முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 20 ஏப்ரல், 2009

குடும்பக் கட்டுப்பாடு ஒரு புரட்டு வாதம்

குடும்பக் கட்டுப்பாடு ஒரு புரட்டு வாதம்
-------------------------------------------------------------------------------- உலகம் முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு செய்யுங்கள் என்று பலவிதமான பிரச்சாரங்களை பல்வேறு செய்தி ஊடகங்கள் மூலம் ஆளும் அரசுகள் செய்து வருகின்றன. அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா? சுற்றுச் சூழல் சீர்கேடு, இட நெருக்கடி, உணவு நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களை முன் வைக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் 'நாம் இருவர், நமக்கிருவர்' என்று கூறியவர்கள், பிறகு 'நாமிருவர் நமக்கொருவர்' என்று கூறினார்கள். இப்போது 'நாமே குழந்தைகள் நமக்கேன் குழந்தைகள்' என்று புதுப் பல்லவி பாட ஆரம்பித்துள்ளார்கள். இதுபற்றி ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் திருமறைகுர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.'உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும், அது வசிக்கும் இடத்தையும், சென்று சேருமிடத்தையும் அவன் நன்கறிவான்'
மேலும், நாம் பூமியை விரித்தோம். அதில் மலைகளை நாட்டினோம். அதில் எல்லா வகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச் செய்தோம். மேலும், வாழ்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம். உங்களுக்காகவும், நீங்கள் எவற்றிற்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பிளங்களுக்காகவும் (படைத்தோம்) (அல்குர் ஆன் 15:19,20)
இவ்வசனங்களில் படைத்த இறைவன் மனிதர்களுக்கும், மற்ற அவனுடைய படைப்பினங்களுக்கும் உணவுக்கும், இதர வாழ்வியல் தேவைகளுக்கும் பொறுப்பேற்பதாக கூறுகிறான். ஆனால், மனிதர்கள் தங்களிடமுள்ள குறைமதியைப் பயன்படுத்தி குதர்க்கமான் காரணங்களைக் கொண்டு வருகிறார்கள். ஆக, இவர்கள் கொண்டு வரும் காரணங்கள் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிப்பவர்கள் மக்கள் தொகை வளர்ச்சியால் நகரங்களில் ஜனத்தொகை அதிகமாகிறது என்றும், இதனால் இட நெருக்கடி ஏற்படுகிறது என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் வாழத் தகுந்த இடங்கள் அதிகமாகவே உள்ளது. பூமியில் மொத்த நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியைக் கூட மனிதன் பயன்படுத்துவதில்லை. ஆரம்ப காலத்தில் குடிசைகளிலும் கரைந்து போகும் வீடுகளிலும் வாழ்ந்தவன் இன்று உறுதியான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிக்கின்றான். எனவே, பல ஆயிரம் ஆண்டுகள் பிறக்கும் குழற்தைகளுக்கும் குடியேறத் தேவையான காலியிடங்கள் பூமியில் உள்ளன. அந்தக் காலியிடங்கள் நிரம்பி விட்டாலும் கூட அடுக்கு மாடிக் கட்டிடங்கள் எழுப்பி குடியேற்றிவிட முடியும். எனவே, இட நெருக்கடியைக் காரணம் மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்வது கொஞ்சமும் அறிவுக்குப் பொருந்தாததாகும்.
நகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் வாகனங்கள் அதிமாகி வருகிறது. இதனால் அங்குள்ள காற்றில் ஆக்ஸிஜன் குறைவு ஏற்படுகிறது என்று இனியொரு குற்றச் சாட்டை முன் வைக்கிறார்கள். ஏற்கனவே புகை, அதனால் ஏற்படும் சுற்றுச் சூழுல் சீர்கேடுகளை குறைப்பதற்கு உரிய வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டு மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்வது எந்த வகையில் நியாயம்? மேலும், சுற்றுச் சூழல் சீர் கேடுகளைத் தடுப்பதற்கான வழி முறைகளை கண்டுபிடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? காலைக் கடிக்கும் செருப்பை மாற்றுவதை விட்டுவிட்டு, காலையே குறைக்க முயலும் செயலாகவல்லவா இருக்கிறது. கிராமப்புற மக்கள் தான்; நகர்புற வாழ்கைக்கு ஆசைப்பட்டு நகரங்களை நோக்கி வருகிறார்கள். நகர வசதிகளில் சிறிதேனும் கிராமங்களில் உருவாக்கினால், அவர்கள் ஏன் வருகிறார்கள். கிராமங்களை ஆளும் அரசுகள் புறக்ணித்ததால் வந்த விளைவே இது. கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தினால் இதைக் குறைக்க முடியும்.
