முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 3 செப்டம்பர், 2009

பதினைந்து வருடத்தின் வெற்றியே பத்ர்!

பத்ர் என்றவுடனே 313 நிராயுதபாணிகள் பலம் கொண்ட 1000 இராணுவத் துருப்புக்களை வெற்றிவாகை சூடிய வீர வரலாறு தான் நினைவுக்கு வருகிறது. முஸ்லிம்கள் பத்ருப் போரைப் பார்க்கும் ஒரு மகத்துவமான பார்வை இது. இது தவறல்ல. எனினும் பத்ரோடு பார்வையை நிறுத்தி விடாமல் அதற்கு முற்பட்ட பதினைந்து வருடங்களையும் சேர்த்துப் பார்த்தால் வெற்றியின் இரகசியங்கள் எங்கே இருக்கின்றன என்பதனை நன்கு புரிந்து கொள்ளலாம். பத்ரைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத பார்வை அது.

பத்ரை ஏன் இவ்வாறு நோக்க வேண்டுமெனின் பலருக்கு பத்ரின் வெற்றியிலிருக்கும் கவர்ச்சி, அதுவரை நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் வெற்றிக்காக சமைத்து வந்த பாதையில் இல்லை. எனவே பாதை சமைக்காமலே வெற்றி பெறலாம் என்று பலர் கனவு காண்கிறார்கள். கனவு இல்லாதவர்களைவிட இவர்கள் எவ்வளவு மேல்.. என்றாலும், வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை என்ற பாடத்தை நாம் படிக்க வேண்டும். வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை. ஆனால் வரவழைக்கப்படலாம். நபிகளாரும் நபித்தோழர்களும் எடுத்துக் கொண்ட பதினைந்து வருட முயற்சியின் பயனாகவே பத்ர் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது தானகவும் வந்து விடவில்லை.

பத்ர் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். மலக்குகளும் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டார்கள். எதிரிகளை துவம்சம் செய்தார்கள். பத்ரில் முஸ்லிம்களுக்கு உதவி செய்த அல்லாஹ்வும், முஸ்லிம்களோடினைந்து போரிட்ட மலக்குகளும் அதற்கு முந்திய பதினைந்து வருடங்களில் இல்லாதிருக்கவில்லை. அவ்வாறாயின், அதுவரை அல்லாஹ்வின் உதவி ஏன் முஸ்லிம்களுக்கு வராமலிருந்தது? பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பத்ரில் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவக் காரணமென்ன?

ஒவ்வொன்றும் அவனிடம் ஒரு திட்டத்தின்படியே இயங்குகின்றது. அல்லாஹ்வின் படைப்பு, பராமரிப்பு பாதுகாப்பு, வழிகாட்டல், வழிதவறச் செய்தல், தீர்ப்பு வழங்குதல், தண்டித்தல் யாவும் சீரிய திட்டத்துக்குட்பட்டவைகளாகவே இருக்கின்றன. திட்டங்களைத் தீட்டி செயற்பட வேண்டிய அவசியம் இல்லாதிருந்த போதும் அல்லாஹ் ஒரு திட்டத்தினூடாகவே செயலாற்றுகின்றான். தன்னை மனிதர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பதும் அத்திட்டத்தினூடாகவே.

அவன் வானங்களையும் பூமியையும் ஓர் அழகான திட்டமிடலின் கீழ் படைத்து தனது வல்லமையை பறைசாற்றினான்.அதன் மூலம் அவன் தன்னை மனிதர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டான். அதுபோல மற்றுமோர் அழகான திட்டத்தின் கீழ் அந்த மனித சமுதாயத்தை வழி நடத்துகிறான். அதன் மூலம் இந்த மனிதர்களுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.

அந்த திட்டத்தின் ஒரு கட்டமே பத்ர்! பத்ர் ஒரு தற்செயலான நிகழ்வல்ல, எதிர்பாராமல் நடந்த வெற்றியுமல்ல. இன்று வரை உலகம் அதிசயிக்கும் ஒரு மகத்தான திட்டத்தின் வெற்றியே பத்ர்!

பத்ர், அல்லாஹ்வின் தூதர் மதீனாவில் காலடி எடுத்து வைத்த இரண்டாவது வருடத்தின் மிகப் பாரிய நிகழ்வாகும். அதற்கு சற்றேறக் குறைய பத்து வருடங்களுக்கு முன் அண்ணலார் மக்காவில் இருக்கின்ற வேளையில், உரோமர்களுக்கும் பாரசீகர்களுக்குமிடையே ஒரு யுத்தம் ஏற்படுகிறது. உரோமர்கள் அந்த யுத்தம் ஏற்படுகிறது. உரோமர்கள் அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்படுகிறார்கள். வேதத்தை உடையவர்களான உரோமர்களின் தோல்வி அண்ணலாரின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் அண்ணலாரைப் பார்த்துக் கூறுகிறார்கள் :

முஹம்மதே எமக்கும் உமக்குமிடையில் ஒரு போர் ஏற்படுமாயின் நிச்சயமாக நாங்கள் உம்மைத் தோற்கடிப்போம். பாரசீகர்கள் வேதத்தையுடைய ரோமர்கள் தோற்கடித்ததைப் போல..

எதிரிகளின் இந்த இறுமாப்புக்கு அல்லாஹ் பதில் கூறுகிறான் : "அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்." (சூரா அர்ரூம் : 1-5)

இந்த முன்னறிவிப்பின் பத்தாவது வருடம்.. ஆம்! பத்ரில் முஸ்லிம்கள் எதிரிகளை வெற்றி கொள்கிறார்கள். முஸ்லிம்கள் மகிழ்வுறுகிறார்கள். முஷ்ரிக்குகள் இரு தரப்பிலும் மீளாத்துயருக்கு ஆளாகிறார்கள். திட்டம் நிறைவேறுகிறது. சத்தியம் வெற்றியீட்டுகிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு வெற்றிக்கு கட்டியங்கூற, அதன் திட்டக் கருத்தாவினால் தான் முடியும். உலகில் இரு வெவ்வேறு நிகழ்வுகளை இணைத்து, முன்னறிவிப்புச் செய்யும் ஆற்றல், இந்த உலகை முழுமையாக தனது திட்டத்தில் நிருவகிப்பவனுக்கு மட்டுமே இருக்க முடியும்.

இந்த உலகம், மனித வாழ்வு அனைத்தும் ஒரு நுட்பமான திட்டத்தின் கீழ் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது இந்த உலகத்தையும் மனித வாழ்வையும் படைத்தவனின் திட்டமாகும். இந்த திட்டத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையின் வெறும் நிகழ்வுகளை மட்டுமே கண்டு கொள்ள முடியும்.அதன் விளைவாக அல்லாஹ்வையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பத்ர் இந்த உண்மையை உணர்த்தும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். 313 முஸ்லிம்களையும் 1000 முஷ்ரிக்குகளையும் அல்லாஹ் உதவிக்கு அனுப்பி வைத்த மலக்குகளையும் மட்டும் வைத்து பத்ரைப் பார்ப்போருக்கு அது ஓர் அதிசய நிகழ்வேயன்றி வேறில்லை. இவர்களது பார்வையில் பத்ர் மூஸா (அலை) அவர்களது தடியை அல்லது ஸாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகத்தை ஒத்ததாகும். இவற்றைப் பார்த்து அல்லாஹ் ஆகட்டும் என்று கூறுவான். இவை ஆகிவிடும். எப்படி ஆகியது என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியம். எங்களுக்குத் தெரியாது.

ஏனெனில் இத்தகைய நிகழ்வுகள் ஒரு திட்டத்துக்கு உட்பட்டவைகள் அல்ல. ஒரு சூலிலிருந்து பத்து மாதங்களாக வளர்ச்சியடையும் கரு ஒட்டகையாக உருவெடுப்பது அழகியதொரு திட்டம். கற் பாறைக்குள்ளிலிருந்து சாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகம் வெளிப்படுவது அதிசயம்.

பத்ர் ஓர் அதியசம் அல்ல. அது நிதர்சனம். அது ஆகட்டும் என்ற வார்த்தையால் ஆக்கப்பட்டது அல்ல. அந்த வார்த்தையின் சொந்தக் காரனால் வழிநடாத்தப்பட்ட அழகியதொரு திட்டம் அற்புதம் மீண்டும் நிகழ்வதில்லை. ஆனால் திட்டம் மீண்டும் அமுல் செய்யப்படலாம். பத்ரை அற்புதமாகப் பார்ப்பவர்கள் அதிசயத்து விட்டுப் போவார்கள். அழகியதொரு திட்டமாகக் காண்பவர்கள் அதனை மீண்டும் செயற்படுத்த முயல்வார்கள். பத்ர் முகட்டைப் பிளந்து கொண்டு வந்து கண்ணெதிரே நின்ற அவதாரமல்ல. பதினைந்து வருடங்களாக அல்லாஹ்வின் தூதரும் அன்னாரின் தோழர்களும் ஓயாது ஓடி ஒருங்கே அடைந்து கொண்ட வெற்றிக் கப்பமாகும். நாமும் ஓடினால் அந்த வெற்றிக் கம்பத்தை அடைவதொன்றும் சிரமமானதல்ல. முதலில் ஓடுவதற்கு பாதை வேண்டும். ஓட வேண்டிய இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். நாம் தற்போது ஓடுகின்ற பாதையையும் மாற்றியமைக்க வேண்டும். "நீங்கள் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்". (18:26)

பத்ர் 15 வருட வரலாற்றின் ஒரு மைல்கல் என்பதைப் பார்த்தேர். அந்த வரலாறு இதோ!

கொலை, கொள்ளை, பெண் அடிமைத்துவம், மது, சூது, விபச்சாரம், வறுமை, கோத்திரப் பூசல்கள், அடிமை வியாபாரம், சிசுக் கொலை, பிரபுத்துவம், பொருளாதார சீர்கேடுகள், வழிப்பறிக் கொள்ளையும் மரண அச்சுறுத்தலும் நிறைந்த சூழல் என்று அழுகிப் போயிருந்த ஒரு சமூகத்தில் நபி (ஸல்) அவர்களின் வருகை அமைகிறது. அல்லாஹ்வின் திட்டமும் ஆரம்பமாகிறது.
அந்தத் திட்டத்தின் முதல் கட்டம், முதல் நாற்பது வருடங்களாகும். இந்த காலத்தில் முஹம்மத் என்னும் மனிதர் உருவாக்கப்படுகிறார்.

நபிமார்களைத் தவிர உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், சமுதாய ஆரம்பகால் வாழ்க்கை சமுதாயச் சாக்கடைகளின் அசுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு முற்றிலும் மாற்றமாக முழுவதுமே அசுத்தமான ஒரு சூழலில் நபி (ஸல்) அவர்கள் வளர்கிறார்கள். ஆனால் அந்த அசுத்தங்களின் தாக்கங்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஒரு நோக்கமும் மாற்றமான திட்டமும் இருந்திருந்தால் ஒரு அனாதையின் வாழ்வு இவ்வளவு தூரம் நுட்பமாக பாதுகாக்கப்பட்டிருக்க முடியாது.

எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் : ஒரு திருமண வீட்டில் நடனமும் ஆடல் பாடல்களும் இடம்பெறுகின்றன. சிறுவர் சிறுமியர் விநோதம் காண அங்கே குழுமியிருந்தார்கள். நபிகளாரும் அப்போது ஒரு சிறுவர். அவரது கால்களும் அந்த இடத்தை நோக்கி நகர்கின்றன. என்ன ஆச்சரியம்! அந்த வீடு நெருங்குவதற்கு முன்பாக அவர்களை ஒரு மயக்கம் தழுவுகிறது. விழுந்து விடுகிறார்கள். மயக்கம் தெளிந்து எழுந்த போது அடுத்த நாள் பொழுது விடிந்திருக்கிறது. களைகட்டியிருந்த திருமண வீடு உறங்கிப் போயிருக்கிறது.
அண்ணலார் (ஸல்) அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே தீய செயல்களை வெறுத்தொதுக்கி வந்தார்கள். அவற்றின்பால் கவரப்பட்ட ஒரு சில வேளைகளில் அல்லாஹ் அவர்களைத் தடுத்துமிருக்கிறான். இது இத்திட்டத்தின் முதல் கட்டம்.

அடுத்த கட்டமாக அண்ணலாருக்கு அன்னாரின் நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் வழங்கப்படுகிறது. ஒரு பாரிய பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. அல்லாஹ் தனது திட்டத்தின்பால் அவர்களை வழிநடாத்துகிறான். "(நபியே!) உம்மை இலகுவான (இம்மார்க்கத்)தின்பால் நாம் இலகுவாக வழி நடாத்துவோம்".

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திட்டத்தை அமுல் செய்யும் பணியில் இறங்கினார்கள். அதன் முதற்கட்டமாக வாழ்க்கை பற்றி ஒரு தெளிவான சிந்தனையை முன் வைத்தார்கள். அந்த சிந்தனையின் சுருக்கம் இது தான் :

மனித வாழ்க்கைக்கு ஒரு துவக்கம் இருக்கிறது. ஆனால் முடிவு இல்லை. மனித வாழ்க்கை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமே உலக வாழ்க்கை. இது ஒரு தேர்வுக்கான கட்டமாகும். வாழ்வின் அடுத்த கட்டத்திற்காக இங்கு மனிதர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அந்த தெளிவு அவ்வளவு சுலபமானதல்ல.

"இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு". (3:178-179)

வாழ்க்கை பற்றிய இந்த சிந்தனையை அறிமுகம் செய்து, அதை மனித உள்ளங்களில் ஆழப்பதித்து, அந்த சிந்தனையை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் செயற்படுத்திக் காட்டுவதற்காக மதீனாவில் ஒரு களத்தையும் அமைத்த போது இந்தக் களத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அந்த அச்சுறுத்தலை எதிர் கொள்ள எத்தனித்த வேளையிலே பத்ர் இடம் பெறுகிறது.

பத்ரை நோக்கிய பாதை இதுவே! முஸ்லிம்களும் இந்த சிந்தனைக்கு வாழ்வளிக்க புறப்படுவார்களா? பத்ரை வெறும் நிகழ்வாகப் பார்க்காமல் அதன் பின்னால் உள்ள திட்டத்தைப் புரிந்து கொண்டவர்களே அதற்கு செயல்வடிவம் கொடுக்கப் புறப்படலாம்.

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி