைக் கொண்டோர் இறைவனை அஞ்சி அவனுக்குக் கீழ்ப்படிவதால் நிலைத்திருக்கும் உறுதி கொண்டுள்ளனர்; இறைவனிடமிருந்து வழிகாட்டுதலும் பெறுவர்'' எனக் கூறுகிறது.
இப்படிப்பட்ட இறைநம்பிக்கையாளர்களை எவ்வாறு அவர்களால் போர்க்களத்தில் எதிர்கொள்ள இயலும்? குழப்பம், கலகம், நம்பிக்கைத் துரோகம், சதி ஆகியவற்றை மறைவாகச் செய்திட முடியும்; வாளோடு வாள் மோதி அவற்றைச் செய்ய முடியுமா?
உலக வரலாற்றில் யூதர்கள் இதில் முக்கியமானப் பங்கு வகித்து அதன் மூலமே வளம் பெற்றிருக்கின்றனர். போதிய எண்ணிக்கையிலும் இராணுவ பலத்திலும் இருந்த யூதர்கள் மதீனா தேச அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்ததற்கு ஒரேயொரு காரணம், முஸ்லிம்களை வன்முறையில் சந்திக்காமல் அவர்களுக்குள்ளிருந்தே குழப்பங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். உலக வரலாற்றில் இவர்கள் இவ்வாறு சாதித்த சாதனைகளே ஏராளம்.
யூதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டு இருந்தபோது, அபூ சுஃப்யான் தன் பயணத்தைத் துவக்கியிருக்கக்கூடும்.
யூதர்கள் விரைவாகவே சரணடைந்தது அவருக்குப் பெரும் ஏமாற்றமளித்தது. அவர் துரத்தப்பட்டார். ஆனாலும் கொண்டு வந்திருந்த 'பார்லி' மூடைகளைத் தூக்கி எறிந்து விட்டுப் படைகளுடன் தப்பி ஓடிவிட்டார். எனவே இப்படையெடுப்பு 'கஜ்வத்து ஸவீக்' எனப்படுகிறது. இங்கும் தன் தலைநகர் தாக்கப்பட்டதும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் போர்க்களம் புகுகிறார்கள் என்பது தெளிவாகிறது எதிரிகள் போரைத் தொடரவே விரும்பினார்கள். ஆகவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை அலட்சியம் செய்து தம் தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்துக் கொள்ளும் போக்கை விரும்பவில்லை. 'பனூ கைனுக்கா'வை முற்றுகையிட்டதன் மூலம் குழப்பங்கள் செய்யும் உள்நாட்டுச் சதிக்கு எதிராக விழிப்பாய் இருப்பதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னுதாரணம் காட்டி விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.
- கஸ்வத்து 'பனூ கைனுக்கா' (ரமலான், ஹிஜிரி 2 - கி.பி. 620)
- கஸ்வத்து ஸவீக், (ஷவ்வால் ஹிஜிரி 2)
- கஸ்வத்து 'பனூ சுலைம்' (ஷவ்வால், ஹிஜிரி 2)
- இரண்டாம் கஸ்வத்து 'பனூ சுலைம்' (துல்காயதா ஹிஜிரி 2)
- கஸ்வத்து 'பனூ கத்ஃபான்' (ரபியுல் அவ்வல், ஹிஜிரி 2)
மேற்கண்ட போர்கள் அனைத்தும் 'பத்ரு'ப் போர் முடிந்ததுமே நடைபெற்றன. அதோடு 'பனூ கைனூக்கா'வைத் தவிர அனைவருமே 'பனூ கத்ஃபான்' 'பத்ரு'ப் போரில் தோற்கடிக்கப் பட்டவர்கள். இம்மூன்று கூட்டத்தாரும் 'பத்ரு' போருக்குப் பின்பு மதீனாவோடு போரிட்டுக் கொண்டே இருந்தனர். குறைஷிகளும் அவர்களின் நேசக்கூட்டத்தாரும் தோல்வி அடைந்ததை அறிந்த 'பனூ கைனுக்கா' கூட்டத்தினர் கலகத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர்களின் கலகமும் அதைத் தொடர்ந்த மதீனாவின் மீதான படையெடுப்புகளும் நன்கு திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டன. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்தக் கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கூட்டத்தாரையும் தனித் தனியே எதிர்கொண்டு அக்கூட்டணியையே தோற்கடித்து விட்டார்கள். எதிரியைவிட எப்போதுமே விழிப்புணர்வில் ஒருபடி மேலிருப்பது, துல்லியமான தகவல்களைத் திரட்டுவது ஆகியவற்றில் முஸ்லிம் சமுதாயத்துக்கு இறைத்தூதர் (ஸல்)அவர்கள் முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார்கள். 'பனூ சுலைமும்' 'பனூ கத்ஃபானும்' சக்தி வாய்ந்த கூட்டங்கள். நாம் அலட்சியமாக இருந்து நேரமும் வாய்ப்பும் அளித்துவிட்டால் 'பனூ கத்ஃபான்' குழுவினர் ஆறாயிரம் வீரர்களைத் திரட்டி விடுவர் என்று கருதிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படையைத் திரட்டிட கால அவகாசமோ, வாய்ப்போ அவர்களுக்கு அளிக்கவில்லை. அக்கூட்டத்தார் தம் வீரர்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்தவுடனேயே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்று அவர்களைத் திணறடித்து விட்டார்கள். இருந்தாலும் இதனை முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறுவதும் பொருந்தாது. ஏனென்றால் 'பனூ சுலைமும்' 'பனூ கத்ஃபானும்' மதீனாவுக்கு எதிராக ஏற்கனவே பத்ரில் போரிட்டவர்கள். போர் இன்னும் முடிந்தபாடில்லை. இச்சிறு போர்களை இரண்டு தரப்பினருமே ஆக்ரமிப்பு என்றோ முன்கூட்டிய நடவடிக்கை என்றோ கூறி விட முடியாது.
இக்காலகட்டத்தில் மற்றுமொரு போர் நடவடிக்கை எடுக்கப் பட்டது. மக்காவுக்கு அருகேயுள்ள கடற்கரை நோக்கி நடத்தப்பட்ட படை அணிவகுப்புதான் அந்தப்போர். அப்போது எந்த எதிரியும் குறுக்கிடவில்லை. மக்காவின் எச்சரிக்கைகூட வெளிப்படவில்லை. அவர்களின் உணர்வைப் பரிசோதிக்கவும் தங்கள் பகுதிக்குள் நுழைந்து விட்ட எதிரிகளிடம் சவால்விடும் பலம் அவர்களிடம் உள்ளதா என்பதைக் கண்டறியவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போர் 'கஸ்வத்து பஹ்ரைன்' என அழைக்கப்படுகிறது. ஆனால் மக்காக் குறைஷிகள் வெளிவந்து மதீனாவின் படைகளை எதிர் கொள்வதில் விருப்பம் காட்டவில்லை. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இராணுவ உளவுப்படை ஒன்றை எப்போதும் தயாராக வைத்திருந்தார்கள்; அவர்கள் மக்கா பட்டாளத்தைப் பற்றிய இன்னும் அவர்களின் வணிக ஒட்டகங்கள் பற்றிய முழு விவரங்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். மதீனாவைத் தாக்குவதற்காக 'பனூ சுலைம்' கூட்டம் எடுத்த முயற்சிகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
பஹ்ரைனுக்கு மதீனாவின் படைகள் பயணித்தன. சிரியாவுக்குச் செல்லும் வணிகப் பாதை மதீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; எனவே தங்களின் வணிக ஒட்டகங்கள் அவ்வழியில் பயணித்தால் கைப்பற்றப்படும் என்று நினைத்த குறைஷிகள், ''பயணம் கடினமாக இருந்தாலும் சரி, இலகுவாக இருந்தாலும் சரி நீங்கள் புறப்படுங்கள்!''
''உங்கள் உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போராடுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.'' (அல்குர்ஆன் 9:41) அதே சமயத்தில் குறைஷிகள் தங்களின் பொருட்களைத் தம் கிட்டங்கியில் வைத்துக் கொண்டு சோம்பி இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து, சர்வதேசச் சந்தை இருக்கும் சிரியாவுக்குச் செல்ல மாற்றுப்பாதையான மெசபடோமியா வழியைத் தேர்வு செய்தனர். அது முன்பு சென்ற வழியைவிட அதிகத் தூரமுடையதாக இருந்தது; இருப்பினும் கூட அவர்கள் அதையே தேர்வு செய்தார்கள். ஏனென்றால் இப்போது குறைஷிகளுக்கு மதீனா தேசத்துப் படையை எதிர்க்கத் துணிவில்லாமல் போய்விட்டது. ஆனால் ஜைத்(ரலி) அவர்களின் வெற்றிகரமான முயற்சியால் குறைஷிகள் தேர்ந்தெடுத்த அந்த வழியும் அடைக்கப்பட்டு, குறைஷிகளின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.
இந்த அத்தியாயத்தில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ, அவரின் தளபதிகளோ எதிரிகளைச் சந்திக்க மதீனாவை விட்டும் வெளி வந்த தருணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒருமுறைகூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வரம்பு மீறவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் தம் படையோடு இறைக்கட்டளைக்கு இணங்கியே போரிடப் புறப்பட்டார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் நிகழ்ந்த முதல் போர் 'பத்ரு'ப் பெரும் போர். ஆனால் இதற்கு முன்னரே படையெடுத்துவந்த மக்காவின் சுமார் 300 வீரர்களோடு சுமார் 60 பேர் கொண்ட முஸ்லிம்கள் இரத்தச் சேதமின்றி மோதியிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் தங்களைவிடப் பன் மடங்கு பெரிய படைக்கெதிராகப் போரிட்டு அவர்களைத் தோற்கடித்து ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். எவ்வளவு சிறிய படையாக இருந்தாலும் பெரும்படையோடு வரும் எதிரிக்குப் புறமுதுகு காட்டியவர்களாக அவர்கள் ஒருபோதும் ஓடியதில்லை. அவர்களுக்கு இதில் நிலைத்திருக்கும் உறுதியை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்