மேலும், உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள். என்னவோ இவர்கள் தான் உணவளிப்பது போன்று நினைப்பு! இந்தியாவை பற்றி பாரதியார் 5 கோடி முகமுடையாள் என்று சுகந்திர காலத்தில் கவிதை பாடினார். 5 கோடி மக்கள் தொகையாக இருந்த போது வங்கதேசம் பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், இன்று அப்போதைய இந்தியாவின் பெரும்பகுதி பிரிந்த நிலையில் 100 கோடி மக்கள் தொகை பெருகி விட்டது. இன்று 2000ல் மத்திய உணவுக் கழகத்தில் வரலாறு காணாத அளவு உணவுப் பொருள் தேங்கிக் கிடக்கிறர். எந்த அளவுக்கெனில், சாதாரணமாக நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோகம் செய்வதற்கு அரிசி கோதுமை உட்பட அனைத்து தானியங்களின் மொத்த தேவை 2 கோடி டன் மட்டுமே. ஆனால், இப்போது மத்திய சேமிப்புக் கிடங்குகளில் 4 கோடி டன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 1943ல் ஏற்பட்ட வங்கதேச பஞ்சமும் கூட உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட பஞ்சம் அல்ல. வங்கதேசப் பஞ்சத்தை ஆய்வு செய்த அமர்தியா சென் (நோபல் பரிசு பெற்ற மேதை) பின்வருமாறு கூறுகிறார், பஞ்சத்திற்கு முந்தைய ஆண்டின் உணவு உற்பத்தி போலவே அந்த ஆண்டின் உணவு உற்பத்தியும் இருந்தது. எனவே, உணவு உற்பத்தியின் வீழ்ச்சி, பஞ்சத்திற்குக் காரணமில்லை. அது மனிதர்களின் போராசையால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சமே. பஞ்சத்திற்கு காரணம் பதுக்கலும், விலை உயர்வும், நிர்வாகச் செயல் திறமையின்மையும் தான். இப்படிப்பட்ட பதுக்கலும், விலை உயர்வும் இரட்டைக் குழந்;தைகள். எனவே, பதுக்கலை எல்லா அரசுகளும் முற்றிலும் ஒழிக்க முன்வர வேண்டும். இதுபற்றி இஸ்லாம் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றை பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குரியவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல் : இப்னு மாஜா
மேலும், முன்பெல்லாம் 6 மாதச் சாகுபடி முறையில் உணவு உற்பத்தி செய்யப்பட்டது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 3 மாதத்திலேயே இன்று சாகுபடி செய்யக் கூடிய நிலையைப் பார்க்கிறோம். இன்னும், ஆராய்ச்சியின் மூலம் இந்தக் கால அளவையும் குறைக்க முடியும்.
நாட்டின் பெருமளவு நிலங்கள் தரிசாக கிடக்கிறது. அவற்றைப் பயன்படுத்த எந்த வித உருப்படியான திட்டத்தையும் ஆளும் அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு தண்ணீர் பற்றாக்குறையை காரணமாகக் கூற முடியாது.
வானிலிருந்து நாம் சரியாக கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர் அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 23:18)
இவ்வசனத்தின் மூலம் நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான். மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தலாம். மழை நீரைச் சேமிப்பதற்கு ஏரி, குளம், குட்டைகளை விட சிறந்த இடம் எதுவுமில்லை. இதனால் நிலத்தடி நீர் பரவி கிணறுகளில் நீர் பெருகும். இவற்றை முறையாக விவசாயத்திற்கு பயன் படுத்தவும் முடியும். ஆனால் இந்தியாவில் ஆளும் அரசுகள் இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை.
இன்னும் ஆறுகளிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையுமில்லை. கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் கங்கை நதி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து களர் நிலங்களை விளை நிலங்களாக ஆக்கலாம். ஆனால், ஆட்சியாளர்களின் அசிரத்தையின் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இன்னும், மக்களிடையே உணவுப் பொருட்களை வீண் விரயம் செய்யும் போக்கு அதிகமாக உள்ளது. பெரும்பாலும், மேல்தட்டு வர்க்கத்தில் உணவுப் பொருட்களை வீணடிப்பது ஒரு நாகரீகமாகி வருகிறது. நடுத்தர வர்க்கமோ விருந்துகள் என்ற பெயரில், விருந்தினர்களை திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பலவித உணவுப் பதார்த்தங்களை தயார் செய்து வீண் விரயம் செய்யும் நாகரீக மயக்கத்தில் இருக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உணவுத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலையை ஏற்படுத்த முடியும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
'உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்.' (அல்குர்ஆன் 7:31)
இப்படி உணவுகளை வீணடித்து விட்டு, உணவு உற்பத்தியை பெருக்க உருப்படியான வழியிருந்தும் மக்கள் தொகையை குறைக்க 'குடும்பக்கட்டுப்பாடு செய்' என்று சொல்வது அறிவுடையவர்களுக்கு ஆகுமா?
வேலை வாய்ப்பின்மை அதிகமாகும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே வேலையில்லையா? படிக்காதவன் நாட்டுக்குச் சோறு போடுகிறான். படிச்சவன் நாட்டைக் கூறுபோடுகிறான் என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கு ஏற்ப படிக்காதவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் படித்தவனுக்கு வேலை செய்வது இழுக்காக தெரிகிறது. உடை கசங்காத (றூவைந ஊழடடயச துழடி) வேலை தேடுகிறார்கள். இன்னும், வேலைக்கு சென்றாலும், அரசியல் வாதிகளுடனும், செல்வந்தர்களுடனும் சேர்ந்து கொண்டு அளவுக்கதிகமான பொதுச் சொத்துக்களை அபகரிக்கிறார்கள். அபகரித்த பணத்தை பயன்படுத்தாமல் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்து, வீணடித்து வருகிறார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாட்டில் விவசாயத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் தராமல் ஆளும் அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றன. காவிரி – கங்கை போன்ற மிகப் பெரிய திட்டங்களின் மூலமும், விவசாய நடவடிக்கைகள் மூலமும் பெருமளவு வேரை வாய்ப்பினை உருவாக்க முடியும். நாட்டின் வளர்ச்சி வீதத்தை, அதாவது முன்னேற்றத்தைப் பேசுகிறார்கள், மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிப் பேசுவதில்லை. இந்தியாவின் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த இன்னும் திட்டங்கள் முறையாக தீட்டப்படவில்லை.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல் என்ன? பல்லாயிரம் கோடி முதலீட்டில், பெரிய பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கி பொருள்களை ஏராளமாக உற்பத்தி செய்து குவிப்பதா? இல்லை என்கிறார் அமிர்தா சென். எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மக்களாயிருப்பவர்கள் ஏழை மக்கள்தான். இவர்கள் அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான உடல் நிலை, அதன் மூலம் வேலை செய்வதற்கான அறிவுக் கூர்மையையும் உடல் வலிமையையும் ஏற்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப் பட வேண்டும். இப்படி எல்லா மக்களின் வாழ்விலும் வளர்ச்சி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்க முடியும். மக்களின் மனித சக்தியை கணக்கில் கொள்ளாமல் முதலீடுகளைப் பெருக்குவதும், தொழில் மயமாக்குவதும், பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதும் மட்டுமே நடந்தால் அது இறுதியில் படுதோல்வியிலேயே முடியும். மக்கள் பஞ்சத்திற்கும், வறுமைக்கும் ஆளாவார்கள். வேலை வாய்ப்பின்மை அதிகமாகும். இந்த மாதிரி தொழிற்சாலைகளில் முதலீடு செய்வது, உற்பத்தியை பெருக்குவது மட்டுமே அடிப்படையாக கொண்ட சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றிய மெக்ஸிகோ, இந்தோனேசியா போன்ற நாடுகள் பெரும் தோல்வியைக் கண்டன. எனNவு, ஆளும் அரசுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கான உளப்பூர்வமான நடவடிக்கைகளை முறையாக எடுக்காமல் வெளிநாட்டினருக்கு அன்னிய முதலீடு என்று அடகு வைப்பதிலேயே குறியாக இருப்பவர்கள் மக்கள் தொகையை குறைக்கச் சொல்வது என்ன நியாயம்?
இன்னும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை இதை நிர்பந்தமான சூழ்நிலையிலேயே தவிர இதை ஆதரிக்க முடியாது.
நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் அல்லாஹ்வின் மீது சரியான முறையில் நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்திருங்கள். அவன் உங்களுக்கு உணவளிப்பான். குருவிகளுக்கு உணவளிப்பது போல்! அவை காலை நேரத்தில் உணவு தேடிய வண்ணம் தம் கூடுகளை விட்டுப் புறப்படுகின்றன. அப்போது அவற்றின் வயிறுகள் மெலிந்து காலியாக இருக்கின்றன. மாலையில் தம் கூடுகளுக்கு திரும்பிவரும்போது அவற்றின் வயிறுகள் நிரம்பியிருக்கின்றன.
அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி) நூல் : திர்மிதீ
எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் சொல்லும் காரணங்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன். நம் அனைவர் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி