முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2009

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.


நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினாலும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.

இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர்களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான்.

அல்லாஹுத்தஆலாவின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.

இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத்தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விடும்.

அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டது.

வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமையில் நடைபெற்ற கடுமையான போராட்டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத்தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ்லானா காஸிம் நானோத்தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும், வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும், இஸ்லாமிய கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லாமியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலிருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங்கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார்கள்.

அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.

இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண்களும் வருகை தந்து நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப் பின்பற்றி போதித்து வரும் அன்பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலிருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.

இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸாவுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத்தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது, இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும்.

புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸாவின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும்.

தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.

சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ்கிறார்கள், புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரிலும் வந்தது.

மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே! மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே!! வருக!!!

ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக! ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக!! முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண்ணொளிகளே வருக வருக!!! என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம்

- மவ்லவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, மாநில மார்க்க அணிச் செயலாளர், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

வியாழன், 9 ஜூலை, 2009

த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு: மறுபரிசீலனை செய்ய முஸ்லிம் லீக்கின் த‌லைமையில் ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு முஸ்லிம் அமைப்புகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முஸ்லிம்களிடையே எழுந்துள்ள அச்ச உணர்வை போக்கவும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்லவும் ஒருமித்த கருத்தை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் 07-07-2009 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் பிரசிடெண்டில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் எச். அப்துல் பாஸித், சட்ட மன்ற முன்னாள் இந்திய தேசிய லீக் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், என். ஹாமித் பக்ரீ, கே.எம். நிஜாமுத்தீன், மில்லத் இஸ்மாயில், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில தேசிய லீக் பொதுச் செயலாளருமான திருப்பூர் அல்தாப், த.மு.மு.க. மாநிலச் செயலாளர் ஏ.எஸ். முஹம்மது ஜுனைது, த.மு.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் பி.எல்.எம். யாசின், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் அப்போலோ முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொருளாளர் எம். முஹம்மது சிக்கந்தர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச. உமர் பாருக், ஐக்கிய சமாதான அறக்கட்டளை பொறுப்பாளர் சி. அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செய்தித் தொடர்பாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி, சுன்னத் ஜமாஅத் ஆன்மீக பேரவை தலைவர் தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் எஸ். என். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர், தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம். நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையத் ரபீக் அஹமது, பேராசிரியர் ஆர்.என். இக்பால் அஹமது ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு-

  • தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.
  • தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப்பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.
  • முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.
  • நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த தி.மு.க. பாடுபடும் என்று டாக்டர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என். ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மவ்லவி ஹாமித் பக்ரீ இறைமறை ஓதினார்.

இக் கூட்டத்தில் மாநில முஸ்லிம் லீக் விவசாய அணி துணை அமைப்பாளர் திருச்சி வி.எம். பாரூக், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, செயலாளர் பூவை எம்.எஸ். முஸ்தபா, வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எச். இஸ்மாயில், மாநில முஸ்லிம் லீக் கல்வி மேம்பாட்டு துணை அமைப்பாளர் ஏ. ஷேக் மதார், யு. முஹம்மது சலீம் சித்தீக், கே.எம். ஹசன் சேக், வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. எம். ரஃபி, பூவை காதர், டி.எம்.கே. ஹாஜா நஜ்முத்தீன், திருவான்மியூர் காஜா, சுன்னத் ஐக்கிய ஜமாஅத் பேரவை கிருஷ்ணாம்பேட்டை கிளை செயலாளர் எம்.ஏ. முஹம்மது இப்ராஹீம், ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மவ்லவி சலீம் சிராஜி துஆ ஓதினார்.

Source: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி